காலையில்
தூங்கி எழுந்ததும்
வீட்டில் இருந்து
முதல் அலைபேசி
அழைப்பு. இப்படியான
அழைப்புகள் பெரும்பாலும்
மனைவியிடமிருந்து வருவது
வழக்கம். இன்றோ
வழக்கத்திற்கு மாறாக
மகளிடமிருந்து வந்தது.
பேச்சில் அத்தனை
உற்சாகமில்லை. என்னவென்று
கேட்ட போது
இன்னும் தமிழ்
ஒர்க்ஷீட்
(WORKSHEET) முடிக்கல
டாடி. ”மலை”,
”ஆறு” இரண்டையும்
பற்றி ஐந்து
வரிகளில் ஒரு
கவிதை சொல்லுங்க,
அதை எழுதுனா தான் ஒர்க்ஷீட் முடியும்
என்றாள். அவள்
வயதுக்கு ஏற்றதாக
இருக்கும் படியான
இரு கவிதைகளைச்
சொன்னேன்.
”மலை” கவிதை மூன்று வரிகள் தானே இருக்கு. ஐந்து வரிகள் இருக்கனும்னு சொல்லி இருக்காங்க என்றாள், கவிதைக்கு வரி முக்கியமில்லமா. உயிர் இருந்தா போதும். இந்தக் கவிதைகள் உன் அளவில் உயிர்ப்பானவை எனச் சொல்லி சில விளக்கங்களையும் சொன்ன பின்பே திருப்தியடைந்தாள். சொன்னதைச் செய்யும் கிளிப்பிள்ளைகளாக குழந்தைகளை மாற்றும் இன்றையக் கற்பித்தல் முறைகளும், பாடங்கள் என்ற பெயரில் அவர்களின் சந்தோசத்தைப் பறிக்கின்ற கல்வி முறையும் மாறாதவரை உளவியல் சிக்கல்களுக்குள் குழந்தைகள் உள்ளாகாமல் இருப்பது சாத்தியமே இல்லை என்றே தோன்றுகிறது.
மகளுக்குச் சொன்ன கவிதைகள்:
மலை
கவிழ்ந்து கிடக்கும்
பூமித் தாயின் மார்பகங்கள்
மலை!
ஆறு
விழுந்தால் அருவி
கிடந்தால் சாக்கடை
நகர்ந்தால்ஆறு!
நண்பனே.....
நம்பிக்கையோடு ஆறாய் நகரு
நாளை நமதே!