Thursday, 15 October 2015

ராகு காலம்

தன்னுடையக் கலாச்சாரம், பழக்க வழக்கங்கள், நம்பிக்கைகள் ஆகியவைகளை விட்டு விட்டு வேறொரு கலாச்சாரத்துக்கு ஆட்பட்டு அதன் பழக்க வழக்கங்கள், நம்பிக்கைகளைப் பின்பற்றும் ஒருவனின் வாழ்வில் நிகழ்ந்த மாற்றங்களைச் சொல்லும் கதை ராகுகாலம். மகாராஜாவின் ரயில் வண்டி தொகுப்பில் இடம் பெற்றுள்ள இக்கதையின் ஆசிரியர் . முத்துலிங்கம்.

நைரோபிக்குப் புதிதாகப் பணிபுரியவரும் தமிழ் குடும்பத்தில் கார் ஓட்டுனராக வேலைக்குச் சேரும் ஆப்பிரிக்கனான மாரியோ அவர்கள் கடைப்பிடிக்கும் பழக்கவழக்கங்கள், நம்பிக்கைகள், விரதங்கள் ஆகியவைகளைப் பற்றி தனக்குத் தெரிந்த மேலாளரிடம் விசாரித்துத் தெரிந்து கொள்கிறான். அப்படி அவன் தெரிந்து கொண்ட விசயங்களுள் ஒன்றுராகு காலம்”! காலப் போக்கில் அந்த நம்பிக்கைகளைப் பின்பற்றத் தொடங்கும் மாரியோவின் வாழ்வில் அவைகளால் நிகழும் மாற்றங்கள் தான் கதை.

வெளி விசயங்களில் தங்களை மிகப்பெரிய கில்லாடியாகக் காட்டிக் கொள்பவர்கள் தன் வீட்டு விசயங்களில் கோட்டை விட்டு விடுவார்கள். இந்த நிஜத்தை ஒப்பந்தத்தில் இருக்கும் விசயங்களை நுணுக்கமாய் பார்க்க விரும்பும் டொன் தன் மகள் ஆப்பிரிக்கச் சிநேகிதிகளுடன் சேர்ந்து, அவர்களின் கலாச்சாரத்திற்கு மாறி வருவதை அறியாமல் இருப்பதைஉலகத்தைப் பார்க்கும் கண்களால் இவருக்குப் பக்கத்தில் இருக்கும் காதைப் பார்க்க முடியவில்லைஎன்ற இரண்டே வரிகளில் நமக்குச் சொல்லி விடுகிறார். இன்றும் பல வீடுகளில் இந்த நிலை தானே?

தான் வேலை செய்யும் குடும்பத்தைப் பார்த்து வேகமாகத் தமிழ் கலாச்சாரத்திற்கு மாரியோ மாறிக் கொண்டிருந்த சமயத்தில் திடீரென அந்தக் குடும்பம் அங்கிருந்து சென்று விட ஆயத்தமாவதில் திருப்பம் பெறுகிறது கதை.

பல மாதங்கள் கழித்து அவனைச் சந்திக்கும் மேலாளரிடம் புரட்டாசி சனிக்கு கோவிலுக்குப் போய்விட்டு வருகிறேன் என மாரியோ சொல்லுவதில் இருந்து அவன் தன் கலாச்சாரத்தில் இருந்து முழுமையாக மாறி இருப்பது தெரிந்தாலும் அந்த  மாற்றத்தால் அவனின் வாழ்வில் நிகழ்ந்த மாற்றங்கள் கதையின் உச்சம்.

ஆறு மாதமாய் வேலை தேடிக் கொண்டிருப்பதாய் சொல்லும் மாரியோவிடம்ஸ்வீடன் தூதரகத்திற்கு சென்றிருந்த ஓட்டுனர் வேலைக்கு என்னவாயிற்று?” என்று மேலாளர் கேட்கும் போதுபுதன்கிழமை பன்னிரெண்டு மணிக்கு ராகுகாலம். அப்போது நேர்முகத் தேர்வுக்கு கூப்பிட்டால் எப்படிப் போக முடியும்?" என அவன் சொல்லும் பதில்  எல்லோருக்கும் பாடம்.

பிற கலாச்சாரங்களையும், அது சார்ந்த நம்பிக்கைகளையும் அதன் அடிப்படை உணராமல் பின்பற்றும் போதும், சில நடைமுறைக் காரணங்களுக்காகச் சொல்லப்பட்ட விசயங்களை மூடத்தனமானது என்று தெரிந்திருந்தும் கண்மூடித்தனமாகப் பின்பற்ற ஆரம்பிக்கும் போதும் அது வாழ்வியலுக்குத் தேவையான நம்பிக்கையவே ஆட்டம் காண வைத்து விடும் என்பதை இந்தக் கதையின் மூலம் ஆசிரியர் இயல்பாய் உணர்த்தி விடுகிறார்.

ஆசிரியர்  : . முத்துலிங்கம்

    கதை     : ராகு காலம்

  வெளியீடுகாலச்சுவடு பதிப்பகம்