Monday, 21 July 2014

இலக்கே வாழ்க்கையின் விளக்கு!

நாம் ஒவ்வொருவருமே மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என விரும்புகிறோம். வெற்றியாளராக வலம் வர ஆசைப்படுகிறோம். இவ்விரண்டுமோ அல்லது இவ்விரண்டில் ஒன்றோ நிகழ வேண்டுமானால் அதற்குஇலக்கு என்ற ஒன்று அவசியம் வேண்டும். அந்த ஒன்றை நோக்கி செயல்படுகின்ற போது தான் வெற்று வாழ்க்கை வெற்றி வாழ்க்கையாக மாறுகின்றது. “இலட்சியத்துக்காக பாடுபடாத வாழ்க்கை ஒரு வாழ்க்கை அல்ல என்கிறார் மாஜினி.

இலக்கு குறித்து நம்மில் பலருக்கும் ஒரு தெளிவு இருப்பதில்லை. அது ஏதோ தனிப்பட்டவர்களுக்கும், ஆசீர்வதிக்கப்பட்டவர்களுக்கும் உரியதாய் எண்ணிக் கொள்கின்றனர். விண்ணில் ஏவுகணை ஏவுவதும், புதிய கண்டுபிடிப்புகளை செய்வதும், தன் ஆற்றலுக்கும், திறமைக்கும் மீறிய விசயங்களைச் செய்து காட்டுவதும் மட்டுமே இலக்கு என வரையறையற்ற இலக்குகளை குறிப்பிட்ட வரையறைகளுக்குள் வைக்கப் பழகி விட்டதன் விளைவாக நாம் வாழும் வாழ்க்கையை மிகச் சாதாரணமானதாகவும், மகிழ்ச்சியற்றதாகவும் ஆக்கிக் கொள்கின்றோம்.

எல்லைகளற்ற பரப்பில் நமக்கு நாமே, உங்களுக்கு நீங்களே உருவாக்கிக் கொள்கின்ற எல்லை தான் இலக்கு! ஓட்டப்பந்தயத்தில் ஓடுகின்ற ஒருவனுக்கு எப்படி  ஒரு எல்லைக்கோடு அவசியமோ அதுபோல வாழ்க்கை என்ற ஓட்டத்தில் வெற்றி, மகிழ்ச்சி, நிறைவு இவைகளைப் பெறுவதற்கு ஒரு எல்லைக்கோடு அவசியம்

உங்களின் ஒட்டு மொத்த செயல்பாட்டையும் இலக்கை நோக்கியே வைத்திருக்கப் பழகுங்கள். இலக்கை நிர்ணயிக்கும் முன் மற்றவர்களிடமிருந்து யோசனைகளைப் பெறுங்கள். ஆனால், முடிவை நீங்கள் மட்டுமே எடுங்கள். ஆழம் தெரியாமல் காலை விட்டுட்டேன்….எனக்கு அப்பவே தோணுச்சு…..அவன் சொன்னான்னு செஞ்சது தான் நான் செய்த முட்டாள் தனம்…..இப்படி சிலர் சொல்லக் கேட்டிருப்பீர்கள் அல்லது நீங்களே கூட புலம்பியிருப்பீர்கள். இப்படியான புலம்பல்களுக்கு அடுத்தவர்களின் யோசனைகளைக் கேட்டு உருவாக்கிக் கொண்ட தெளிவற்ற இலக்குகள் தான் காரணம்! நீங்கள் உருவாக்கிக் கொண்ட இலக்கை நோக்கி செயல்படப்போவது நீங்கள் தான் என்பதை எப்பொழுதும் நினைவில் கொள்ளுங்கள்.

பிரபல அமெரிக்க தன்னம்பிக்கை எழுத்தாளர் நெப்போலியன் ஹில் ஒரு கூட்டத்தில் வெற்றிக்காக ஒரு மனிதன் முழு நம்பிக்கையோடு காத்துக்  கொண்டிருந்தால்  அது அவனுக்கு கட்டாயம் கிடைக்கும் என்றார். உடனே  கூட்டத்திலிருந்து  எழுந்த  ஒரு இளைஞன், “நான் இருபது வருடமாக காத்துக் கொண்டிருக்கிறேன். எனக்கு எதுவுமே கிடைக்கவில்லையேஎன்றான்.

அதற்கு நெப்போலியன் ஹில், “அப்படி கிடைக்காததற்கு காரணம் நீங்கள் தான். எனக்கு எதுவுமே கிடைக்க வில்லை என்று கூறுகிறீர்கள். எது வேண்டும்? எதற்காக காத்திருக்கிறீர்கள்? என்று தெரியாமலே இருபது வருடம் காத்திருந்து விட்டு வெற்றி கிடைக்கவில்லை என்று முடிவு செய்து விட்டீர்கள். மாறாக, என்ன வேண்டும்? என ஒரு தீர்க்கமான இலட்சியத்தை வகுத்துக் கொண்டு அதை நோக்கி செயல்பட்டுக் கொண்டே அதன் முடிவுக்காக காத்திருப்பீர்கள் என்றால் வெற்றி நிச்சயம் கிடைக்கும்என்றார். தீர்க்கமான, தெளிவான இலக்கினை நீங்களும் உருவாக்கிக் கொண்டு செயல்படுங்கள். அது தானாகவே உங்களின் வாழ்வை மாற்றியமைப்பதற்கான வாசல்களை திறக்க ஆரம்பிக்கும்.

உங்களுடைய இலக்கினை உருவாக்கும் போது கீழ்கண்ட விசயங்களையும் கவனத்தில் கொள்ளுங்கள். அது உங்களின் இலக்கு வெற்றி இலக்காக அமைவதற்கான சாத்தியங்களை அதிகப்படுத்தி தரும்

1. உங்களுக்கு விருப்பமானதில் இருக்க வேண்டும் 

நீங்கள் இப்பொழுது இருக்கின்ற துறையிலேயே அடைய வேண்டிய இலக்கை நிர்ணயித்துக் கொள்வது, தேவைகளுக்காக ஒரு துறையில் இருந்து கொண்டு வேறு ஒன்றில் தன்னுடைய இலக்கை நிர்ணயம் செய்து கொள்வது என இலக்கை நிர்ணயிப்பதில் இருவகை உண்டு. இதில் எது ஒன்றின் வழி நீங்கள் தேர்ந்தெடுக்கும் இலக்கு எப்பொழுதும் உங்களின் விருப்பம் சார்ந்ததாக மட்டுமே இருக்க வேண்டும். அப்படியிருந்தால் மட்டும் தான் அதன் பொருட்டு செய்கின்ற முயற்சிகளில் ஏற்படக்கூடிய மனச்சோர்வு, தடைகள், ஆகியவைகளைக் கடந்து வருதல் எளிதாக இருக்கும்

2. உங்களின் ஆற்றலுக்கும், திறன்களுக்கும் உட்பட்டு இருக்க வேண்டும் 

எனக்கு விருப்பமான துறையில் என்னுடைய இலக்கை நிர்ணயிக்கப்போகின்றேன் என சொல்லிக் கொண்டு ஒரு அரசாங்கமோ, நிதி வளங்கள் நிறைந்த மிகப் பெரிய நிறுவனங்களோ முதலீடு செய்து எட்டக் கூடியவைகளை இலக்காக கொள்ளக்கூடாது. உங்களின் சக்தியை மீறிய இலக்கு அயர்ச்சியை உண்டாக்கி பாதியிலேயே முடங்கிப் போகச் செய்து விடும். “அகலக்கால் வைக்காதேஎன்ற வாசகம் தொழில் துறைக்கு மட்டுமல்ல இலக்கை நிர்ணயித்தலுக்கும் பொருந்தும்

3. தெளிவாக, மிகச் சரியான வரையறைகளுடன் இருக்க  வேண்டும் 

மிகச் சரியாக வரையறுத்துக் கட்டப்பட்ட அறை போல உங்களின் இலக்கும் வரையறைகளுடன் இருக்க வேண்டும். பொத்தம் பொதுவாய் நான் ஒரு விளையாட்டு வீரனாக வேண்டும் என இலக்கு கொண்டிருப்பீர்கள் என்றால் எந்த விளையாட்டில் வீரனாக வரப் போகிறீர்கள்? என்ற கேள்வியும் கூடவே எழும். இந்த கேள்விக்கான பதிலை முடிவு செய்தால் மட்டுமே அதன் பொருட்டு செயலை உங்களால் தொடங்க முடியும். மாறாகநான் ஒரு கூடைப்பந்து விளையாட்டு வீரனாக வர வேண்டும் என இலக்கு கொண்டிருப்பீர்கள் என்றால் அங்கு வேறு கேள்விகளே எழ வாய்ப்பில்லை. நேரடியாக செயல்களை துவக்கி விட முடியும். இந்த வித்தியாசத்தை மனதில் கொண்டு செயலுக்கு முந்தைய நிலையில் உங்களின் இலக்கை நிறுத்துங்கள். ”இலக்கை நோக்கி ஏவுகணையைப் போல் நில்லுங்கள்என்கிறார் காப்மேயர். ஆயத்தமாகிக் கொண்டிருப்பதை விட ஆயத்தமாக நில்லுங்கள்.

4. சவாலானதாகவும், சாத்தியமாகக்கூடிய அளவிலும் இருக்க வேண்டும் 

எல்லோராலும் மிகச் சாதாரணமாக எட்டப்படக்கூடியவைகள் ஒரு போதும் வெற்றி இலக்காக இருக்க முடியாது. மிகச் சிறந்த இலக்கு என்பது நிறைய மெனக்கெடல்களால் நிரப்பப்படக்கூடியதாகவும், அதிகமான எதிர்ப்புகள், தடைகள் ஆகியவைகளைக் கடந்து அதீத நம்பிக்கையுடன் கூடிய செயல்களால் எட்டப்படக்கூடியதாகவும் தான் இருக்கும். இப்படியான சவால்களால் சாத்தியப் படுத்தக்கூடிய இலக்கை நீங்கள் நிர்ணயிக்கும் போது அது அடைவதற்கான சாத்தியங்களுடனும் இருக்க வேண்டும். ”இலட்சியம் நடைமுறைக்கு சாத்தியமான நிலையிலும், அன்றாட வாழ்க்கைக்கு உகந்ததாகவும் இருக்க வேண்டும் என வரையறை செய்கிறார்ரூசோ.

மண்ணால் கயிறு திரிப்பது, வானை வில்லாய் வளைப்பது என்பன போன்ற விசயங்கள் சவாலானவை தான். ஆனால் சாத்தியமா? இப்படி சத்திய சாத்தியமற்ற இலக்குகள் ஒரு நாளும் உங்களை ஜெயிக்க வைக்காது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

5. அடையும் வழிமுறைகளைக் கொண்டதாக இருக்க வேண்டும் 

எனக்கென ஒரு இலக்கு இருக்கிறது. அனால் அதை அடைவதற்கான சாத்தியமோ, திட்டமோ துளியுமில்லை என நீங்கள் எவரிடமாவது சொன்னால் அவர் உங்களை ஒரு அப் நார்மல் பெர்சனாக பார்க்க ஆரம்பித்து விடுவார். இலக்கை நோக்கிய செயலை ஆரம்பிப்பதற்கு முன்பே அதை அடைந்து விட்டதற்கான மனநிலையை, உற்சாகத்தை தரக்கூடிய திட்டமிடல் என்ற வழிமுறை இல்லாமல் உங்களால் ஓரடி கூட முன்னே நகர முடியாது. மிகப்பெரிய இலக்குகள் இத்தகைய வழிமுறைகளினால் தான் சாத்தியமாக்கப்பட்டிருக்கிறது. சாத்தியமாக்கப்பட்டு வருகிறது.

செயலை ஆரம்பித்த பின் திட்டமிட்ட வழிமுறைகளை மாற்றலாம். அது தவறில்லை. நால், மாறாத இலக்கை நோக்கி மாற்றிக் கொள்ளக்கூடிய வகையிலான திட்டமிடல்கள் இல்லாமலிருப்பது உங்களுடைய செயல் வேகத்தை மட்டுப் படுத்திவிடும். அதனால் தான் திட்டமிடுதல் பற்றி சொல்லும் பீட்டர்டிரக்கர்திட்டமிடுதல் என்பது எதிர்காலத் தீர்மானங்களைப் பற்றியதல்ல. ஆனால், நிகழ்காலத் தீர்மானங்களின் எதிர்காலம் பற்றியதுஎன்கிறார்.

6. விவரித்து எழுத, பேசக்கூடியதாக இருக்க வேண்டும் 

 
உங்களின் இலக்கு குறித்த விபரங்களையும், அது சார்ந்த திட்டங்களையும் நீங்கள் யாருக்கும் விவரித்து சொல்ல வேண்டியதில்லை. ஆனால், உங்களுக்கு நீங்களே அதை விவரித்து சொல்லிக் கொள்ள் வேண்டியது அவசியம். அது வெற்றிக்கான அம்சங்களுள் ஒன்று. இதை வாழ்வியல் மேம்பாட்டு பயிற்சி வகுப்புகளில்மனப்படங்களாக இலக்கை பார்த்தல்என்ற பெயரில் கற்றுத் தருகின்றனர். உங்களுடைய  இலக்கை ஒரு பேப்பரில் எழுதுங்கள். அதன் மூலம் நீங்கள் எதிர்பார்க்கக்கூடிய விசயங்கள், அந்த இலக்கை எட்டிய பின் நிகழப்போகும் விளைவுகளால் உங்களின் வாழ்வில் நிகழும் மாற்றங்கள் போன்ற நேர்மறை நிகழ்வுகளை எல்லாம் வரிசைப்படுத்தி அவைகளை ஒளிப்படங்களாக மாற்றி தொடர்ந்து அகமனதின் வழியாக பார்த்து வாருங்கள். அதுவே காலப்போக்கில் காட்சி படிமங்களாக மாறி உங்களின் அன்றாட செயல் ஒவ்வொன்றையும் இலக்கு நோக்கி நகர வைத்து விடும்

 7. குறிப்பிட்ட கால அளவைக் கொண்டிருக்க வேண்டும் 

வாழ்நாள் முழுக்க இலக்கு நோக்கியே செயல் பட்டுக் கொண்டிருப்பீர்களேயானால் ஒருநாளும் அதன் மூலம் கிடைக்கும் மகிழ்வை உங்களால் அனுபவிக்க முடியாது. மாற்றங்களைப் பெறவும், சந்தோசாங்களைக் கொண்டாடவும் முடியாது. மாறாக, உங்களின் மீதே உங்களுக்கு வெறுப்பை உண்டாக்கும் ஒரு காரணியாக அந்த இலக்கு மாற ஆரம்பித்து விடும். எங்க தாத்தா காலத்தில் இருந்து அந்த இடத்துல ஒரு கடையை கட்ட நினைச்சுக்கிட்டு தான் இருக்கோம். ஆனால், இன்னும் நடந்தபாடில்லை என்பன போன்ற முயலாமையினால் வரும் ஆதங்கங்கள் குறிப்பிட்ட கால அளவைக் கொண்டிராத இலக்குகளை எட்டமுடியாத போது வருபவைகள்இதையே எங்க தாத்தா காலத்துல கட்ட முடியல. எங்க அப்பா காலத்துல கட்டியே ஆகணும்னு முடிவு செய்து கடையை அந்த இடத்துல கட்டி முடித்து விட்டேன் என சொல்லிப் பாருங்கள். அதில் இருக்கும்  சந்தோசமே அலாதியாக இருக்கும். வரிகளில் உணர்ந்த இந்த சந்தோசத்தை வாழ்க்கையிலும் அனுபவிக்க நீங்கள் விரும்பினால் உங்களின் இலக்கை காலவரையறைகளுடன் கூடியதாக உருவாக்குங்கள்.

இலக்கினை தீர்மானிக்கும் போதே அதை எட்டுவதற்கான கால அளவையும் கணக்கிட்டு நிர்ணயம் செய்து கொள்ளுங்கள். அப்பொழுது தான் உங்களின் முன்னேற்றத்தை மதிப்பீடு செய்து கொண்டும், தேவைக்கேற்ப மாற்றங்களைச் செய்து கொண்டும் செயல் படமுடியும்.

இந்த ஏழு  நிலைகளின்  வழி  வெற்றிக்கான,  மகிழ்ச்சிக்கான  உங்களின் இலக்கை அமையுங்கள்.  அது மகிழ்ச்சியோடு  கூடிய வெற்றிக்கான  உங்களின் முதல்  அகல் விளக்கை ஏற்றி வைக்கும்.

நன்றிநிலாச்சாரல்