Friday, 11 December 2015

அம்மாவென்ற நான்

குடும்பம், குழந்தைகள்  எனத் தன் வாழ்வின் பெருங்காலத்தைக் கடத்தி விட்ட ஒரு பெண் தன் உண்மையான அடையாளத் தேடலைத் தொடங்க வேண்டிய அவசியம் குறித்து உணர்ந்த சூழலைப் பற்றிப் பேசும் கதை “அம்மாவென்ற நான்”. அப்பாவின் படகு என்ற தொகுப்பில் இடம்பெற்றுள்ள இக்கதையின் ஆசிரியர் கிருத்திகா.

வழக்கமான கதைக்கருவை தன்னுடைய மொழி நடையில் படைப்பாக்காமல் புதிய விசயத்தைக் கருவாக்கி இருக்கிறார். திருமணத்திற்குப் பின் ஒரு பெண் அடையும் மாற்றங்களுக்கு அவளுடைய பெயரும் தப்புவதில்லை. இன்னாரின் மனைவி, இன்னாரின் அப்பா, இன்னாரின் பாட்டி என யாரோ ஒருவரின் இணைப்பிலேயே அவளின் வாழ்நாள் முழுக்கக் கழிந்து விடும் துயரத்தைச் சிறுகதைக்குள் கொண்டு வந்து தந்திருக்கும் முயற்சி பாராட்டுக்கு உரியது.

Tuesday, 8 December 2015

இடமும் இருப்பும்

இராமநாதனின் எழுத்துலக வாழ்வில் மிக முக்கியமானதொரு தினமாய் அன்றைய நாள் மலர்ந்திருந்தது. அவரின் நாவல் தென்கிழக்காசியாவில் தமிழ் மொழிக்கென வழங்கப்படும் உயரிய விருதுக்குத் தேர்வாகி இருந்தது. விருது வழங்கும் நாளுக்குச் சில வாரங்கள் இருந்த நிலையில் உள்ளூர் இலக்கிய அமைப்புகள் நடத்த ஆரம்பித்திருந்த பாராட்டு விழாக்களும், அதன் பொருட்டு நாளிதழ்களில் வரும் விளம்பரங்களும் தினமும் பார்க்கும் மனிதர்களிடம் கூட அவரைப் புகழுக்குரியவராக மாற்றி இருந்தது உள்ளூர் தொலைக்காட்சியில் வெளியான முழு நேர்காணல் அதை இன்னும் அதிகப்படுத்தி வைத்தது. அஞ்சல் பெட்டியை நிரப்பும் வாழ்த்துகளோடு, மின்னஞ்சலிலும் வாழ்த்துகள் குவிய ஆரம்பித்தன.  

சில வாரங்களுக்கு முன்பு வரை இவருடையதும், மனைவியுடையதுமான ஒரு ஜோடிச் செருப்புகளும், நடைப்பயிற்சிக்கு அணிந்து செல்லும் சப்பாத்துகளும் கிடக்கும் வாசல் முகப்பை இப்போதெல்லாம் பல ஜோடிச் செருப்புகளும், சப்பாத்துகளும் ஆக்கிரமிப்பதும், விலகுவதுமாய் இருந்தன. 

Tuesday, 1 December 2015

மெளன அழுகை - 6

என் “மெளன அழுகை” கவிதைத் தொகுப்பு குறித்து மலேசியாவின் பன்முகப்படைப்பாளி ”வல்லினம்” ம. நவீன் எழுதியிருக்கும் விமர்சனக் கடிதம் -

ம. நவீன்

அன்புமிக்க மு. கோபி சரபோஜி, முதலில் தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும். உங்கள் ‘மௌன அழுகை’ தொகுப்பை வாசித்தேன். பொதுவாகக் கவிதைகள் குறித்த எனது அபிப்பிராயங்களை முதலில் சொல்லிவிடுகிறேன்.

நான் எனது தொடக்ககால கவிதை வாசிப்பை வைரமுத்து, மேத்தாவிலிருந்துதான் தொடங்கினேன். தமிழில் தீவிர இலக்கிய வாசிப்பு எனக்கு அறிமுகமாகும் முன் திருக்குறள்தான் நான் கவித்துவத்தை அறிய உதவியாக இருந்தது. அப்போதெல்லாம் வீட்டுக்கு வரும் எந்த அழைப்பிதழையும் பெரும்பாலும் கவனமாக வாசிப்பேன். அதில் அப்படி ஓர் ஆர்வம்.