Wednesday, 10 November 2021

நான் தான் ஒளரங்கசீப்

ஒளரங்கசீப் குறித்து எழுதப்பட்ட சில தமிழ் நூல்களையும், மொகலாயர்கள் குறித்து எழுதப்பட்ட நூல்களில் பகுதியாகவும் வாசித்து இருந்ததில் அவர் குறித்து ஒரு சித்திரம் இருந்தது. எனக்கு மட்டுமல்ல பெரும்பாலானவர்களுக்கும் அப்படித் தான் இருந்ததுஇருக்கிறதுஇருந்தும் வருகிறது. இந்த நிலையில் சாருவின் -காலம் தொடரின் தொடர்ச்சியாக BYNGE ல்நான் தான் ஒளரங்கசீப்தொடருக்கான அறிவிப்பைக் கண்டபோது அந்த சித்திரத்திற்கு இன்னும் ஒரு வலுவான வெளிச்சத்தை தரப்போகிறாரோ? என்றே நினைத்தேன். அரைத்த மாவையே அரைக்கும் கதையாய் இருக்கக்கூடிய தமிழ் நூல்களின் தரவுகளை திரும்பவும் எடுத்து காட்டுவதை ஒரு போதும் சாரு செய்ய மாட்டார் என்பதோடு நேரடி நூல்கள் தவிர்த்து பிற மொழியாக்க நூல்களி்ல் அவருக்கு இருக்கும் பரந்து பட்ட தேடல்கள் வழி அசல் வடிவின் தரவுகளை முன் வைப்பார் என்பதாலும் அந்த எண்ணம் இன்னும் உறுதியானது. ஆனால், முன் முடிபாய் மனதில் பதிந்து போயிருந்த அந்த எண்ணத்தை ஒளரங்கசீப் அடித்து கடாசி விட்டார்.

அசோகர் தனக்காகவும், அவருக்காக நேருவும், இவர்களுக்காக பெரும்பாலான வரலாற்றாசிரியர்களும் தமிழில் நெய்து வைத்திருக்கும் போலி ஜரிகைகளிலான பட்டாடையை நார், நாராக கிழித்துத் தொங்க விட்டிருக்கிறார். மூல ஆதாரங்களையும், சமகால நிகழ்வுகளையும் முன் வைத்து அவர் தொடரில் காட்டும் தரவுகள் இன்னொரு வாசிப்பிற்கான திறப்பைத் தருகின்றன. வாசகனின் வாசிப்பிற்குச் சரியான நூல்களை படைப்பின் ஊடாக அடையாளமிட்டுக் கொண்டே போவது சாரு அவர்களிடம் எனக்குப் பிடித்த விசயம். அதை ஒளரங்கசீப்பிலும் செய்திருக்கிறார். நாவலின் தொடர்ச்சியாக தைமூர், செங்கிஸ்கான், பாபர், அசோகர் ஆகியோரின் மூலத்தில் இருந்து மொழியாக்கம் செய்யப்பட்ட வரலாறுகளை தேடி வாசிக்க விருப்பம் வருகிறது.

பாடநூல்களுக்கு வெளியேயான வரலாறு சுவராசியமானதுஎன்பது எத்தனை உண்மையோ அத்தனை உண்மை, ”எழுதப்பட்டிருக்கும் வரலாறுகளை மீட்டுருவாக்கம் செய்ய வேண்டும்என்பதும்! வரலாற்று நாயகர்களை, பாளையக்காரர்களை, தேசியத் தலைவர்களை சாதி, இன, மத ரீதியில் இன்றைய தலைமுறை அணுக ஆரம்பித்திருக்கும் நிலையில் கட்டமைத்து வைத்திருக்கும் போலி பிம்பங்களைக் கழைந்து வருங்கால தலைமுறைக்கு உண்மையான வரலாறை எழுத வரலாற்றாசிரியர்கள் முன் வர வேண்டும். ஒரு படைப்பாளியாய் அதற்கான முதல் அடியைநான் தான் ஒளரங்கசீப் நாவல்மூலம் சாரு தொடங்கி இருக்கிறார்.

வரலாறை அதன் உண்மைத் தன்மைக்கான தரவுகளோடு புனைவாக்கவும் முடியும் என்பதை சொல்லாமல் சொல்லிய படி நாவல் நகர்த்திப் போகிறது. ஒருவேளை, இந்நூல் முழு தொகுப்பாக வந்திருக்குமேயானால் ஒரு சிலரை மட்டுமே சென்று சேர்ந்திருக்கும். அப்படி இல்லாமல் அத்தியாயமாய் அலைபேசியில் இலவசமாய் வாசிக்கத் தந்திருப்பதன் மூலம் பலருக்கும் புழக்கத்தில் இருக்கும் வரலாறுகளின் நம்பகத் தன்மையை, வரலாற்றாசிரியர்களின் பொய் கட்டமைப்புகளை கொண்டு சேர்த்திருக்கிறார். வாசிக்க, வாசிக்க வரலாற்றின் உண்மை முகத்திற்கு வார் பிடிக்கும்நான் தான் ஒளரங்கசீப்நூலாக வெளியாகும் விழாவில் சரியான நபர்களை அமர்த்தி ஒரு கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்தால் புனைவெழுத்துகளால் நிரம்பி நிற்கும் வரலாறுகளை களைந்தெடுப்பதற்காக தொடக்கத்தை அது தரக்கூடும்.

No comments:

Post a Comment