Saturday, 26 July 2014

கற்றுக்கொண்டால் குற்றமில்லை

மகளிடமிருந்து வந்த அழைப்பை எடுத்ததும் இனிமே நான் உங்க கூட பேச மாட்டேன் டாடி என்றாள். சற்றே பதறிப்போய் ஏம்மா? என்று கேட்டேன். எனக்கு எக்ஸாம் நடந்துக்கிட்டு இருக்குன்னு உங்களுக்கு தெரியும். என்னைக்காவது எனக்கு ஒரு விஷ் (WISH) பண்ணீங்களா? என்று கேட்டாள்.

அதான் நீ உனக்கு எக்ஸாம்னு சொன்ன முதல் நாளே விஷ் சொன்னனே? என்றேன்.

அதற்கு அவள் அது அன்னைக்கு எழுதப் போன எக்ஸாமுக்கு மட்டும் தானேஒவ்வொரு நாளும் வேற, வேற எக்ஸாம் நடக்குது. அதுனால நீங்க தினமும் காலையில எக்ஸாமுக்கு போறதுக்கு முன்னாடி எனக்கு விஷ் சொல்லி இருக்கனும்ல? என்று கேட்டாள்.

வழக்கம்போல அந்த வேலை, இந்தவேலை என சில மொக்கை காரணங்களைச் சொல்லி சமாளிக்க முயன்றேன். அதற்கு அவள் விஷ் பண்ணுவதற்கு ஒரு செகண்ட் ஆகுமா? இன்னிக்கு எனக்கு கடைசி எக்ஸாம். அதுக்கும் கூட நீங்க இன்னும் விஷ் பண்ணவில்லை. நானா கேட்க வேண்டி இருக்கு என்றாள்.

ஒரு வழியாக வாழ்த்துச்  சொல்லி சமாதானம் சொன்னாலும் குழந்தைகளிடம் கற்றுக்கொள்ள வேண்டிய விசயங்கள் இன்னும் தழும்பியபடியே இருப்பதாகவே தோன்றியது. மகளின் இந்த காலைநேர உரையாடல்கற்றுக்கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை. கற்றுக்கொள்ளவாது செய்என என்னிடம் சொல்லாமல் சொல்வது போலிருந்தது.