ஹைதராபாத்தில் உள்ள உஸ்மானியா பல்கலைக் கழகம் பொன்விழா கொண்டாடியது. அந்த விழாவில் நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி சர்.சி.வி.இராமன் கலந்து கொண்டு ”வைரங்கள்” என்ற தலைப்பில் சொற்பொழிவாற்றினார். அவரது உரைக்குப் பின் ஒரு இளைஞன் எழுந்து, “ஐயா, வைரங்களின் தன்மை, குணம், ஒலிச்சிதறல் பற்றியெல்லாம் தெளிவாகச் சொன்னீர்கள். ஆனால், வைரம் செய்வது எப்படி? என்று தாங்கள் சொல்லவில்லையே” என்றார்.
உடனே சர்.சி.வி.இராமன் “அது ஒன்றும் கடினமான காரியமில்லை. ஒரு கரித்துண்டை எடுத்துக் கொள். அதை பூமியில் ஆயிரம் அடி ஆழத்தில் புதைத்துவைத்து விட்டு ஆயிரம் ஆண்டுகள் காத்திரு, உடனே வைரம் கிடைத்து விடும்” என்றார். வைரம் என்ற விலை மதிப்பில்லா பொருள் கிடைக்க வேண்டுமானால் அதற்கு ஆயிரம் ஆண்டுகள் தேவைப்படுவதைப் போல நம்முடைய இலட்சியத்தை அடைந்து அதன் மூலம் விலை மதிப்பில்லா வெற்றியைப் பெற வேண்டுமானால் அதற்கு வெறும் ஆசை மட்டும் இருந்தால் போதாது. கடின உழைப்பு, தீவிர முயற்சி ஆகியவற்றோடு தேவையான கால அளவிற்குப் பொறுமையும் அவசியம். இல்லையென்றால் விதையைப் போட்ட மறுநாளே அது முளைக்கவில்லை எனக் கூறிக் கொண்டு அந்த விதையைத் தினமும் எடுத்து, எடுத்துப் பார்த்து விட்டு பதியம் போட்ட குரங்கின் கதையாகி விடும்.
நன்றி : தமிழ்முரசு நாளிதழ்