பிரின்சிபல் மேடம், வகுப்பு ஆசிரியையிடம் கேட்பதற்காக தன் குரூப்பிற்கான WH கேள்விகளை தயார் செய்து கொண்டு வரச் சொல்லி பள்ளியில் மகளிடம் சொல்லி அனுப்பி விட்டார்கள். ஒருவாரமாக அவளிடம் பேசும் பொழுதெல்லாம் அது பற்றி சொல்லிக் கொண்டே இருந்தாள். நேற்று 25 கேள்விகளை மனைவியின் துணையோடு தயார் செய்து முடித்திருந்தவள் என்னிடம் அதை வாசித்துக் காட்டினாள். அம்மாவோடு சேர்ந்து 30 கேள்விகள் தயார் செய்திருந்ததாகவும் அதில் 5 கேள்விகளை தாம் நீக்கி விட்டதாகவும் சொன்னாள்.
ஏன்? என்று கேட்டேன்.
அந்த கேள்வி எனக்கே புரியல டாடி. அப்புறம் எப்படி மிஸ் பதில் சொல்லுவாங்க? அம்மா, தாத்தா இரண்டு பேரும் உனக்கு புரியலைன்னா என்ன? உங்க மிஸ்க்கு புரியும்னு சொல்றாங்க. எனக்கு அது சரின்னு படல. அதுனால அந்த கேள்விகளை எல்லாம் நீக்கிவிட்டேன் என்றாள்.
ஒரு பெற்றோராக ஆசிரியையிடம் கேட்க வேண்டிய கேள்விகளை மகளை வைத்தே கேட்க வைப்பதற்கு என் மனைவி செய்திருந்த சூட்சுமம் அந்த கேள்விகளில் இருப்பதை அவள் நீக்கிய கேள்விகளை வாசித்து காட்டிய போது தெரிந்து கொண்டேன். அதைக் காட்டிக் கொள்ளாமல் உங்க மிஸ்க்கு புரியாதுன்னு உனக்கு எப்படி தெரியும்? என்றேன்.
மிஸ்க்கு புரிஞ்சதுக்கு அப்புறம் தானே எனக்கு பாடம் சொல்லித் தாராங்க. அது மாதிரி எனக்கு புரிஞ்சா தானே நான் மிஸ்கிட்ட கேட்க முடியும் என்றாள். அவளின் கேள்வி சரி என பட்டதால் நீ செய்தது கரெக்ட் என நான் மகளிடம் சொன்னேன்.
குழந்தைகள் நம்பி கொண்டிருப்பதைப் போல தனக்கு புரிந்த பின்பு தான் ஆசிரியர்கள் அவர்களுக்கு பாடம் சொல்லித் தருகிறார்களா? என்ற சந்தேகமும், குழந்தைகளைப் போலவே அவர்களுக்காக கேள்விகள் தயாரிக்கும் எல்லா ஆசிரியர்களும் யோசித்தால் குழந்தைகளும் ஆசிரியர்களை கொண்டாடுவார்களே என்ற நினைப்பும் தோன்றியது.