Saturday, 16 August 2014

குழந்தைகளை நேசித்தாலே போதும்!

சுதந்திரதினம் என்பதால் அரைநாள் தான் கிளாஸ். அதுலயும் ஒன்னவர் ஃபங்சனுக்கு போயிடும். இரண்டு நோட்டும், ஸ்நாக்சும் தான் கொண்டு போகனும். அதுனால என் ஸ்கூல் பேக்குக்கு பதிலா மம்மி கிட்ட இருக்கிற பேக்கை கொண்டு போகவா? என மகள் கேட்டாள்.

குடும்ப நண்பர் மூலம் கிஃப்டாக வந்த வேலைப்பாடுள்ள அந்த பேக்கை வீணாக்கி விடுவாளோ என்ற எண்ணத்தில் நான் வேண்டாம் என்றேன். அவளும் பலவாறு பேசிப் பார்த்தாள். நானும் பிடிகொடுக்காமல் மறுத்து விட்டேன்.

இரவில் உறங்குவதற்கு முன் தன் அம்மாவிடம் பேசிப்பார்த்தவள் எந்த பேக்கை நாளைக்கு நான் எடுத்துட்டு போறதுன்னு முடிவு பண்ணிவையுங்க என சொல்லி விட்டு உறங்க போய்விட்டாள்.

விரும்பி கேட்டாளே என்ற உறுத்தல் எனக்குள் வரவே காலையில் அந்த பேக்கை கொடுத்தனுப்பு என மனைவியிடம் சொல்லிவிட்டு மகளிடமும் சொன்னேன்.

அவளோ, ”வேண்டாம் டாடி. என் ஸ்கூல் பேக்கையே கொண்டு போறேன். நைட்டே எல்லாம் எடுத்து வைத்துவிட்டேன் என்றாள்.

பரவாயில்லம்மா இன்னைக்கு ஒருநாள் தானே எடுத்துட்டு போ அம்மாவிடம் சொல்லி விட்டேன் என்றேன்.

அவளோ, ப்ளீஸ் டாடி. வேண்டாம் என்றாள்.

எப்பொழுதும் வேணும் என்பதற்கு ப்ளீஸ் என்பவள் இம்முறை வேண்டாம் எனபதற்கு சொன்னதால் ஏன்? என்று காரணம் கேட்டேன்.

நான் சொல்ற எல்லாத்தையும் நீங்க கேட்கிறீங்க. அதுமாதிரி நீங்க சொல்றதையும் நான் கேட்கனுமில டாடி. அதுனால நீங்க சொன்ன மாதிரியே என் ஸ்கூல் பேக்கையே எடுத்துட்டு போறேன் என்றாள். சரி உன் விருப்பம் என்று சொன்னேன்.

விட்டுக்கொடுத்தால் மட்டுமே மலரக் காத்திருக்கிறது அன்பும், வாழ்க்கையும் என்பதை கற்றுக்கொள்ள வரலாறுகளை வாசிக்க வேண்டியதில்லை. வளரும் குழந்தைகளை நேசித்தாலே போதும் என்று தோன்றியது.