Thursday, 4 February 2016

குறுஞ்செய்தி (SMS) கோரிய உரிமை!

 
பள்ளியிலும், வீட்டிலும் குடிக்கும் தண்ணீர் மாறுபாட்டால் காய்ச்சல், சளி உள்ளிட்ட தொந்தரவுகள் மகளுக்கு வருவதும், போவதுமாக இருந்தது. அடிக்கடி ஆங்கில மருந்துகளைப் பயன்படுத்த வேண்டாம் என நினைத்து சித்தா மருந்துகளைக் கொடுக்க ஆரம்பித்திருந்தோம். சில தினங்களுக்கு முன் அதிக சளியால் தொண்டை வலிப்பதாகச் சொல்லவே வீட்டிற்கு அருகில் இருக்கும் சித்த மருத்துவரிடம் காட்ட அவர் ஆடாதொடை லேகியத்தையும், சில சித்தா மாத்திரைகளையும் கொடுத்துத் தேனில் கலந்து சாப்பிடச் சொல்லி உள்ளார்.  

மருந்தின் வாசம், அதன் சுவை பிடிக்காமல் போகவே மனைவியிடம் மல்லுக்கு நின்றவள் நான் அப்பாவிடம் பேசிக் கொள்கிறேன் எனப் பஞ்சாயத்தை என்னிடம் கொண்டு வந்தாள். மகளுக்குச் சாதகமாகச் சொன்னால் அப்புறம் எப்படி குணமாகும்? என மனைவி குதறி விடுவாள். மனைவிக்குச் சாதகமாகச் சொன்னால் மகளிடம் முறைப்பு வாங்க வேண்டும். பிரச்சனையை ஆறப் போடுவோம். சூழலை அறிந்து ஒரு முடிவைச் சொல்லலாம் என நினைத்து வேலை இருக்கிறது. இப்பொழுது பேச முடியாது எனக் கூறி விட்டு அலைபேசி இணைப்பைத் துண்டித்தேன்

இரவு உறங்கி விழித்ததும் முதல் குறுஞ்செய்தி மகளிடமிருந்து ”Medicine which are mummy gave? Don’t like here. After she continue that I will throw out (or)? Will keep it any where. Please tell mummy to don’t give that medicine. Please support me daddy என்று வந்திருந்தது. மறுக்க முடியாது என்பதால். அவளின் விருப்பத்திற்கு அனுமதிக்கச் சொல்லி விட்டேன். உரிமை கோரல்கள் மகன்களை விட மகள்களிடமிருந்தே எளிமையாக வந்தடைகின்றன.