Tuesday, 10 February 2015

ரசிக்க – சிந்திக்க - 2

இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த காந்தியடிகளைக் கைது செய்து சிறையில் அடைக்க போலீசார் அழைத்துச் சென்றார்கள். சிறை அதிகாரியாக இருந்த ஸ்மட்ஸ் என்ற ஆங்கிலேயனுக்கு காந்தியடிகள் மீது கடுமையான வெறுப்பு. சிறைவாசலில் தன் நண்பர்களோடு பேசிக் கொண்டிருந்த காந்தியை ஸ்மட்ஸ் நடு நெஞ்சில் ஏறி மிதித்து அறைக்குள் தள்ளிவிட்டான் 

சில நாட்கள் கழித்து விடுதலை செய்யப்பட்டதும் சிறையிலிருந்து வெளியே வந்த காந்தியடிகள் சிறையிலிருக்கும் போது தான் தைத்த ஒரு ஜோடி செருப்பை ஸ்மட்ஸ்க்கு பரிசாக கொடுத்தார். அதை வாங்கிப் போட்டுப் பார்த்த ஸ்மட்ஸ் தன் காலுக்குச் சரியாக இருப்பதைக் கண்டு ஆச்சர்யபட்டவனாய், ”என் கால் அளவு உங்களுக்கு எப்படி தெரிந்தது?” என்று காந்தியிடம் கேட்டான். அதற்கு காந்தியடிகள்என்னை சிறைக்கு அழைத்து வந்த போது உங்கள் பூட்ஸ் காலால் என் நெஞ்சில் ஏறி மிதித்தீர்களே…….. அப்போது பதிந்த காலடித் தடத்தை அளவெடுத்து வைத்துக் கொண்டேன். அந்த அளவை வைத்து தான் இந்த செருப்பை தைத்தேன்என்றார். சிலிர்த்து போன ஸ்மட்ஸ் காந்தியடிகளை கை எடுத்து வணங்கினான்.

தன் மீது வெறுப்புடன் அடித்து அவமானப்படுத்தியவனை இப்படியும் பழி வாங்க முடியும் என நிரூபித்தார் காந்தியடிகள்! அவரின் பேரப்பிள்ளைகளான உங்களை எவரேனும் அவமானப்படுத்தினால் நீங்களும் பதிலுக்கு அவமானப்படுத்துவதற்கு பதில் அவர்களிடம் அன்பாய் இருங்கள். அப்புறம் பாருங்கள். அவர்களே அன்பானவர்களாய் மாறி உங்களிடம் வருவார்கள்.

நன்றி : தமிழ் முரசு நாளிதழ்