Sunday, 14 November 2021

ஒரு டீ க்கு வயதானவனின் கண்ணீரா விலை?

நடைப்பயிற்சிக்கு இடையில் வழக்கமாக தேநீர் அருந்தும் கடையில் அமர்ந்திருந்தேன். இருளை தின்று செரித்து பொழுது புலர ஆரம்பித்திருந்தது. நான்கு பேர் அமரும் மேஜையில் நான் மட்டும் அமர்ந்திருந்தேன். கொஞ்சம் பழுப்பேறிய வேட்டி, சட்டை அணிந்த ஒரு பெரியவர் கையில் சில சில்லரை காசோடு சேர்த்து ரூபாய் நோட்டையும் பிடித்தபடி நான்கைந்து தடவை என்னை குறுக்கும், நெடுக்குமாய் கடந்தார். ஏதோ கேட்க நினைத்து தயங்குபவர் போல் இருந்தது. கண்களில் ஒரு ஏக்க தவிப்பும் தெரிந்தது. எனக்கு தேநீர் கொண்டு வந்த ஊழியரிடம் இன்னொரு டீ கொண்டு வாருங்கள் என்றேன்.

தேநீர் கொண்டு வந்த ஊழியர் நகர்ந்ததும் என்னை குறுக்காக கடந்த அந்த பெரியவரை அழைத்து உட்காருங்க. டீ எடுத்துக்கங்க என்றேன். சட்டென சுற்று முற்றும் பார்த்தவர் என் எதிரில் இருந்த இருக்கையில் அமர்ந்து தேநீர் கோப்பையை கையில் எடுத்துக் கொண்டார். நான் அவரை பார்ப்பதை தவிர்த்தேன். இரண்டொரு மிடறு இறக்கியவர் பத்து ரூபாய்க்கு குறையுது என தன் உள்ளங்கையை என்னை நோக்கி நீட்டினார். அவரின் உள்ளங்கையை மீண்டும் அவர் பக்கமே திருப்பினேன். யாரும் கவனிக்கிறார்களா? என்று பார்ப்பதில் கவனமாய் இருந்தார். உடனே நான் அவருக்கு அருகில் இருந்த இருக்கையில் மாறி அமர்ந்து கொண்டேன்.

கை நிறைய காசு வச்சிருந்தது போய் பத்து ரூபா காசுக்கு காலையில முகம் பார்க்க வேண்டியிருக்கு என்றார். நான் எதுவும் கேட்காமல் டீயை குடிங்க. ஆறிடும் என்றேன். நன்றி தம்பி என்று அவர் சொன்னபோது தழுதழுத்த அவரின் குரலை மீறி அவருடைய கண்கள் பனிக்க ஆரம்பித்தது. ஒரு டீக்கு வயதானவனின் கண்ணீரா விலை? என்ற எண்ணம் என்னுள் எழ ஆரம்பித்தது.

தேநீரை விரைவாக அருந்தும் பழக்கமுள்ள நான் இன்று அவர் அருந்தி முடிக்கும் வரை மெதுவாகவே அருந்தினேன். மாநகரப் பேருந்து வந்தது. அரண்மனை வாசலுக்கு போகனும் என சொல்லியபடி கடைசி மிடறை குடித்து வேகமாக எழுந்து நிறுத்தத்திற்கு ஓட எத்தனித்தவரின் கையில் ஐம்பது ரூபாய் நோட்டை அழுத்தினேன். அதை சட்டென பார்த்து விட்டு கையை மூடிக்கொண்டவர், ”இன்னைக்கு சோத்துக்கு நிக்க வைக்கலஎன சொல்லிவிட்டு நிறுத்தத்திற்கு ஓடினார். ஓயாத அலையாய் அவரின் முகபாவனையும், ”இன்னைக்கு சோத்துக்கு நிக்க வைக்கலஎன்ற சொல்லும் மனதுள் அடித்துக் கொண்டே இருக்கிறது.


 

1 comment:

  1. 2010 ல் விகடன் பிரசுரத்தில் வெளி வந்த "கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி" புத்தகம் படித்தேன்.
    ..
    கடந்த சில வாரங்களாக புத்தகங்களை வாசிக்கும் பழக்கம் வந்துள்ளது (52 வயதில்).
    ..
    சிந்தனையை தூண்டும் வண்ணம் எழுதியிருக்கிறீர்கள்.
    ..
    ஆனால் எழுத்தாளர்களின் எழுச்சி மிக்க எழுத்துக்கள் மக்களை சென்றடைவதில்லை. காரணம் வாசிப்பவர்கள் குறைவு.
    ..
    மக்களை சென்றடைந்தால் தான் சீர்திருத்தம் வரும்.
    ..
    எழுத்தாளர்கள் இது குறித்து யோசிக்க வேண்டும். இல்லை இந்த எழுத்துக்கள் கடலில் கரைத்த பெருங்காயம் போல் ஆகி விடுகிறது.
    ..
    நன்றி.
    ..
    Dr. Jawaharlal Dharmalingam, M.Tech, Ph.D.
    Civil & Structural Engineer.

    ReplyDelete