Tuesday, 27 January 2015

செல்லக்கிளியின் தம்பி

நந்தன் ஸ்ரீதரனின் தாழி என்ற சிறுகதைத் தொகுப்பில் இடம் பெற்றுள்ள கதைசெல்லக்கிளியின் தம்பி”. எதிர்வினையாற்றாமல் ஏவல் வேலை செய்யும் சென்றாயன்மெண்டல்” (பைத்தியம்) என்ற பெயருக்குரியவனாய் மாறிப்போன வலியைச் சொல்லும் கதை

அந்த ஊர் நாட்டாமையின் ஒரே மகள் செல்லக்கிளி. திடீரென நாட்டாமை இறந்து போக அவரின் உடன் பிறந்தவர்களால் செல்லக்கிளியும், அவளுடைய அம்மாவும் ஒதுக்கப்படுகிறார்கள். சுய சிந்தனையின்றி செயல்படும் செல்லக்கிளியை திருமணமான மூவரோடு ஓய்வு பெறும் வயதுடைய ஒருவரும் சுவைத்து எறிய அவள் கருவுறுகிறாள். குடும்ப மானத்தைக் காக்க அவளை ஆற்று நீரில் மூழ்கடித்து கெளரவக் கொலை செய்ய முடிவு செய்து அவள் கண்முன்னாலயே உறவினர்கள் அதற்கான திட்டத்தையும் போடுகின்றனர்.

அதை நிறைவேற்ற வரும் இருவர் அவளை வேறு தேவைகளுக்குப் பயன்படுத்தி விடக்கூடாது. என்பதற்காக அவளோடு அவளின் உடன்பிறவா தம்பி சென்றாயனை அனுப்பி வைக்கின்றனர். நடக்க இருப்பவைகளைத் தெரிந்திருந்த போதும் உடன் வரும் தம்பியோடு விளையாட்டு காட்டிக் கொண்டு வரும் செல்லக்கிளி திடுதிப்பெனஎப்புடிடா நான் செத்துப் போவேன்?” எனக் கேட்கும் போது அவனுக்கு வந்த அதே அதிர்வு நம்மையும் கவ்விக் கொள்கிறது.

மெண்டல்என நாமெல்லாம் அழைப்பவர்களுக்குள்ளும், அப்படியான மனநிலையில் இருப்பவர்களுக்குள்ளும் நம்மால் உணர முடியாத துன்பம் இரகசியமாய் புதைந்து கிடக்கிறது என்பதைஅம்புட்டு பேரும் மெண்டலுன்றாங்க. என்ன நடந்துச்சுன்னு எல்லாருக்கும் தெரியும். எப்படி நடந்துச்சுன்னு எனக்கும், நான் சொல்லி உனக்கு மட்டும் தான்  தெரியும். நம்ம துன்பம் யாருக்குண்ணே தெரியும்என்ற சென்றாயனின் வார்த்தைகளின் வழி வாசிக்கும் நமக்கு உணர்த்தி விடுகிறார் ஆசிரியர்.

கால ஓட்டத்தில் எதார்த்த நிலையின் அடையாளங்களை தொலைத்தவனாய் இருந்த சென்றாயனை அடையாளம் கண்டு கொண்டு கட்டியணைத்து ஆறுதல் படுத்த முனையும் போது அவன் மெண்டலா ஆகிவிட்டான் என நண்பர்கள் கூறிய போதும் புன்னகைத்த படியே நகர்ந்து செல்லும் சென்றாயனின் நடையைஉணவேதும் கிடைக்காமல் சமையலறையை விட்டு வெளியேறும் தளர்ந்த எலியைப் போன்ற நடைஎன்று சுட்டிய வரி நிராகரிப்பின் வலி!

மன நிலை முற்றிலும் சீராக இல்லாத பெண்ணிடம் பொறுப்பாக இருக்க வேண்டியவர்களின் கொள்ளும் மோகம், கெளரவக் கொலை அதுவும் சம்பந்தப்பட்டவருக்கு தெரிந்தே நிகழ்த்தப்படும் கொடுமை, மற்றவர்களின் மனதை உணராமல் நமக்கு நாமே கொண்ட புரிதல்களின் வழி சம்பந்தப்பட்டவர்களை மதிப்பிடும் துயரம் என அன்றாடம் நாம் காணும், கேட்கும் நிகழ்வுகளின் வழி கதையை எளிய நடையில் நகர்த்திச்செல்லும் ஆசிரியர் கதாபாத்திரங்களின் வார்த்தைகள் வழி நமக்குள்ளும் அந்த வலியின் துயரை நுழைத்து விடுகிறார்.

ஆசிரியர்  : நந்தன் ஸ்ரீதரன்

    கதைசெல்லக்கிளியின் தம்பி

வெளியீடு : நிலமிசை