கடந்த சில தினங்களாகவே எங்களை எட்டி விடாத இரகசியங்களாக இருக்க வேண்டும் என்பதில் முனைப்புக் காட்டிய படியே மகனும், மகளும் ஏதாவது பேசிக் கொண்டும், செய்து கொண்டும் இருந்தார்கள். நேற்றிரவு உறங்கிய சில மணி நேரத்தில் படுக்கையறை விளக்குகள் ஒளிர ஆராம்பித்தது. விடிந்து விட்டதா? என்று விழித்துப் பார்த்தால் வாழ்த்துச் செய்தியோடு எங்கள் முன் கேக் விரிக்கப்பட்டு இருந்தது. தன் சேமிப்பில் கடையில் வாங்கி வந்திருந்த பரிசுப்பொருளோடு அன்பை வார்த்தை வாழ்த்தாக்கி மகன் கொடுத்தான். தன் காகித வடிவமைப்புகளை தன்னுடைய வார்த்தைகளால் உயிர்ப்புள்ளதாக்கி தன் பங்கிற்கு மகள் கொடுத்தாள்.
வழமையாய் கேட்பது போல, ”என்னைப் பற்றி உன் மதிப்பீடு என்ன?” என மனைவியிடம் கேட்டேன். மகள் கொடுத்திருந்த ஒரு வாழ்த்துச் செய்தியைக் காட்டி ”என்னை பற்றி நீயும், உன்னை பற்றி நானும் மதிப்பிடுவது இருக்கட்டும். நம்மைப் பற்றி பிள்ளைகள் என்ன நினைக்கிறார்கள்?” என்று பார் என காட்டினாள். உண்மையாகத் தான் அது இருந்தது!
வழக்கமான தினத்தில் இதுவும் ஒரு தினம் என்பதாய் இருக்கும் எங்கள் திருமண நாளை மகனும், மகளும் ஒவ்வொரு முறையும் நாங்கள் நினைவு கொள்வதற்கான நாளாக மாற்றித் தந்து கொண்டே இருக்கிறார்கள். அந்த பின்னிரவிலும் என்னை நெருக்கமாய் நேசிக்கும் உறவுகளிடமிருந்து வாழ்த்துகள் வர ஆரம்பித்தன. அன்பின் வாழ்த்துகளை கை நிரம்ப ஏந்தியபடி எங்களின் 17 வது திருமணநாள் உதயமாகிறது.
No comments:
Post a Comment