காலாண்டுத் தேர்வுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே ஒரு போட்டியில் கலந்து கொள்வதற்காகத் தான் பெயர் கொடுத்து விட்டதாகவும், விடுமுறையில் அந்த போட்டிக்கான புராஜெக்ட்டைச் (PROJECT) செய்ய நீங்கள் ஹெல்ப் பண்ண வேண்டும் என்றும் மகள் சொன்னதும் சரி என்று சொல்லி வைத்தேன். தேர்வு முடிந்ததும் செய்ய வேண்டிய புராஜெக்ட் பற்றி அவள் சொன்ன விளக்கம் கணினிச் செயல்பாடுகள் சார்ந்து இருந்ததால் என்னால் உதவ முடியாது என்றேன். அவள் விடுவதாய் இல்லை. நீங்கள் உடனே மிஸ் கிட்டப் பேசி விபரம் கேட்டு தெரிஞ்சுக்குங்க. இன்னும் பத்து நாள் நமக்கு டைம் இருக்கு என்றாள். அவளின் கம்ப்யூட்டர் பாடத்திற்கான ஆசிரியை எனக்குத் தோழி என்பதால் அழைத்துப் பேசியதும் நான் கவர் பண்ணிக்கிறேன் எனச் சொன்னதால் அதையே மகளிடம் சொன்னேன். அப்படின்னா முதல் புராஜெக்ட்டில் மிஸ் ஹெல்ப் செய்யட்டும். இரண்டாவது புராஜெக்ட்டை நாமளே செய்வோம் என்றாள்.
என்னடா இது சோதனை?ன்னு நினைத்துக் கொண்டே அதுக்கு என்ன செய்யணும்? என்றேன். மொபைல் ஆபரேட்டிங் சிஸ்டம் பற்றி புராஜெக்ட் பண்ண வேண்டும் என்றாள். அதுக்கும் மிஸ்கிட்டயே சொல்லிடவா? எனக் கேட்ட போது எல்லாத்தையும் மிஸ்கிட்டயே சொல்லிட்டா அப்புறம் எதுக்கு நான் பெயர் கொடுக்கனும்?. இதை நாமளே செய்யலாம். நெட்டில் தேடி கலெக்ட் பண்ணி உடனே மெயில் செய்துடுங்க. நான் அவைகளைச் சரி செய்து புராஜெக்ட்டா தயார் பண்ணிக் கொள்கிறேன் என்றாள். ஒரு வழியா அங்குன, இங்குனைன்னு தேடி அவள் வயதுக்கு ஏற்ற வகையிலான தகவல்களைத் தயார் செய்து முடித்திருந்த நிலையில் மகனிடமிருந்து அழைப்பு வந்தது.
நானும் அந்தக் காம்படீசனில் (COMPETITION) பெயர் கொடுத்திருக்கிறேன். எனக்கு M.S. PAINT -ல் விலங்குகள் படம் வரைந்து அதிலேயே வைத்துக் கலர் கொடுத்து பிரிண்ட் எடுத்து புராஜெக்ட்டா செய்ய வேண்டும் என்றான். M.S. PAINT-ல் படம் வரைவதெல்லாம் என்னால் முடியாது என்றேன். அக்காவுக்கு மட்டும் புராஜெக்ட்டுக்கு ரெடி செய்து கொடுக்குறீங்க. எனக்கு மட்டும் முடியாதுன்னு சொல்றீங்க? என நேரடியாகவே கேட்டு விட்டான். சரி பார்க்கலாம் எனச் சொல்லிவிட்டு மூன்று நாட்களாக ஆடிய கையை ஆடாமல் நிறுத்தி ஒரு வழியா வரைஞ்சு பார்த்தால் சகிக்கவில்லை.
சில தினங்கள் கழித்து அழைத்து எனக்கு வரைய வரவில்லை. நீயே வரைஞ்சுக்க முடியாதா? என்றேன். அதுக்கெல்லாம் இப்ப நேரமில்லை. விடுமுறைக்கு ஊருக்கு வந்துருக்கோம். ஐந்தாம் தேதி புராஜெக்ட்டை ஸ்கூலுக்குக் கொண்டு போகனும். நாலாம் தேதி தான் நாங்க ஊருக்குத் திரும்பிப் போவோம். அதுக்கு அப்புறம் போய் வரைஞ்சாலும் அன்னைக்கு ஞாயிற்றுக் கிழமைங்கிறதால பிரிண்ட் எடுக்கக் கடை திறந்திருக்காது. அதுனால உடனே வரைஞ்சு மெயில் பன்னிட்டு வீட்டுல சொல்லி பிரிண்ட் எடுத்து வைக்கச் சொல்லிடுங்க. நான் போய் கட் பண்ணி ஒட்டிக்கிறேன் என்றான். இம்முறை ”காலாண்டுத் தேர்வு விடுமுறை என்னவோ பிள்ளைகளுக்குத் தான். ஆனால், வீட்டுப் பாடம் மட்டும் உனக்குடான்னு” மூன்று நாளா பிடித்திருந்த துன்பம் இன்று விட்டு விலகியது. இருவருக்கும் மெயில் அனுப்பியாச்சு.