”காரணம் சொல்பவர்கள் காரியம் செய்வதில்லை” என்பது ஒரு வழக்குச்சொல் மட்டுமல்ல பொருள் பொதிந்த வாழ்வியல் சொல்லும் கூட! பள்ளிப் பருவத்தில் வீட்டுப்பாடம் செய்யாததற்கும், வேலைக்குச் சென்ற சமயங்களில் கூடுதல் விடுப்பு எடுப்பதற்கும் காரனங்களைச் சொல்லிச் சொல்லி பழகிவந்த நம்மில் பலருக்கும் அதிலிருந்து விடுபடுவது இயலாத காரியமாகி விட்டது. அதனால் தான் சிலர் மட்டும் சாதிக்கின்றனர். வெற்றியாளர்களாக உருவாகின்றனர்.
என்ன வேண்டும் என்பதை விட என்ன வேண்டாம் என சொல்லவே நாம் பழகி வருகிறோம். பழகி விட்டோம். வெளிநாடுகளில் நம் நாடுகளிலிருந்து நேரடியாக நிர்வாகத்துறை பணிக்கு வருகின்றவர்களைப் பற்றி அங்குள்ளவர்கள் கிடைக்கும் பயன்களை விட அதனால் வரும் விளைவுகளை மட்டுமே கவனத்தில் கொண்டு செயல்படுபவர்கள் என்று கமெண்ட் அடிப்பார்கள். இது முற்றிலும் உண்மை என கூற முடியாவிட்டாலும் இதில் ஓரளவு உண்மை இருக்கத்தான் செய்கிறது. இதை நான் பணிபுரிந்த நிறுவனங்களில் கண்கூடாக கண்டிருக்கிறேன். நிறுவனம் நடத்தும் ஊழியர்களுக்கான ஆலோசனைக் கூட்டங்களில் நம்மவர்கள் இருந்தால் செய்யுங்கள் என்று முதலில் சொல்ல மாட்டார்கள். நீங்க செய்யப்போகிற இந்த விசயத்தால் கட்டாயம் இது போன்ற எதிர் விளைவுகள் வரலாம் என்று தான் ஆரம்பிப்பார்கள்.
ஒரு செயலைச் செய்வதற்கு முன் அது தரும் பலன்களை, அதன் மூலம் கிடைக்கப் போகும் சந்தோசங்களை பார்ப்பதில்லை. மாறாக, அதனால் என்ன பாதிப்புகள் வரும் என்று தான் பார்க்கின்றோம். பாதிப்புகளே இல்லாமல் ஒரு விசயத்தை செய்யவே முடியாது. காயம் படாமல் சைக்கிள் ஓட்ட முடியுமா? அப்படி ஓட்ட வேண்டுமானால் சைக்கிளை ஸ்டாண்ட் போட்டு தான் ஓட்ட வேண்டும். நேர்மறையாக அணுக வேண்டிய விசயங்களை எதிர்மறை கண்ணோட்டத்தில் பார்ப்பதால் தான் அந்தச் செயலை செய்யாமலிருப்பதற்கு அல்லது ஒத்திப் போடுவதற்கு மனமானது காரணங்களைத் தேடுவதாக மனவியலாளர்கள் கூறுகின்றனர்.
காரணங்கள் வேண்டுமானால் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாய் வேறுபடலாம். ஆனால், அதன் நோக்கம் அந்தச் செயலை செய்யாமலிருப்பது அல்லது ஒத்திவைப்பதற்கானதாகவே இருக்கும்.
இப்ப இருக்குறது போதும்…..எதையாவது செய்யப் போய் உள்ளதுக்கும் மோசம் வந்துட்டா……..என்று நினைப்பவர்களால் ஒருநாளும் எதையுமே செய்ய முடியாது. எதையும் செய்யும் மனத்துணிவோடு இதைத் தான் செய்யப் போகின்றேன் என துணிந்தவர்கள் மட்டுமே சாதித்திருக்கின்றனர். இதைத் தான் வள்ளுவர் “எண்ணித்துணிக கருமம்” என்கிறார். பின்னோக்கி ஓடுபவர்களுக்கு எல்லைக் கோடு என்பது எப்பவுமே எட்டாக் கனியாகவே இருக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
தன்னிடம் கிரிக்கெட் பயிற்சி பெற்று வந்த சிறுவனிடம் இன்று பயிற்சியாட்டத்தில் நன்றாக விளையாடினாயா? எத்தனை ஓட்டங்கள் எடுத்தாய்? என்று கேட்டார் பயிற்சியாளர்.
சிறுவனோ, அன்று தன் நண்பர்கள் விளையாடிய கிரிக்கெட் மேட்சை பார்க்கச் சென்றிருந்ததால் பயிற்சியாட்டத்திற்கு செல்லவில்லை என்றான். கோபம் கொண்ட பயிற்சியாளர் பளீர் என சிறுவனின் கண்ணத்தில் ஒரு அறைவிட்டார். அறைவிட்டவர் அத்தோடு விடவில்லை. அந்தச் சிறுவனை தன்னோடு அரவணைத்த படி “யாரோ விளையாடுகின்ற மேட்சை பார்த்து கைதட்டப் போய் இருக்கிறாயே…….. உனக்கு அசிங்கமாக இல்லை. உன்னைப் பார்த்து மற்றவர்கள் கை தட்டி பாராட்ட வேண்டாமா? நீ மற்றவர்களுக்காக கை தட்டப் போகிறாயா? அல்லது மற்றவர்களிடமிருந்து நீ கை தட்டு வாங்கப்போகிறாயா? முடிவு செய்து கொள்” என்றார். அந்த வார்த்தை அந்தச் சிறுவனின் வாழ்வை மாற்றிப் போட்டது. அந்தச் சிறுவன் சச்சின் டெண்டுல்கர்! சச்சினைப் போல நீங்களும் மற்றவர்களின் பார்வையை உங்களின் பக்கம் திருப்ப வைக்க, உங்களின் வாழ்வை வெற்றிகரமானதாக ஆக்கிக் கொள்ள விரும்பினால் காரணங்கள் சொல்வதை அடியோடு விட்டு விட்டு காரியம் செய்யப் பழகுங்கள்.
நிறம், வயது, கல்லாமை, ஏழ்மை, உடல் ஊனம் போன்றவைகள் செயல்பாட்டின்மைக்கு காரணங்களாக சொல்லப்பட்டு வந்தன. இந்த காரணங்கள் எல்லாம் அபத்தமானவை. நீங்கள் கூறும் இந்த அபத்த காரணங்களோடு வாழ்ந்த சிலர் அற்புதங்களை நிகழ்த்திக்காட்டி இருக்கின்றனர். நவீன வசதிகள் இல்லாத காலத்திலேயே அவர்களால் சாதிக்க முடிந்த போது ஏன் உங்களால் முடியாது?
முயலாமையை முடக்கி போடுங்கள். இல்லாமையை முயலாமையால் இன்னும் ஆழமாக உங்களுக்குள் வேரூன்ற அனுமதிக்காதீர்கள். அந்த அனுமதி மறுப்பு மட்டுமே உங்களின் உயரங்களை உச்சமடையச் செய்யும்.
நன்றி : நம்பிக்கை வாசல்