Monday, 18 February 2019

பொய்த்துப் போகும் அனுமானங்கள்!

நேற்று சகோதரனின் வீடு குடியேறும் நிகழ்வு இருந்தது. நிகழ்வில் உறவினர்கள் வருகை இருக்கும் என்பதால் மற்ற குழந்தைகளோடு அவனும் இருக்கட்டும் என அப்பாவும், அம்மாவும் சொன்னார்கள்

சில தினங்களுக்கு முன் கடும் வயிற்றுப் பிரச்சனைக்காக மருத்துவக் கண்காணிப்பில் இருந்திருந்தான்

இதனால் நேற்று (17.02.2019) தினமணி நாளிதழோடு இணைந்து பரமக்குடியில் நடைபெற்ற மாநில அளவிலான கராத்தே டோர்னமென்டிற்கு மகனை அனுப்ப வேண்டாம் என நினைத்திருந்தேன். என் அபிப்ராயத்தை அவனிடம் சொ்ன்னேன்.

"அதுலாம் பிரச்சனை இல்லை டாடி. கலந்துக்கலாம். அப்புறம் உங்க இஷ்டம்" எனச் சொல்லி விட்டு பள்ளிக்கூடம் போய் விட்டான்

கடந்த வெள்ளிக்கிழமை பள்ளியில் இருந்து அழைத்தான். "டோர்னமென்டுக்கு பெயர் கொடுக்கவா டாடி? மாஸ்டரும் என் பெயரை சேர்த்துக்கிறேன்னு சொல்லியிருக்காங்க" என்றான்.

இம்முறை பழைய காரணங்களைச் சொல்லாமல், "பயிற்சிக்கு ஒரு வாரமாகப் போகலையே. பயிற்சி பண்ண இப்ப நேரமும் இல்லையேடா" என புதிய காரணத்தைச் சொன்னேன். நம்ம புத்திசாலித்தனம் அந்த மட்டம் தானே

அவனோ......”முன்னாடியே நான் செஞ்சது தான். புதுசா பயிற்சி தேவையில்ல டாடி. என்னால முடியும். நீங்க எங்க மாஸ்டரிடம் பேசிடுங்க”  என சொன்னான்.

மகனின் கராத்தே பயிற்சியாளரும், நண்பருமானகராத்தே கண்ணன்மாஸ்டரை அழைத்தேன். "கிளாஸ்க்கு அவன் தொடர்ந்து வரலையே. டோர்னமென்டுக்கு அனுப்பினால் சரியாக இருக்குமா? " என சந்தேகமாய் கேட்டேன்

"கட்டாயம் அனுப்புங்க. மாநில அளவிலான போட்டி. நம்ம ஊருக்குப் பக்கத்துல நடக்குது. இதுக்கு முன்னாடி மாநில அளவிலான போட்டியில பரிசு அடிச்சவன் அவன். இந்த முறையும் கட்டாயம் பரிசு எடுப்பான். சனிக்கிழமை காலை கிளாஸ்க்கு அவனை அனுப்புங்க. நான் பார்த்துக்கிறேன்" என்றார். நானும் சம்மதித்தேன்.

மாஸ்டரிடம் சம்மதம் சொல்ல இன்னொரு காரணமும் இருந்தது. முன்பொரு முறை நடைபெற்ற மாவட்ட அளவிலான போட்டிக்கு மகனை அனுப்ப விரும்பினேன். அவரோ, "அவன் இன்னும் கொஞ்சம் தயாராகட்டும். அவசரப் பட வேண்டாம். அவன் தகுதி நிலைக்கு வரும் போது நானே அவன் பெயரைச் சேர்த்து விடுவேன் " என்றார். பயிற்சியாளருக்குத் தெரியாதா தன் மாணவனைப் பற்றி!

மாஸடர் அவன் மீது வைத்த நம்பிக்கை வீண்போக வில்லை. கட்டா பிரிவில் மாநில அளவில் நேற்று நடைபெற்ற போட்டியில் இரண்டாம் இடம் பிடித்தான். நம் அனுமானங்கள் பல நேரங்களில் இப்படியாகப் பொய்த்துப் போய் விடுகின்றன. இந்த வருடத்துக்கான முதல் வேட்டையை இப்படியாக ஆரம்பித்திருக்கிறான்.

No comments:

Post a Comment