உன்னை எங்கு, எப்படி, யாருக்கு அடையாளம் காட்ட வேண்டும் என்பதில் உன் நண்பன் கொண்டிருக்கும் தெளிவு முகமூடிக்குப் பின் இருக்கும் அவனின் சுய முகத்தை காட்டியே தீரும்.
இடம் பெயர்தல் என்பது கிளையிலிருந்து உதிரும் இலையைப் போல மட்டுமே நடக்கும் என நினைத்திருப்பது மிகப் பெரிய தவறு. சில நேரங்களில் அது மரத்திலிருந்து முறியும் கிளையைப் போலவும் நிகழலாம்!
கையில் குடத்தை வைத்திருந்தால் மட்டும் போதாது. அதை எப்படிக் குழாயடியில் வைக்க வேண்டும் என்பதையும் தெரிந்திருக்க வேண்டும். இலக்குகளை விட அதைக் கண்டடையும் வழிமுறைகள் அவசியம்.
விளக்கின் சுடரை நீ ஏற்றி வைத்தாய் என்பதற்காக அந்தச் சுடர் எழுந்தசையும் திசையை தீர்மானிக்க முயலாதே! அபத்தங்களின் வழி அற்புதங்களை ஒரு நாளும் நிகழ்த்திக் காட்ட முடியாது!!
அடையக் கூடிய விசயங்களை மட்டும் இலக்காக்கிக் கொள்வதற்குப் பதில் இலக்காக்கிக் கொள்ளும் விசயங்களை அடைவதற்கான முயற்சிகளைச் செய்து பார். அந்த முயற்சி உன்னையே உனக்கு அடையாளம் காட்டுவதற்கான வாய்ப்பாகவும் மாறலாம்.
கற்றுக் கொள்வதற்கு நீ தயாராக இருக்கும் வரை உன்னிடம் மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்வதற்கான விசயங்கள் இருக்கும்.
உன்னிடம் மாற்றத்தை உருவாக்க வேண்டும்.அல்லது உனக்கு நீயே மாற்றங்கள் செய்வதற்கான விசயங்களை அடையாளப்படுத்த வேண்டும். இவை இரண்டையும் தராத புத்தகங்களைச் சேமிப்பதால் எந்த பயனுமில்லை.
ஒப்பீடுகளால் சிதைக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது குழந்தைகளின் மனம். பெற்றோரும், ஆசிரியர்களும் அதற்கான அத்தனை முன் முயற்சிகளையும் குழந்தைகளிடம் செய்து பார்த்து விடுகிறார்கள்.
அடையாளம் என்பது நுட்பத்திலும், வெளிப்படுத்துதலிலும் மட்டுமே இருக்கிறது, உச்சரிப்பதற்கும், பார்ப்பதற்கும், பயன்படுத்துவதற்கும் ஒன்று போல் இருக்கிறது என்பதற்காக ஊதுகுழலும், புல்லாங்குழலும் ஒன்றாகி விடாது!