Saturday, 10 October 2015

நழுவும் நங்கூரம்

 

அவள் கண்களின் ஆழத்தில் எதைக்கொண்டும் நிரப்ப முடியாத வெறுமை இருந்தது. அகமே புறமாவதைப் போல அவளின் மனதைக் கண்கள் பிரதிபலித்துக் கொண்டிருந்தன. இன்று காலை வரை தன்னிடமிருந்த சந்தோசம் சர்ப்பமாய் நழுவுவதைப் போலிருந்தது அவளுக்கு.

இப்பவும் கூட அவளால் அதை ஏற்க முடியவில்லை. ஆனால் எல்லா நேரங்களிலும் நிஜம் நினைப்பது போல இருப்பதில்லையே! அப்படித்தான் அவள் விசயத்திலும் இருந்தது. பழகிய நாளில் இருந்து இளங்கோவிடம் எந்த தீய பழக்கங்களையும் அவள் கண்டதில்லை. அந்தக் குணமே அவன் மீது ஒருவித ஈர்ப்பைத் தர அதற்குக்காதல்எனப் பெயரிட்டு அவனிடம் கொடுத்த போது அவனும் மறுக்க வில்லை. ஓராண்டு இல்லறத்தில் சந்தோசம் குறைவில்லாமல் இருந்தது.

நிறுவன மேலாளராக பதவி உயர்வு பெற்றதும் வேலைப் பளு எனச் சொல்லிக் கொண்டு வீட்டில் செலவிடும் நேரத்தை நான்கு நம்பர் சீட்டில் விழும் பரிசாய் சுருக்கியவன் சில மாதங்களாக அலுவலகத்தில் இருந்து விரைவிலேயே வீட்டிற்கு வருவதும், தன்னோடு அதிக நேரங்களைச் செலவழிப்பதுமாக இருப்பதைக் கணடவளுக்கு அளவில்லா மகிழ்ச்சி.

திடீரென ஒரு நாள் தன் பெயரில் இருந்த பங்குகளை எல்லாம் அவள் பெயருக்கு மாற்றினான். வங்கிக்கு அழைத்துச் சென்று அனைத்துச் சேமிப்புகளிலும் அவளை வாரிசுக்குரியவளாய் உறுதி செய்தான். சுய தொழில் ஆரம்பிப்பதற்காகத் தன் பெயரில் சேமித்திருந்த பெருந்தொகையை அவளின் வங்கிக் கணக்கிற்கு மாற்றினான். நடப்பவை கண்டு எதுவும் புரியாதவளாய்  “ஏங்க சொந்தக் கம்பெனி ஆரம்பிக்கனும்னு சேமிச்சு வச்ச பணத்தை எல்லாம் என் பெயருக்கு ஏன் மாத்துறீங்க? வேற எதுவும் பிரச்சனையா? எதுக்கு இத்தனை அவசரம்?” என்று அவள் கேட்டதற்கு பதில் ஏதும் சொல்லாத போதும் அவனுக்குள் பெரும் சுமையை இறக்கி வைத்த திருப்தி.

மறுநாள் அலுவலகம் சென்றிருந்தவனின் அறையில் திறந்திருந்த அலமாரியைச் சாத்துவதற்காக சென்றவள் கீழ் தட்டில் தன் பெயரிட்டு ஒட்டப்படாமலிருந்த கடித உறையைப் பிரித்துப் பார்த்தாள். இன்னும் முழுதாய் எழுதி முடிக்கப்படாமல் அதில் இருந்த கடித்ததைப் படித்தவளுக்கு அந்த அறை முழுவதும் புகை மண்டலம் சூழ்வதைப் போலிருந்தது. சரீரம் நடுங்க இருந்த இடத்திலேயே கடிதத்தை வைத்து விட்டுக் கூடத்தில் வந்து அமர்ந்தாள்.

அலுவலகத்தில் இருந்து திரும்பும் அவனின் வருகைக்காக எப்பொழுதும் ஈரம் கசியக் காத்திருக்கும் அவளின் கண்கள் இன்று வறட்சியாய் வாயிலை நோக்கிக் கொண்டிருக்க மனமோ புற்றுநோய் முற்றிய நிலையில் நாட்களை எண்ணிக் கொண்டிருப்பவனை எதிர் கொள்ளும் தைரியத்தைத் தனக்குத் தருமாறு இறைவனைப் பிரார்த்திக்கத் தொடங்கி இருந்தது

நன்றி : தமிழ் முரசு நாளிதழ்