Friday, 8 February 2019

“பொதுப்புத்தி”யைத் தகர்த்த உரையாடல்!

அலுவலகத்தில் வந்து அமர்ந்ததும் மெயில், ப்ளாக், முகநூல், கூகுள் ப்ளஸ் என  வலம் வந்த பின்பே அன்றைய வேலைகளைத் தொடங்குவது வழக்கம். அப்படி வலம் வந்த ஒரு தினத்தில் “Your Google+ account is going away on April 2, 2019”என்று கூகுள் ப்ளசில் ஒரு அறிவிப்பு இருந்தது. முகநூலில் அது பற்றிய தகவல் பகிர்வும், கூடவே அதற்கான வழிமுறைகளும் பரவத் தொடங்கியிருந்தது. நானோ அந்த அளவுக்குக் கணினித் தொழில் நுட்பம் தெரிந்தவன் இல்லை. எனக்கான ப்ளாக்கை உருவாக்க நான் மெனக்கெட்டதை விடவும் அதற்காக நண்பர்களை படுத்தி வைத்தது அதிகம். சில நேரங்களில் அவர்கள் பொறுமையிழந்து என் லாக் இன் ஐடி வாங்கி அவர்களே ப்ளாக்கில் நான் கேட்டதைச் செய்து தந்து விடுவார்கள். அப்படியான ஒரு சூழல் மீண்டும் வந்து விட்டதோ? எனத் தோன்றியது.

ப்ளாக் ஆரம்பித்த பின் என்னைப் பற்றிய அடையாளத்திற்காக அதைப் பயன்படுத்த வேண்டும் என நினைத்தேன். அதனால் அச்சில் வந்தது, அச்சுக்காக எழுதாதது, இணையத்தில் வந்தது, எழுதி வைத்து குறித்த காலத்தில் அனுப்ப மறந்தது, பிள்ளைகள், நண்பர்கள் சார்ந்த சுவராசியமான விசயங்கள், கலந்து கொண்ட நிகழ்வுகள் என அனைத்தையும் பதிவேற்றினேன். அப்பொழுது ஒரு நண்பர் சொன்னார். ”ஓசியில இடம் தர்றான்னு இருந்துடாதே. அது என்னைக்குமே ஆபத்துஎன்றார். என்ன செய்யலாம்? என்றேன். இணையத்தில் காசு கட்டி உனக்கான இடம் வாங்கலாம் என்றார். இலவசத்துக்கே பழக்கப்பட்ட மனசாச்சே. அவ்வளவு ஈசியா ஒத்துக் கொள்ளுமா? எல்லாருமா காசு கட்டி வாங்கி எழுதுறாங்க என மனசு மணியடிக்க அதைப் பற்றியெல்லாம் யாரிடமும் கேட்டு வைக்கக் கூடாது என நினைத்திருந்தேன்.

நிசப்தம்மணிகண்டன் அவருடைய ப்ளாக்கை மறு வடிவமைப்புச் செய்திருந்த நேரத்தில் இதைப் பற்றி எழுதியிருந்தார். சிங்கப்பூர் நண்பரும், எழுத்தாளருமான ஷாநவாஸ் அவர்களும் இணையத்துல எழுதனுங்கிறதுக்காக பதிஞ்சு இடம் வாங்கியாச்சு. அதைச் செய்ய நேரம் கிடைக்கமாட்டேங்குது என பேச்சு வாக்கில் சொன்னதும் நினைவுக்கு வந்து போனது. நாமும் விசாரித்து வைத்தால் என்றைக்காவது உதவுமே? என நினைத்து மீண்டும் அத்துறையில் இருக்கும் நண்பர்களை நச்சரிக்க ஆரம்பித்தேன். அதன் மூலம் உனக்கு வருமானம் வருமளவுக்கு நீ உயரும் போது அதைப் பற்றி யோசிக்கலாம். அப்படியே எதுவும் ஆனாலும் தேடி கண்டுபிடிச்சு கூகுள்காரன் தந்திடுவான் என்றார்கள். இப்போ கூகுள்காரனே சொல்லிட்டானே! விசயம் தெரிஞ்சவன் சேமிச்சு வச்சிக்கிடுவான். நமக்குத் தான் அது பற்றியெல்லாம் எதுவும் தெரியாதே! என யோசனை ஓடத் தொடங்கியது. விசிட்டிங்கார்டில் ப்ளாக் முகவரியை கெத்தா போட்டாச்சு. அதுனால இம்முறை அது பற்றிய தொழில் நுட்பம் தெரிந்த ஒருவரின் உதவியைப் பெறலாம் என நினைத்தேன். சட்டென நினைவுக்கு வந்தவர் காம்கேர். புவனேஸ்வரி. அவரைப் பற்றி இங்கேதெரிந்து கொள்ளலாம்.

நேரடி பழக்கமோ, அலைபேசியில் பேசியதோ இல்லை. முகநூலில் நண்பர் என்பதால் அவர் எழுத்துக்களை அங்கு வாசிப்பவன் என்ற அளவில் மட்டுமே எனக்கு அவரின் அறிமுகம் இருந்தது. அதற்கும் மேல் கணினித் துறையில் அவர் விற்பனர். நான் பயணிக்க விரும்பும் எழுத்துத் துறையில் புத்தகங்களில் சதமடித்தவர். அவர் புத்தகப்பட்டியலோடு போடும் பதிப்பகங்கள் பட்டியலைப் பார்த்த பின்பு தான் எனக்கும் அந்த ஆசை வந்தது. அவரளவுக்கு அந்த ஆசை நிறைவேறவில்லை என்றாலும் கொஞ்சமாக நிறைவேறி வருகிறது. அப்படிப்பட்டவரிடம் ஆலோசனையாக கேட்கும் கேள்வி எதுவும் அபத்தமாய் இருந்து விடக்கூடாது என்பதால் ஒரு வித தயக்கம் இருந்து கொண்டே இருந்தது. ஜெயமோகனிடம் போய் மகாபாரதம் படித்திருக்கிறீர்களா? என கேட்பது போலாகி விடக்கூடாதல்லவா!. இப்படி நினைக்கவும் ஒரு காரணம் இருந்தது

நவீனத்தின் அடையாளமாய் இருக்கக்கூடிய சிங்கப்பூரில் நான் பணி நிமித்தம் இருந்த காலத்தில் கிண்டில் இந்தியாவில் பிரபலமாகி விட்டிருந்திருக்கிறது. அது பற்றி எல்லாம் தெரியாமல் இருந்திருக்கிறேன். ஒருமுறை மலைகள் பத்திரிக்கை ஆசிரியரும், நண்பருமான சிபிச் செல்வன் கிண்டில் பற்றி ஒரு விபரம் கேட்டார். நானோ அப்படின்னா என்ன? எனக் கேட்டேன். அவர் என்ன நினைத்தார் என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம், ஆனால் பொறுமையாய் அது பற்றிச் சொன்னார்அதனால் கொஞ்சம் எச்சரிக்கை உணர்வு இருந்தது.

ஒரு மெயிலைப் போடுவோம். பதிலைப் பார்த்து பின் முடிவு செய்யலாம்  என நினைத்தேன். முகநூலில் இருப்பதால் மெயிலுக்கு பதில் மெசஞ்சரில் என் சந்தேகத்தைக் கேட்டிருந்தேன். ஒரு நேரத்தைக் குறிப்பிட்டு அழைக்கிறேன் என்று பதில் அனுப்பி இருந்தார். மீண்டும் சிபிச்செல்வனிடம் சிக்கிய கதையாகி விடக்கூடாது என்று மட்டும் நினைத்துக் கொண்டேன்.

குறிப்பிட்டிருந்த நேரத்தில் அழைத்ததும் என் சந்தேகங்களுக்கு நண்பர்கள் சொல்வதைப் போல டெக்னிக்கல், கோடிங் என்றெல்லாம் மிரட்டாமல் மிகப் பொறுமையாய் பதில் சொன்னார். இப்போதைக்கு ஒன்றும் ஆபத்தில்லை. அப்படி ஏதும் வரும் பட்சத்தில் என்ன செய்யலாம்? என உங்களுக்குச் சொல்கிறேன் என்றார். நோயாளிக்குத் தேவை நம்பிக்கை தானே! அது கிடைத்து விட்டது என்பதால் வேறு விசயங்கள் குறித்து பேச்சு திரும்பியது. அவருடைய உரையாடல் எதார்த்தமாய் இருந்தது

என்னவெல்லாம் செய்திருக்கிறேன்? எனச் சொன்னார். பொதுவாக பிரபலங்களில் பலரும் இப்படிச் சொல்வதோடு  நிறுத்திக் கொள்வார்கள். மிகச்சிலரே விதிவிலக்காக இருப்பார்கள். அந்த மிகச்சிலரில் காம்கேர் புவனேஸ்வரியும் ஒருவர். அவர் என்னிடம் நீங்கள் என்னவெல்லாம் எழுதியிருக்கிறீர்கள்? தகவல்கள் எப்படி சேகரிக்கிறீர்கள்? எந்த பதிப்பகங்களில் உங்கள் புத்தகங்கள் வந்திருக்கிறது? எந்த மாதிரியான தலைப்புகளில் எழுதுகிறீர்கள்? என்பன போன்ற விபரங்களைக் கேட்டார். தன்னைப் பற்றிச் சொல்ல வாய்ப்பும், தான் இரசிக்கும் துறையைப் பற்றித் தன்னோடு பேச ஒருவரும் கிடைத்து விட்டால் அந்த உரையாடல் நல்லதொரு அறிமுகமாக இருக்குமில்லையா? அதிலும் தன்னோடு உரையாடுபவர் தான் நேரம் செலவிட விரும்பும் துறையில் பயணித்து முன்னேராய் சென்று கொண்டிருப்பவர் என்னும் போது அது இன்னும் ஈரமாய் இருக்குமில்லையா? பிரபலங்கள் சார்ந்துபொதுப்புத்திமனநிலை என்பது எல்லோருக்குமானதில்லை என்பதைப் போல இருந்தது அவருடனான உரையாடல்.

தமிழ் பதிப்புலகில் தன் செலவில் ஒரு புத்தகம் போட பதிப்பாளர் சம்மதித்தால் அதுவே அந்த எழுத்தாளனுக்கு கெளரவம் என்றாகி விட்டதுஅந்த கெளரவத்தை நூறு தடவைகளுக்கு மேல் பெற்றிருப்பவர் காம்கேர்.புவனேஸ்வரி. தான் ஏற்றிருக்கும் துறையில் திறன் மிக்கவராக இருப்பதாலும், சேகரித்து வைத்திருக்கும் அனுபவத்தை பிறர் வாழ்வியலோடு பொருத்திக் காட்டும் சூத்திரம் தெரிந்திருப்பதாலும் அவரால் அது சாத்தியமாகி இருக்கிறது 

ஒருமுறை கண்ணதாசன் பதிப்பக அதிபர் காந்தி கண்ணதாசனிடம்,” காம்கேர். புவனேஸ்வரி கூட உங்கள் பதிப்பகத்தில் புத்தகம் போட்டிருக்கிறார்களே?” என நான் கேட்டு வைக்க அவரோ, “ நாங்க தான் அவர் புத்தகங்களை வெளியிட்டிருக்கிறோம்என்றார். அந்த பதிலை அவர் சொல்லி விட்டு நகர்ந்த பின்பு தான் என் கேள்வியின் பிழை புரிந்தது. அதற்குப் பின் பதிப்பக நண்பர்களிடம் இப்படியான கேள்விகளை வேறு வடிவில் கேட்கப் பழகிக் கொண்டேன். அனுபவம் தானே பாடம்  கற்றுத்தருகிறது!

ஒரு சந்தேகம் இப்படியான நண்பர்களைத் தரும். அவர்கள் மூலம் நம் நம்பிக்கையை முன் நகர்த்தும் என்றால் எத்தனை சந்தேகம் வந்தாலும் அது அபத்தமாய் இருந்தாலும் கேட்டு வைக்கலாம். தப்பில்லை என்று தோன்றியது.



No comments:

Post a Comment