ஏழு மணிக்கு தான் எழுந்திருக்கிறான்.
ஹோம் ஒர்க் ஒழுங்கா பண்ணமாட்டேங்கிறான்.
ஸ்கூல் வேனில் சீட்ல உட்காரம அங்க, இங்கன்னு ஓடிகிட்டிருக்கான்.
பக்கத்துல போய் உட்கார்ந்து டி.வி. பார்க்கிறான்.
பெரியப்பா கடையில போய் காசு கொடுக்காமல் ஸ்நாக்ஸ் வாங்கிட்டு வர்றான்.
உன்னைய மாதிரி உன் தம்பி இல்லைன்னு மிஸ் சொல்ற படி நடந்துக்கிறான்.
யூனிஃபார்ம் தச்சு வந்துடுச்சு. ஆனாலும் அதை போடாம கலர் ட்ரெஸ் போட்டுக்கிட்டு ஸ்கூலுக்கு வர்றான்.
சாப்பாட்டுல கொழம்பு ஊத்தி சாப்பிடமாட்டேங்கிறான்.
இப்படி மிகப்பெரிய குற்றப்பட்டியலை தன் தம்பி மீது மகள் வாசித்தாள். அம்மா எதுவும் சொல்லலையா? என்று கேட்டேன். அதற்கு அம்மா தினமும் தான் சொல்றாங்க டாடி…..கேட்க மாட்டேங்கிறான் என்றாள். அப்ப என்ன தான் செய்யலாம்? என்றேன். ஆம்பளைப் பயலை அடிச்சி வளர்க்கனும் டாடி…….அப்பதான் சொல் பேச்சு கேட்பான். வாயால சொன்னாலாம் கேட்கமாட்டான் என்றாள். கேட்ட ஒரு கணம் பகீரென்றாகி விட்டது. யாரும்மா ஆம்பளை பிள்ளைகளை அடிச்சி வளர்க்கனும்னு சொன்னான்னு கேட்டேன். எல்லோரும் அப்படி தான் டாடி சொல்றாங்க. அதுனால நீங்க அம்மாகிட்ட சொல்லி சேட்டை பண்ணும் போதெல்லாம் கம்பெடுத்து அவனை அடிக்க சொல்லுங்க என்றாள். அப்படியெல்லாம் செய்யக்கூடாது அது தப்பான வழிமுறை என சில விசயங்களை அவளுக்கு சொல்லி புரிய வைக்க முயற்சித்தேன். ஆனாலும், தப்பான வழிமுறைகளை எல்லாம் தவறாமல் அடுத்த தலைமுறைக்கு கடத்தி விடுகிறோமோ? என்ற அச்சமும், உறுத்தலும் இன்னும் இருக்கவே செய்கிறது