Wednesday, 13 August 2014

"மொட்டை”யா சொன்னா எப்படி?

இரவு நேர தூக்கத்தை வரவழைப்பதற்கான முயற்சியில் இருந்த போது மனைவியிடமிருந்து அழைப்பு வந்தது. மகளுக்கு G.K. கொஸ்டின் கொடுத்திருக்காங்களாம். அதுக்கு பதில் சொல்லுங்க என்றாள்.

G.K. நாம ப்ரீ கேஜி லெவல் கூட இல்லையேடா என்ற நினைப்பு வர பக்கென்று ஆகிவிட்டது.

கேள்விகளை சொல்லு. அரைமணிநேரம் கழிச்சு பதில் சொல்கிறேன் என்றேன்.

இணையத்தின் துணையோடு அவள் கேட்டிருந்த பத்து கேள்விகளுக்கும் பதில் கண்டுபிடித்ததும் தைரியமாய் அழைத்தேன்.

இம்முறை மகளே லைனில் வந்தாள். செஸ் போர்டில் எத்தனை சதுரங்கள் உள்ளன? என்ற முதல் கேள்விக்கு 64 என பதில் சொன்னதும் சரி என குறித்துக் கொண்டவள் சட்டென, ”இப்படி மொட்டையா சொன்னா எப்படி? நாளைக்கு மிஸ் கேட்டா சொல்லனும்ல. அதுனால எப்படின்னு விளக்கமும் சேர்த்து சொல்லுங்க என்றாள்

கொக்குக்கு ஒரு மதியாய் பதில் தேடியதில் இதையெல்லாம் நான் யோசிக்கவே இல்லை. மீண்டும் கொஞ்சம் டைம் வாங்கிக் கொண்டு திரும்பவும் பத்து கேள்விகளுக்குமான விடைகளுக்கு விளக்கம் பார்த்துக் கொண்ட பின் அழைத்து பதில்களை சொன்னேன்.

குழந்தைகள் எதையும் முழுதாய் தெரிந்து கொள்ள வேண்டும் என நினைக்கிறார்கள். பெரியவர்கள் நாமோ வேலை முடிந்தால் போதும் என நினைக்கிறோம். என்ன செய்ய?