Monday, 23 February 2015

சிங்கப்பூர் - 50

சிங்கப்பூரின் பழைய பெயர்டெமாசெக்”.  13 ம் நூற்றாண்டில் (1390 ம் ஆண்டு) ஸ்கந்தர் ஷா என்னும் பாலம்பாங்க் மன்னன் தான் தோற்றுவித்த சிறு காலனிப் பகுதியான சிங்கப்பூருக்கு இப்பெயரை இட்டான்.

சிலப்பதிகாரத்தில் கோவலனின் முற்பிறவி ஊராகக் குறிக்கப்பட்டுள்ளசிங்கபுரம்என்ற பெயரால்சிங்கப்பூர்என்று அழைக்கப்பட்டதாக வரலாற்றாய்வாளர்கள் கூறுகின்றனர். இதற்கு ஆதாரமாக 14 ம் நூற்றாண்டிற்கு முன்னர் இப்பகுதிகள் சோழ மண்டலத்தின் ஆளுகையில் இருந்ததைக் குறிப்பிடுகின்றனர்.

14 ம் நூற்றாண்டில் சுமத்திராவில் இயங்கிய விஜய நகரப் பேரரசின் ஆட்சியில் இருந்ததுமாசிக்நகரமே 15 ம் நூற்றாண்டில்சிங்கப்பூர்எனப் பெயர் மாற்றம் கண்டதாக மலாய் வரலாறு கூறுகிறது

14 ம் நூற்றாண்டில் சுமத்திரா தீவின் மலாய் இளவரசர் சாங்நிலா உத்தமா கடும் புயல் ஒன்றின் போது இப்பகுதியில் ஒதுங்கியதாகவும் அப்போது சிங்கம் போன்ற ஒரு மிருகத்தைப் பார்த்ததும் சிங்கம் என நினைத்துசிங்கப்பூராஎன்றழைத்ததாகவும் மலாய் நாடோடிக் கதை கூறுகிறது. சிங்கம் என்ற சொல்லோடு ஊர் என்ற பொருள் தரும் பூரா என்ற மலாய் சொல்லை இணைத்து இளவரசர்சிங்கப்பூராஎன்றழைத்ததாக கூறுகின்றனர்.

சிங்கபுரிஎன்ற சமஸ்கிருதப் பெயரில் இருந்து சிங்கப்பூர் என்ற பெயர் உருவானதாகக் கூறப்படுகிறது. ”சிங்கநகரம்என்பது இதன் பொருள்.

சிங்கத்தின் ஊர் என்ற பொருளில்சிங்கப்பூர்எனப் பெயர் பெற்றதாகவும், ”சிங்கப்பூராஎன்ற மலாய் சொல் மருவிசிங்கப்பூர்என்றானதாகவும் கூறப்படுகிறது.

மலேசிய தீபகற்பத்தின் தென் முனையில் அமைந்திருந்த சிங்கப்பூரை 1819 ல் ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனி தனது கட்டுப் பாட்டிற்குள் கொண்டு வந்தது. மலேசிய தீபகற்ப ஆட்சியாளர்களின் ஆளுகையில் இருந்த சிங்கப்பூரை ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனிக்காக ஜொகூர் சுல்த்தான் ஹீசைன் ஷாவிடமிருந்து ஒப்பந்தம் மூலம் பெற்றவர் சர் தாமஸ் ஸ்டாம்போர்ட் ராஃபிள்ஸ். இவரே சிங்கப்பூர் என்ற நகரம் உருவாக காரணகர்த்தாவாக இருந்தவர்.

சர் தாமஸ் ஸ்டாம்போர்ட் ராஃபிள்ஸ் உடன் முதன் முதலில் சிங்கப்பூருக்கு வந்த இந்திய வணிகர் நாராயண பிள்ளை. பின்னாளில் ஆங்கிலேய ஆட்சியின் போது அரசாங்கத்தின் மிகப்பெரிய குத்தகை தாரர்களில் ஒருவராக விளங்கினார்.

ஆரம்பகாலத்தில் சிங்கப்பூரில் குடியேற்றம் செய்யப்பட்ட பல்லின மக்களில் இந்திய, சீன சமூகத்தினர் கூலித்தொழிலாளிகளாகவும், மலாய் சமூகத்தினர் கடலில் மீன் பிடித்து வரும் மீனவர்களாகவும் பணி செய்து வந்தனர்.

1824 ல் ஆங்கிலேய அரசின் நேரடி ஆளுகைக்குள் வந்த சிங்கப்பூர் 1826 ல் இங்கிலாந்தின் குடியேற்ற நாடானது. இரண்டாம் உலகப்போரில் ஜப்பானியர்கள் வசமாகியது. அவர்கள் சிங்கப்பூரைதென்பகுதியின் விளக்குஎன்ற பொருளில்  ”சயனாண்டோஎன்றழைத்தனர். 1945 ல் மீண்டும் ஆங்கிலேயர்களின் ஆட்சியின் கீழ் வந்தது.

கருத்து வேறுபாடுகள், கொள்கை முரண்பாடுகளால் மலேசியாவிடமிருந்து சிங்கப்பூர் பிரிந்து செல்லட்டும் என்ற கோரிக்கை மலேசிய நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பிற்கு வந்த போது அதற்கு ஆதரவாகக் கிடைத்த வாக்குகளின் எண்ணிக்கை 126. எதிராக ஒரு வாக்கு கூட பதிவாகவில்லை. இவ்வாக்கெடுப்பில் சிங்கப்பூரின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்ளவில்லை.

சுயாட்சிப் பகுதியாக இருந்த சிங்கப்பூர் மலேசியாவில் இருந்து தனித்து விடப்பட்ட பின் 1965 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 9 ந் தேதி  தனிக் குடியரசு நாடாக மலர்ந்தது.

சுயாட்சி பெற்ற சிங்கப்பூரின் பிரதமராக இருந்த லீ குவான் யூ தனிக் குடியரசு நாடாக மாறியிருந்த சிங்கப்பூரின் பிரதமராகவும் தொடர்ந்தார். ”நவீன சிங்கப்பூரின் தந்தைஎன்று போற்றப்படும் இவர் 1959 முதல் 1990 ம் ஆண்டு வரை பிரதமராக பதவி வகித்தார்.

தோட்ட நகரம்என்றழைக்கப்படும் சிங்கப்பூரின் அலுவல் முறைப் பெயர்சிங்கப்பூர் குடியரசு” (THE REPUBLIC OF SINGAPORE).

63 தீவுகளைக் கொண்ட சிங்கப்பூரின் பெரிய தீவான சிங்கப்பூரின் பெயரிலேயே நாடும் அழைக்கப்படுகிறது. ஒரு நகரின் பெயரையே நாட்டின் பெயராகக் கொண்டிருப்பது இதன் சிறப்பு.

சதுப்பு நிலங்களை அழித்து குடியேற்றப்பகுதியாக தொடங்கப்பட்ட சிங்கப்பூரின் தற்போதைய பரப்பளவு 715.8 சதுர கிலோ மீட்டர். தீவின் பெரும் பகுதி நிலப்பரப்பு கடலில் இருந்தே பெறப்பட்டது.

சிங்கப்பூர் நாணயத்தின் பெயர்சிங்கப்பூர் டாலர்” (சிங்கப்பூர் வெள்ளி). தேசியச் சின்னம் சிங்கத்தின் தலையும், மீனின் உடலும் கொண்டசிங்கமீன்” (MERLION). தேசிய மலர்வெண்டா மிஸ் ஜோக்கிம்” (VANDA MISS JOAQUIM).

தேசியக் கொடி இரு வர்ணங்களைக் கொண்டது. சரிபாதியாக பிரிக்கப்பட்டிருக்கும் கொடியின் மேற்பகுதி சிவப்பு நிறத்தையும், கீழ்பகுதி வெள்ளை நிறத்தையும் கொண்டிருக்கும். சிவப்பு நிறம் உலக சகோதரத்துவம் மற்றும் மனிதர்களுக்கிடையேயான சமத்துவத்தையும், வெள்ளை நிறம் நல்லொழுக்கம் மற்றும் தூய்மையையும் குறிக்கும். சிவப்பு நிறப்பகுதியின் இடது பக்க ஓரத்தில் ஒரு சிறு பிறை நிலவு மற்றும் ஐங்கோண வடிவில் அமைந்த ஐந்து நட்சத்திரங்கள் இருக்கும். பிறைநிலவு புதிய தேசம் என்ற குறீயீடையும், ஐந்து நட்சத்திரங்கள் நீதி, சமாதானம், சமத்துவம், முன்னேற்றம், ஜனநாயகம் ஆகியவைகளையும் குறிக்கும்.

இருபதாயிரம் கிண்ணக்கேக்குகளைப் (CUP CAKE) பயன்படுத்தி உருவாக்கப்பட்ட சிங்கப்பூரின் தேசியக் கொடி கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. 2012 ம் ஆண்டு சுதந்திர தினத்தின் போது 22,410 சதுர அடி பரப்பளவில் வரையப்பட்ட தேசியக்கொடி உலக சாதனையாகப் பதிவானது.

தேசிய மொழி மலாய்அலுவல் மொழி ஆங்கிலம். இவ்விரண்டையும் தவிர சீனம் (மாண்டரின்), தமிழ் ஆகிய இரு மொழிகளும் ஆட்சி மொழிகளாக அதிகாரப்பூர்வமாக ஏற்றுக் கொள்ளப்பட்ட மற்ற மொழிகள்.

தேசிய கீதம்மாஜீலா சிங்கப்பூரா” (முன்னேறட்டும் சிங்கப்பூர்). மலாய் மொழியில் தேசிய கீதத்தை இயற்றியவர் சுபிர் சயித். 1958 ல் சிங்கப்பூரின் நகர அவையில் பாடுவதற்காக அவர் எழுதி இசையமைத்த பாடல் 1959 ல் சுயாட்சி பெற்ற சிங்கப்பூரின் பாடலாக இருந்தது. பின்னர் சுதந்திரக் குடியரசாக சிங்கப்பூர் மாறிய பின் 1965 ம் ஆண்டு நாட்டின் தேசிய கீதமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

தேசிய கீதம் இயற்றப்பட்ட மலாய் மொழியிலேயே பாடப்பட வேண்டும் என்ற சட்டம் இருந்தாலும் அதிகாரப்பூர்வ அலுவல் மொழிகளில் அதற்கான மொழிபெயர்ப்புகள் உண்டு. 1967 ம் ஆண்டு முதல் ஜேசுதாசன் என்ற தமிழாசிரியர் தமிழில் இயற்றிய புதிய தேசியப் பாடல் பள்ளிகளிலும், தேசிய தின விழாக்களிலும் பாடப்பட்டு வருகிறது.

சிங்கப்பூரின் தேசியப் பற்றுதியை (NATIONAL PLEDGE) எழுதியவர் எஸ்.இராஜரெத்தினம்.

சிங்கப்பூரின்பழைய பாதுகாவலர்கள்” (THE OLD GUARD) என்றழைக்கப்பட்டவர்கள் லீ குவான் யூ, எஸ். இராஜரெத்தினம், கோ கெங் சுவீ, டோ சின் சை.

1954 ல் லீ குவான் யூவும், அவரது நண்பர்கள் நான்கு பேரும் இணைந்து உருவாக்கிய மக்கள் செயல் கட்சி (PAP) 2004 ம் வருடம் பொன் விழா கொண்டாடியது. 1959  ம் ஆண்டு முதல் அக்கட்சி தொடர்ந்து தேர்தலில் வெற்றி பெற்று வருகிறது.

ஆட்டோக்கள் இல்லாத நாடு. உலகின் முதலாவது இளையர் ஒலிம்பிக் விளையாட்டை (2010 ம் ஆண்டு) நடத்திய நாடு. அரசியல் தலைவர்களின் சிலைகள் இல்லாத நாடு. வரையறுக்கப்பட்ட இடங்கள் தவிர மற்ற இடங்களில் விளம்பரப் பலகைகள், அரசியல் பேனர்கள் வைக்கவும், சினிமா போஸ்டர்கள், துண்டுப் பிரசுரங்கள் ஒட்டவும் அனுமதியில்லாத நாடு.

நாட்டின் மொத்த மக்கள் தொகையில் அதிக வெளிநாட்டவர்களைக் கொண்டிருக்கும் நாடுகளில் ஆறாவது இடத்தை வகிக்கும் இந்நாட்டு குடிமக்கள் அனைவருக்கும் அடையாள அட்டை 1948 ம் ஆண்டில் இருந்து  கட்டாயமாக்கப்பட்டது. குழந்தை பிறப்பு குறைவாக இருக்கும் நாடுகளுள் ஒன்று.

ஆசியாக் கண்டத்தில் பாதுகாப்பான நாடு”. ”குற்றங்கள் குறைவாக நிகழும் நாடு”. ”உலகின் இரண்டாவது நவீன நகரம்”. ”ஆசியாவின் அமெரிக்கா”. ”தென்கிழக்காசியாவில் பணக்கார நாடு”, ”ஆசியத் தொழிலாளர்களின் சொர்க்கம்எனப் பெயர் பெற்ற சிங்கப்பூர் புலம் பெயர்ந்தவர்கள் வாழ ஏற்ற முதல் பத்து நாடுகளுள் ஒன்றாகவும் திகழ்கிறது.

சிங்கப்பூரின் முதல் தமிழ் பள்ளி 1834 ல் தொடங்கப்பட்டது. பதினெட்டு மாணவர்களுடன் தொடங்கப்பட்ட அப்பள்ளி ஓரே ஆண்டில் மூடப்பட்டது.

தென் கிழக்காசியாவில் தமிழை அதிகாரத்துவ ஆட்சி மொழியாக கொண்டுள்ள ஒரே நாடு. தவிர, இங்கு அமைந்திருந்த உமறுப்புலவர் தமிழ் பள்ளியில் தான் தென்கிழக்காசியாவிலேயே உயர்நிலைக் கல்வி வரை தமிழில் பாடங்கள் கற்பிக்கப்பட்டது.

உலகின் சிறந்த நூறு பல்கலைக் கழகங்களில் இரண்டு இங்கு உள்ளது. 1) நன்யாங் தொழில் நுட்ப பல்கலைக் கழகம் 2) சிங்கப்பூர் தேசியப் பல்கலைக் கழகம். நன்யாங் தொழில் நுட்ப பல்கலைக் கழகம் 1956 ம் ஆண்டும், சிங்கப்பூர் தேசியப் பல்கலைக் கழகம் 1980 ம் ஆண்டும் தொடங்கப்பட்டது.

சிங்கப்பூரின் முதல் சீன நாளிதழ் 1881 ம் ஆண்டு வெளிவருவதற்கு முன்பே 1876 ம் ஆண்டிலேயேசிங்கை வர்த்தமானி”, ”சிங்கை நேசன்போன்ற தமிழ் இதழ்கள் வெளியிடப்பட்டன. இவ்விதழ்களை நடத்தியவர் மகுதூம் சாயபு. தற்போது சிங்கப்பூரில் வெளிவரும் ஒரே தமிழ் தேசிய நாளிதழ்தமிழ் முரசு”. இவ்விதழ் வெளிவரக் காரணமாக இருந்தவர் கோ. சாரங்கபாணி.

ஆரம்பத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களால் அதிபர் நியமனம் செய்யப்பட்டார். 1991 ல் அரசியல் சாசன திருத்தத்திற்கு பின் மக்கள் தங்கள் வாக்குகள் மூலம் நாட்டின் அதிபரைத் தேர்வு செய்கின்றனர். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் அதிபர்ஒங் டெங் சியோங்”. இதுவரை அதிபராக இருந்த ஆறு பேரில் இருவர் இந்திய வம்சா வழியினர். ஒருவர் S.R.நாதன் என்றழைக்கப்படும் செல்லப்பன் ராமநாதன். இவர் இரண்டு முறை (1999, 2005) அதிபராக பதவி வகித்தார். மற்றொருவர் 1981 ம் ஆண்டு நாட்டின் மூன்றாவது அதிபராக இருந்த தேவன் நாயர்.

அதிபரின் அதிகாரப் பூர்வ இல்லத்தின் பெயர்இஸ்தானா”. இதைக் கட்டியவர்கள் ஆங்கிலேயர்களின் ஆட்சிக் காலத்தில் தீவின் பல பகுதிகளில் இருந்தும் கொண்டு வரப்பட்ட சிறைக் கைதிகள்.

சிங்கப்பூர் நாடாளுமன்றத்துக்குத் தேர்வு செய்யப்பட்ட முதல் பெண் சபாநாயகர்ஹலீமா யாகூப்”. இவர் இந்திய வம்சா வழியைச் சேர்ந்தவர்.

SBS என்றழைக்கப்படும் பொதுப் பேருந்து சேவை 1973 ம் ஆண்டு தொடங்கப்பட்டது.  

அயர்ராஜா அதிவிரைவுச்சாலை(AYE), புகிட்திமா அதிவிரைவுச்சாலை(BKE), செண்ட்ரல் அதிவிரைவுச்சாலை(CTE), சேலேடர் அதிவிரைவுச்சாலை(SLE), ஈஸ்ட்கோஸ்ட் அதிவிரைவுச்சாலை(ECP), கல்லாங் பயோலேபர் அதிவிரைவுச்சாலை(KPE),  கிராஞ்சி அதிவிரைவுச்சாலை(KJE), டெம்பனீஸ் அதிவிரைவுச்சாலை(TPE), பான்ஐலேண்ட் அதிவிரைவுச்சாலை(PIE) ஆகிய ஏழு அதிவிரைவுச் சாலைகளை உள்ளடக்கி இருக்கும் சாலைகளின் மொத்த நீளம் 3,356 கிலோ மீட்டர்.  இன்றைய சிங்கப்பூரின் பிரதான சாலைகளாகத் திகழும் சிராங்கூன் சாலை, தாம்சன் சாலை, புக்கிட் தீமா சாலை ஆகியவைகள் ஆங்கிலேயர்கள் தங்கள் ஆட்சிக் காலத்தில் சதுப்பு நிலங்களை அழித்துச் சாலைகளை அமைக்கக் கொண்டு வந்த சிறைக்கைதிகளால் அமைக்கப்பட்டவைகள்!

முதல் இரயில் பாதைக்கான கட்டுமானப் பணி 1983 ம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஐந்து பில்லியன் வெள்ளியில் தொடங்கப்பட்ட இத்திட்டத்தின் முதல் கட்டமாக 1987 நவம்பர் 7 ந் தேதி யோசூகாங்தோபாயோ இடையே முதன் முதலில் இரயில் சேவை தொடங்கப்பட்டது. நாட்டின் வரலாற்றில் அதிக நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்பட்ட திட்டம் இது.

கடலில் இருந்து மீட்கப்பட்ட நிலத்தில் கட்டப்பட்டிருக்கும் சர்வதேச விமான நிலையமான சாங்கி விமானநிலையம் தென் கிழக்காசியாவில் முக்கியத்துவம் வாய்ந்த விமான நிலையமாகும். இந்த விமான நிலையத்தைக் கட்டும் பணி 1975 ல் தொடங்கப்பட்டது. ஆறு ஆண்டுகளில் பணி முடிக்கப்பட்டு 1981 டிசம்பர் 29 ந் தேதி நாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டது. முதல் சர்வதேச விமான நிலையம் காலாங் விமான நிலையம்.

சாங்கி விமான நிலைய உருவாக்கத்திற்கான அஸ்திவாரத்தை அமைத்துக் கொடுத்தவர்கள் ஜப்பானியர்கள். இரண்டாம் உலகப் போரின் போது தங்களுடைய போர் விமானங்களை தரையிறக்க கடற்கரையை ஒட்டி அமைந்திருந்த சாங்கி பகுதியில் விமானத் தளங்களை அவர்கள் தான் முதன்முதலில் அமைத்தனர். இந்தக் கடற்கரை தான் நாட்டின் ஒரே இயற்கைக் கடற்கரை.

உலகில் பரபரப்பான இரண்டாவது துறைமுகத்தைக் கொண்டிருக்கும் இந்நாடுபசிபிக் பெருங்கடலின் சாவிஎன்றழைக்கப்படுகிறது.  ஆசியாவிலேயே அதிக அளவில் எண்ணெய் சுத்திகரிப்பு நடைபெறும் நாடுகளுள் ஒன்றாகத் திகழுவதால் வளைகுடா நாடுகளிலிருந்து நாள்தோறும் எண்ணெய் சுத்திகரிப்பிற்காக ஏராளமான கப்பல்கள் இங்குள்ள துறைமுகத்திற்கு வந்து போகின்றன.

ஆசிய நாடுகளில் பொருளாதாரத்தில் முன்னேறிய நாடுகள்நான்கு ஆசியப் புலிகள்அல்லதுநான்கு ஆசிய டிராகன்” (FOUR ASIAN TIGERS OR ASIAN DRAGONS) என்றழைக்கப்படுகிறது. அந்த நான்கு ஆசியப் புலிகளில் சிங்கப்பூரும் ஒன்று. மற்ற நாடுகள்ஹாங்ஜாங், தைவான், தென் கொரியா.

உலகில் சூதாட்டத்திற்கான இரண்டாவது பெரிய சந்தையைக் கொண்டிருக்கும் நாடு. ஊழல்கள் மிகக் குறைவாக உள்ள நாடு. சுயிங்கம் (SEWING GUM) விற்பனை, பட்டாசு வெடித்தல் முதலியவைகளைத் தடை செய்துள்ள நாடு. உலகிலேயே அதிக ஆண்டுகள் ஒரே பிரதமரைக் கொண்டிருந்த நாடு. பொதுப் போக்குவரத்துகளான பேருந்து, இரயில்களில் உனவுப் பொருட்கள், குளிர் பாணங்கள் அருந்த அனுமதியில்லாத நாடு. இரு சக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிவதைக் கட்டாயமாக்கி இருக்கும் நாடு.

இரண்டாம் உலகப் போரின் போது 80,000 ஆங்கிலேயத் துருப்புகளை ஜப்பான் பிணைக்கைதிகளாக பிடித்தது. “மாபெரும் நஷ்டம்என அப்போதைய இங்கிலாந்தின் பிரதமர் சர்ச்சிலால் கூறப்பட்ட அந்த நிகழ்வின் போது சிங்கப்பூரைக் கைப்பற்றிய ஜப்பானியர்கள் அங்கிருந்த ஆங்கிலேயர்களின் இராணுவ மருத்துவமனையில் மிகப் பெரிய படுகொலையை நிகழ்த்தினர். ஆங்கிலேய ஆட்சி பீடத்தில் மிகப் பெரிய தழும்பாக மாறிய அப்படுகொலை நிகழ்ந்த மருத்துவமனைஅலெக்சாண்ட்ரா மருத்துவமனை”.

18 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள் அனைவரும் கட்டாய இராணுவப் பயிற்சிக்குச் செல்லுதல் வேண்டும். அவர்கள் மட்டுமே பணிகளில் சேர முடியும். ஆரம்பத்தில் சிங்கப்பூருக்கு இராணுவ மேம்பாட்டிற்கான உதவிகளைச் செய்த நாடு இஸ்ரேல்.

மின்னனு பொருட்கள், வேதிப் பொருட்கள், எண்ணெய் சாராப் பொருட்கள் ஏற்றுமதி, எண்ணெய் சுத்திகரிப்பு, கப்பல் கட்டுமானம் என தொழில் துறையில் அபார வளர்ச்சி கண்டிருக்கும் சிங்கப்பூர் தனிநாடாக மலர்ந்த போது இருந்த தொழிற்சாலைகளின் எண்ணிக்கை 12 மட்டுமே!

சிங்கப்பூர் வரலாற்றில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய வேலை நிறுத்தப் போராட்டம் துப்புரவுத் தொழிலாளர்கள் சங்கத்தால் 1967 ம் ஆண்டு நடத்தப் பட்டதுபொது நாட்கூலி தொழிற்சங்க கூட்டமைப்பில் (PUBLIC DAILY RATED EMPLOYEES UNION) அங்கம் வகித்த இச்சங்கத்தில் மூவாயிரம் தொழிலாளர்கள் உறுப்பினர்களாக இருந்தனர். 2400 பேர் கலந்து கொண்ட இப்போராட்டம் நாள் ஒன்றுக்கு ஒரு சிங்கப்பூர் டாலர் ஊதிய உயர்வு கேட்டு நடைபெற்றது.

சிறைக்கைதிகளால் 1827 ம் ஆண்டு கட்டப்பட்ட மகா மாரியம்மன் ஆலயம்  சிங்கப்பூரின் முதல் இந்துக் கோயில் ஆகும். இக்கோயிலுக்காக தரப்பட்ட நன்கொடைகள் தாங்கிய கல்வெட்டு தான் சிங்கப்பூரின் முதல் தமிழ் கல்வெட்டாக விளங்குகிறது. இக்கோவில் அமையக் காரணமாக இருந்தவர் நாராயண பிள்ளை.

1909 ல் சிங்கப்பூரில் மின்வசதி பெற்ற முதல் கட்டிடம் என்ற பெருமையை உடையது ஆர்மீனியன் சர்ச். நாட்டின் இரண்டாவது தேவாலாயமான இந்த சர்ச் 1835 ம் ஆண்டு கட்டப்பட்டது. இத்தேவாலாயத்தை நிர்மாணித்தவர் ஜார்ஜ் கோல்மன்..

ஆங்கிலேயர்களின் ஆட்சியின் போது கூர்கா படைப்பிரிவு தங்கியிருந்தபிளாகாங்க் மத்திஎன்ற தீவே தற்போதுசெந்தோசா தீவுஎன்ற பெயரில் சுற்றுலாமையமாகத் திகழ்கிறது. பிளாகாங்க் மத்தி என்றால்மரணத்திற்குப் பின்னால்என்று பொருள். நாள் தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகளைக் கவர்ந்து வரும் இத்தீவின் நீளம் மூன்று கிலோ மீட்டர். அகலம் ஒரு கிலோ மீட்டர்.

இந்தியர்களின் மரபுடைமை மையமாக லிட்டில் இந்தியாவும், சீனர்களின் மரபுடைமை மையமாக சைனா டவுன் பகுதியும், மலாய் சமூகத்தினரின் மரபுடைமை மையமாக கேலாங்சிராய் பகுதியும், யுரேசியர்களின் (ஐரோப்பியர்களின்) மரபுடைமை மையமாக ஆர்ச்சர்ட் பகுதியும் திகழ்கிறது. இப்பகுதிகளில் இருக்கும் சில பகுதிகளை அதன் பழைய தன்மைகள் சிதையாமல் அரசாங்கம் அப்படியே பேணிக்காத்து வருகிறது.

நன்றி : வாதினி மாத இதழ்