ஜானகி என்ற பெண்ணிற்கும் அவளோடு முப்பத்தைந்து ஆண்டுகள் இணைந்து பயணித்த தையல் மிஷினுக்குமான உறவைச் சொல்லும் கதை. தையல்மிஷின் என்ற சிறுகதைத் தொகுப்பில் இடம் பெற்றுள்ள இக்கதையின் ஆசிரியர் நூர்ஜஹான் சுலைமான்.
ஜானகியின் வாழ்வியல் நிகழ்வுகளைச் சற்றும் மிகைப்படுத்தாத வகையில் ”மிஷின் மக்கர் பண்னும் போது குழந்தையை அதட்டுவது போல செல்லமாக அதட்டிய படி தைக்க ஆரம்பிப்பாள்” போன்ற நுட்பமான அவதானிப்புகளோடு இழைத்திருப்பது கதையின் மிகப்பெரிய பலம்.
இந்தப் பழைய தையல் மிஷினிற்குப் பதில் சப்தம் எழுப்பாத புதிய தையல் மிஷின் வாங்கித் தருவதாய் மகன் சொல்லும் போது ”உன் அம்மாவும் பழசு தான் என்னையும் வீசிடுவியோ” என்ற ஜானகியின் எதார்த்தக் கேள்வியும் ”எல்லாருக்கும் நீ தையல் மிஷினாகத் தெரியுறே. ஆனா……யாருக்கும் தெரியாது நீதான் என்னோட குலசாமின்னு” என்ற ஆதங்கமும் அவளுக்கும் அவளின் தையல் மிஷினிற்குமான உறவை இயம்பி விடுகிறது,
ஒவ்வொரு கால கட்டத்திலும் தன்னை விட்டு விலகாமல் பயணித்து வந்த தன் தையல் மிஷினை ஜானகி இழக்கத் தயாராவதில் நிகழும் கதையின் திருப்பமானது அதற்காக அவள் தனக்குத் தானே சொல்லிக் கொள்ளும் சமாதானம் கதையை உச்சமடையச் செய்கிறது. அவளின் அந்தச் சமாதானம் அவளுக்கு மட்டுமல்ல வாசிக்கும் நமக்கும் ஏற்புடையதாகவே இருக்கிறது.
தன்னுடைய வாழ்க்கையில் ஒரு அங்கமாகி இருக்கும் தையல் மிஷின் தன் காலத்திற்குப் பின்னர் எப்படிப் பட்ட நிலையில் இருக்க வேண்டும் என நினைக்கும் ஜானகியின் மனநிலையை வருங்காலத்தில் பிள்ளைகள் எப்படி இருக்கப் போகிறார்களோ? என நினைக்கும் பெற்றோரின் அக்கறைக்கு இணையாகச் சுட்டலாம்.
ஜானகியின் ஆரம்பகாலத் துயரங்களின் வீச்சை வாசகனிடம் கொண்டு சேர்க்க அவளின் பிரதான உறவினர்களின் இறப்பை மட்டுமே ஆதர்சனமாகக் காட்டியிராமல் அவள் எதிர்கொள்ளும் அன்றாட வாழ்வியல் சிக்கல்களையும் பயன்படுத்தி இருந்தால் இன்னும் அடர்வாய் இருந்திருக்கும்..
ஒரு சாதாரண நிகழ்வை மையமாக்கி நேர் கோட்டு முறையில் கதையை அமைத்திருந்தாலும் அதைச் சொல்லி உள்ள விதத்தால் அசூசையின்றி வாசிக்க முடிகிறது
கைத்தொழில் ஒன்று கைவசமிருப்பின் எத்தகைய வாழ்வியல் சிக்கலையும் நம்பிக்கையோடு எதிர்கொள்ள முடியும் என்ற படிப்பினையைப் பதியமிடும் கதை.
ஆசிரியர் : நூர்ஜஹான் சுலைமான்
கதை : தையல்மிஷின்
வெளியீடு: தங்கமீன் பதிப்பகம்