ஒரு நாள் குறுகலான ஒரு ஒற்றையடிப் பாதை வழியாக நாடக மேதை பெர்னாட்ஷா நடந்து வந்து கொண்டிருந்தார். அதே பாதையின் மறுமுனையிலிருந்து ஒரு முரடன் வந்து கொண்டிருந்தான். எதிரில் வருவது ஷா என்பதை அறிந்து அவன் வேண்டுமென்றே பாதையை மறித்துக் கொண்டு வழிவிடாமல் நின்றான். வழி விடுமாறு ஷா அடக்கமான குரலில் கேட்டார். அதற்கு அவன், “முட்டாள்களுக்கு வழிவிடுவது என் வழக்கமில்லை” என்று கூறி வழியை மறைத்தபடியே நின்றான்.
உடனே ஷா, “முட்டாள்களுக்கு வழிவிட்டு விலகி நிற்பது என் பழக்கம்” என்று கூறியபடி பாதை ஓரத்தில் விலகி நின்றார். மூக்குடைபட்ட முரடன் ஷாவை முறைத்தபடியே அவ்விடத்தை விட்டு நகர்ந்து சென்றான்.
மூர்க்கமானவர்களிடமும், வம்படிக்கும் நோக்கத்துடனும் உங்களை அணுகுபவர்களிடம் நீங்களும் மூர்க்கமாக நடந்து கொள்ளாமல் அவர்களிடமிருந்து விலகி நில்லுங்கள். அவர்களை அறிவுப்பூர்வமாக கடந்து வாருங்கள். உங்கள் முன் வந்து நிற்கும் எதிராளியை அறிவுபூர்வமான வார்த்தைகளால் வெல்லப் பழகுங்கள். பிறரை வெல்லும் வார்த்தைகளை பெர்னாட்ஷா போல எப்போதும் கைவசம் வைத்திருங்கள்.
நன்றி : தமிழ்முரசு நாளிதழ்