Tuesday, 19 February 2019

ஓலைச் சுவடிகளுக்குக் கெளரவம் தந்த உ.வே.சா.

இந்தப் பெரியவரைப் பார்க்கும் போதும், இவர் பேச்சைக் கேட்கும் போதும் இவர் அடிநிழலில் இருந்து தமிழ் கற்க வேண்டும் என்று தோன்றுகிறதுஎன்று மகாத்மா காந்தியடிகளால் புகழப்பட்டவர் .வே.சா. உத்தமதானபுரம் என்ற ஊரில் பிறந்த .வே.சா அவர்களுக்கு பெற்றோர் இட்ட பெயர் வேங்கடராமன். ஆனால் அப்பெயரை அவரின் பெற்றோர்களே பயன்படுத்தவில்லை. சாமிநாதன் என்று பெயரிட்டு அழைத்தனர். நண்பர்களோசாமாஎன்றழைத்தனர். உத்தமதானபுரம் வேங்கட சுப்பிரமணிய சாமிநாதன் என்ற அவருடைய முழுப்பெயர் பின்னர் .வே.சா. என்றானது.

தன் வாழ்நாள் முழுக்க ஓலைச்சுவடிகளைத் தேடி அலைந்து அதைப் பதிப்பிக்க .வே.சா. ஒரு போதும் வருந்தியதில்லை. அதைத் தன் வாழ்நாள் பணியாகவே செய்தார். அவருடைய அந்திமகாலத்திற்குச் சில மாதங்களுக்கு முன், ”உங்களுக்கு மறுபிறவி வாய்த்தால் என்ன செய்வீர்கள்?” என ஒரு பத்திரிக்கை துணையாசிரியர் கேட்டார்.

அதற்கு .வே.சா, ”தமிழுக்காகவே நான் மறுபிறவி எடுக்க விரும்புகிறேன். அப்படி மறுபிறவி எடுத்து எங்காவது பிறந்து விட்டால் இந்த ஓலைச்சுவடிகளைத் தேடிச் சேகரிக்க முடியாதேஎன்றாராம். அக்காலத்தில் பெரும்பாலான நூல்கள் ஓலைச்சுவடிகளிலேயே இருந்தனமாணவர்கள் ஆசிரியரிடம் பயில இருக்கும் நூல்களை ஓலைகளில் இருந்து படியெடுத்து வைத்துக் கொள்வர். தான் படிக்கும் காலத்திலேயே அப்படி பல நூல்களைப் படியெடுக்கப் பழகியிருந்ததால் .வே.சா. அவர்களுக்கு ஓலையில் எழுத்தாணி கொண்டு விரைந்து எழுதும் பழக்கம் இருந்தது. அதனால் ஓலைச் சுவடிகளைத் தேடிச் செல்லும் போதெல்லாம் அவைகளைத் தர மறுப்பவர்களிடம் கெஞ்சி ஒரு படியெடுத்துக் கொள்வார்.

ஓலைச்சுவடி ஒருவரிடம் இருக்கிறது எனத் தெரிந்தால் போதும். அடுத்த கணமே அங்கு சென்று விடுவார். ஒருமுறை தஞ்சையைச் சேர்ந்த ஜைனர் ஒருவர் சீவக சிந்தாமணி சுவடி வைத்திருப்பது அறிந்து அங்கு சென்றார். அவரோ அந்நிய மதத்தவரான உங்களுக்கு ஓலைச் சுவடியைத் தரமாட்டேன் எனச் சொன்னார். கூடவே சைவர்கள் ஜைனர்களை துச்சமாக மதிப்பவர்கள். அதனால் தரமுடியாது  என்றார். .வே.சா. அவர்கள் அசரவில்லை. அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகருமன்றோ? தொடர்ந்து அவர் வீட்டிற்குச் சென்று ஓலைச் சுவடியை வாங்கினார். இப்படி எண்ணற்ற நிகழ்வுகள் உண்டு.  

.வே.சா. பற்றி இராமானுச ஆசாரியார் எழுதியுள்ள குறிப்புரையில்,  “நடுக்காட்டில் இருக்கும் ஒரு ஜைன மடத்திலோ அல்லது சாமானியர் ஒருவர் வீட்டிலோ எங்கு ஏடு இருக்கிறது என்று அறிந்தாலும் உடனே .வே.சா. அங்கு சென்று நிற்பார். .வே.சா. போய் பார்த்திராத பழைய வித்வானுடைய வீடு இராது என்று நிச்சயம் சொல்வேன்என்கிறார். இக் குறிப்பில் இருந்து .வே.சா. ஓலைச் சுவடிகளைத் தேடிச் சேகரிப்பதில் கொண்டிருந்த முனைப்பு விளங்கும்.

தன் தேடுதலால் ஓலைச்சுவடிகளுக்கு ஒரு கெளரவம் கிடைக்கச் செய்த .வே.சா. அவர்களின் தேடல் ஒன்றிலிருந்து ஒன்று என்றே தொடர்ந்தது. சீவக சிந்தாமணி பற்றி ஆராய்ச்சி செய்து கொண்டிருந்த போது அதற்கு உரை எழுதிய நச்சினார்க்கினியார் தரும் மேற்கோள் பாடல்கள் எந்தெந்த நூல்களில் உள்ளது எனக் கண்டுபிடிக்க பழைய இலக்கிய ஓலைகளைத் தேட ஆரம்பித்தார். அப்போது அவர் கண்டெடுத்தது எட்டுத்தொகை நூல்கள். இப்படியாக தன்னுடைய தேடல்கள் வழி அவர் தமிழின் அடையாளமாக, தமிழனை அடையாளப்படுத்துபவைகளாக, தமிழனின் மரபை, அவன் வாழ்வியலை பறை சாற்றுபவைகளாக இருந்த பல இலக்கியங்களைக் கண்டு நூல்களாகப் பதிப்பித்தார்.

சேகரித்த ஓலைச்சுவடிகளை வரிசைப்படுத்தி அப்படியே .வே.சா. பதிப்பிப்பதில்லை. அவைகளை ஒப்பு நோக்கி, படியெடுத்தவர்கள் ஏதும் தவறு செய்திருந்தால் அவைகளைக் களைந்து, சொல் வேறுபாடு, பொருள் வேறுபாடு, இலக்கண வழுக்கள் நீக்கி  பதிப்பிப்பார். அதனால் அவர் பதிப்பித்த நூல்கள் அத்தனை சிறப்புடையதாய் இருந்தன. தவிர, அவைகள் மறு பதிப்பு காணும் சமயங்களில் கூடுதல் ஓலைச்சுவடிகள் கொண்டு அவைகளை ஒப்பு நோக்கி பிழைதிருத்தி பதிப்பிப்பார்.

ஆரம்ப காலத்தில் சிலப்பதிகாரம் பற்றி கிடைத்த ஒவ்வொரு ஓலைச்சுவடியிலும் ஒவ்வொரு மாதிரியான தொடர்கள் இருந்ததால் இளங்கோவடிகள் எழுதிய வரி எது என்பதைக் கண்டடைவதில் தமிழாசிரியர்களுக்குக் குழப்பம் இருந்தது. குடந்தைக் கல்லூரியில் .வே.சா. தமிழாசிரியராய் இருந்த போது சிலப்பதிகாரத்தின் முதல் நான்கு காதை பாடமாக வைக்கப்பட்டிருந்தது.  அப்பொழுது அச்சில் இருந்த பதிப்பில், ”சேரமான் பெருமான் நாயனார் இயற்றிய சிலப்பதிகாரம்என பதிப்பித்திருந்தது. இதைக் கண்ட .வே.சா. அதிர்ந்து போனார். திருவாடுதுறை மடத்திற்குச் சென்று பழைய சுவடிகளை ஆராய்ந்து சிலப்பதிகாரத்தை இயற்றியவர் இளங்கோவடிகளே என உறுதி செய்தார். பின்னாளில் சிலப்பதிகாரத்தை பலவித ஒப்பு நோக்கல்களுடனும் மூன்று முறை பதிப்புச் செய்தார். தான் பதிப்பித்த நூல்களை திருவாடுதுறை ஆதினத்திற்கு சமர்பித்து வந்த .வே.சா. அவர்கள் மேலை நாட்டில் இருந்த ஜி.யு. போப்பிற்கும் அனுப்பி வைப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இருவருக்குமிடையே தமிழ் சார்ந்து கடிதத் தொடர்பும் இருந்து வந்தது.

ஒரு நூலை பதிப்பிக்கும் போது அதில் அந்நூலின் முன்னுரை, அப்பதிப்பு விபரம், நூலாசிரியர் வரலாறு, நூல் வரலாறு, நூலின் சுருக்கம், அந்த நூலில் இடம் பெற்றிருக்கும் அடிகள் வேறு எந்த நூல்களில் அல்லது உரையாசிரியர்களால் எடுத்தாளப்பட்டிருக்கிறது போன்ற விளக்கங்களையும் இணைத்திருப்பார். நவீன அச்சு வசதிகள், தேடு பொறிகள் வந்து விட்ட இக்காலத்தில் பதிப்பிக்கப்படும் உரை நூல்களில் கூட இப்படியான தகவல்கள் இடம் பெறுவதில்லை. ஆனால் .வே.சா. பதிப்பித்த எல்லா நூல்களிலும் மேற்கூறிய தகவல்கள் இடம் பெற்றிருக்கும்.

மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையின் மாணவன், தமிழ் பேராசான் தியாகராச செட்டியாராலும், திருவாடுதுறை ஆதினத்தால் போற்றப்பட்டவன், உயர் பட்டங்களைப் பெற்றவன் என்ற கர்வம் .வே.சா. அவர்களிடம் துளியும் இருந்ததில்லை. தனக்கு ஏதேனும் ஒரு சொல்லுக்குப் பொருள் தெரியாவிட்டால் கற்றார், மற்றார் என்று பாராது எல்லோரிடத்திலும் தன் ஐயத்தினைக் கூறி விளக்கம் கேட்பார்அவர்கள் சொல்லுவதைக் குறித்துக் கொள்வார். பின் இலக்கிய நூல்களிலும் தேடுவார். அவ்வாறு கேட்டு, ஆய்ந்து உறுதி செய்தவைகளையே பயன் படுத்துவார்.

திருவாடுதுறை ஆதினத்தில் தங்கி தமிழ்பணி செய்து கொண்டிருந்த .வே.சா கும்பகோணம் அரசினர் கல்லூரியிலும், சென்னை மாநிலக் கல்லூரியிலும் தமிழாசிரியராய் பணியாற்றி ஓய்வு பெற்றார். பின்னர் ராஜா சர் அண்ணாமலை செட்டியார் வேண்டுகோளுக்கிணங்க ஸ்ரீ மீனாட்சி  தமிழ்க் கலாசாலையின் தலைவராக  நான்காண்டுகள் பணியாற்றினார். பின்னாளில் அக்கலாசாலை புகழ்பெற்ற அண்ணாமலை பல்கலைக்கழகமாக மாறியது

அரசாங்கத்தாலும், பல்வேறு தமிழ் அமைப்புகளாலும் .வே.சா. அவர்களுக்கு பல்வேறு பட்டங்கள் வழங்கப்பட்டன. 1906 ம் ஆண்டுமகா மகோபாத்தியாயஎன்ற பட்டம் வழங்கப்பட்டது. தமிழ்துறையில் அதுவரையிலும் அப்பட்டம் யாருக்கும் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 1932 ல் சென்னை பல்கலைக்கழகத்தால் .வே. சா அவர்களுக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. அவருடன் டாக்டர் பட்டம் பெற்ற இன்னொருவர் சர். சி.வி.ராமன்.

இன்று நமக்குக் கிடைத்திருக்கும் அத்தனை தமிழ் இலக்கியங்களும் . புராண நூல்களும், கோவை நூல்களும், தூது நூல்களும் , அந்தாதிகளும், பரணிகளும், மும்மணிக் கோவைகளும், நிகண்டுகளும் .வே.சா அவர்களால் தான் நமக்குக் கிடைத்திருக்கிறது என்றால் அது மிகையில்லை. ஒருவேளை அவர் இல்லாது போயிருந்தால் இவை எல்லாம் நமக்குக் கிடைத்திருக்குமா? என்பது சந்தேகமே

.வே.சா அவர்களின் எண்பதாவது வயது சதாபிஷேகத்தின் போது கல்கி  “தமிழ்தாத்தாஎன்ற பட்டத்தை வழங்கினார்அதுவே பின்னர் அவர் பெயரோடு நிலைத்து விட்டது. தன்னுடைய தீராத தேடலால் எங்கோ பனை ஓலைகளில் ஒளிந்திருந்த இலக்கியங்களை மீட்டுக் கொடுத்த .வே.சா 1942 ல் மறைந்தாலும் அவரது மகத்தான சேவையை என்றும் தமிழ் உலகம் நினைவு கூறும்.

No comments:

Post a Comment