தன் வயதுக்கே உரிய குறும்புடன் வீட்டு முற்றத்தில் நின்று கொண்டு வலமும், இடமுமாய் ஆடிக்கொண்டே சிறுநீர் கழித்துக் கொண்டிருந்த மகனிடம் அவ்வழியே சென்ற அவன் அக்காவை சுட்டிக்காட்டி பொம்பளை பிள்ளை போகுதுன்னு கூட வெட்கமே இல்லாம நிக்கிறியே. போய் பாத்ரூமில் இருந்தா என்ன? என்று அவன் அம்மா கேட்டிருக்கிறாள்.
அதற்கு அவன் வெட்கம்னா என்னம்மா? என்று திருப்பி கேட்டிருக்கிறான். உடனே மகள் அவனுக்கு தான் சூடு, சொரணையே இல்லையே அப்புறம் எப்படி மம்மி வெட்கம் வரும் என்று சொன்னதும் சொரணைன்னா எனக்கு தெரியும். வெட்கம், சூடு - ன்னா தான் என்னன்னு தெரியாது என்று சொல்லி இருக்கிறான்.
சொரணைன்னா என்னன்னு சொல்லு? என்று மனைவி கேட்டதும் உங்களுக்கு அது சொன்னா தெரியாது. செஞ்சு காட்டுகிறேன் என சொல்லிவிட்டு அவள் முதுகில் ஒரு அடி அடித்து விட்டு, வலிக்குதா? என்று கேட்டிருக்கிறான். அவள் ஆமாம் என்றதும் இப்படி வலிச்சா சொரணை இருக்குன்னு அர்த்தம். வலிக்கலைன்னா சொரணை இல்லைன்னு அர்த்தம் என்று சொல்லியிருக்கிறான். இவனுக்கு வெட்கம், சூடு அப்படிங்கிறதை எப்படிங்க புரியவைப்பது? என்று என்னிடம் மனைவி கேட்டாள்.
ஒன்றும் சொல்லாமல் அப்படியே விட்டு விடு. சொரணைக்கு தெரிந்து கொண்டதைப் போலவே அவைகளுக்கும் அவனே தெரிந்து கொள்வான் என்று சொன்னேன். குழந்தைகளின் உலகம் மட்டுமல்ல அவர்களின் புரிதலும் கூட புதிரானது தான்!