நண்பரின் மகள் ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறார். ஒன்பதாம் வகுப்பெல்லாம் முக்கியமில்லை. பத்தாம் வகுப்பில் பலம் காட்டினால் தான் எங்களுக்கெல்லாம் கெளரவம் என இப்போதே அந்தப் பள்ளியில் பத்தாம் வகுப்புப் பாடத்தை அக்கறையாய் நடத்தி வருகிறார்களாம். இந்நிலையில் தன் சித்தியின் வளைக்காப்பிற்காக விடுப்பு விண்ணப்பம் கொடுத்து வகுப்பாசிரியையின் முறையான அனுமதி பெற்றுச் சென்று விட்டு மறுநாள் பள்ளிக்கு வந்த நண்பரின் மகளை அப்பள்ளியின் தலைமையாசிரியர் தண்டனை என்ற பெயரில் வகுப்பறைக்கு வெளியில் நிறுத்தி வைத்திருக்கிறார். அந்த அவமானத்தால் அக்குழந்தை கண்ணீர் வடிய நின்ற போதும் அது பற்றிக் கவலைப் படாத அந்த ஆசிரியர் உனக்கு இன்னைக்கு இப்படி தண்டனை தந்தால் தான் மற்ற பிள்ளைகள் இனி லீவு எடுக்க மாட்டார்கள் என உபதேசம் வேறு செய்திருக்கிறார்.
வேறு ஒரு ஆசிரியையின் மூலம் தகவலறிந்து அக்குழந்தையின் அம்மா சென்று விசாரித்த போது கொஞ்சம் நீட்டி முழங்கிய அந்த ஆசிரிய அகராதி பத்தாம் வகுப்புக்கான பாடங்களை நடத்த ஆரம்பிச்சிட்டோம், இனி லீவு எடுத்தா பெயிலாக்கிடுவேன். டி.சி.யைக் கொடுத்துடுவேன் எனக் கொஞ்சம் பூச்சாண்டி காட்டியதோடு இனி மேல் இரவு எட்டு மணி வரைக்கும் கிளாஸ் இருக்கும். அதன் பிறகு தான் பிள்ளைகளை வீட்டிற்கு அனுப்பி வைப்போம். காலையில் வழக்கத்திற்கு மாறாக சீக்கிரம் கிளாஸ் ஆரம்பித்து விடும். குறிப்பிட்ட நேரத்துக்கு வந்து விட வேண்டும். காரணம் எல்லாம் சொல்லக் கூடாது எனச் சொல்லியனுப்பி இருக்கிறார்.
குழந்தையின் கல்வி என்பதால் பொறுமையாக அவர் சொன்னதை எல்லாம் கேட்டுக் கொண்டு குழந்தையை வகுப்பறைக்குள் இருக்க அனுமதிக்கக் கோரியதை நீண்ட கெஞ்சலுக்குப் பின்பே அந்த ஆசிரிய கெளரவம் ஏற்று இருக்கிறது!.
வறுமையினால் பிள்ளைகள் வராமல் பாதியிலேயே பள்ளிப்படிப்பை முடித்துக் கொள்வது ஒரு புறமிருக்க இப்படியான ஆசிரிய வேக்காடுகளின் அக்கப்போருக்குப் பயந்தும் இப்பொழுதெல்லாம் பிள்ளைகள் பள்ளிப் படிப்பை பாதியிலேயே நிறுத்த ஆரம்பித்து விடுகின்றார்கள். கற்றுத் தரும் பணியில் இருப்பவர்கள் காசுக்கு மாரடிப்பவர்களாக மாறி வருவது வசதியற்ற குழந்தைகளின் எதிர்காலக் கல்வியை காவு வாங்கி விடும் போல் இருக்கிறது!
இன்றையக் கல்விக்கூடங்களைத் தாங்கிப் பிடிக்கத் தகடாய் தேயும் சில ஆசிரியர்களின் செயல்பாடுகளைப் பார்க்கும் போதெல்லாம், குழந்தைகளை விட அவர்களுக்குப் போதிக்கும் ஆசிரியர்களுக்குத் தான் உளவியல் கல்வி தேவையாய் இருக்கிறதோ? என்று தோன்றுகிறது!!
தகை சான்ற ஆசிரியப் பெருமக்கள் யாரேனும் முன் நின்று அதைத் தன் சமூகத்திற்கு, தங்களின் ஆசிரியச் சாதிக்குத் தந்தால் அவர்களுக்கு மட்டுமல்ல இந்தியாவின் எதிர்காலம் என நம்பப்படும் குழந்தைகளுக்கும் நல்லது!!