அதிகாலையில் நான் முகநூலை திறக்கும் போதெல்லாம் லைனில் இருப்பவர் என்பதால் பரஸ்பர வணக்கமிடலில் நட்பு தொடர்ந்த படி இருந்தது. ஒருநாள் முகநூலில் அவர் போட்ட நிலைத்தகவலை ஒட்டி அவருக்கு நான் உள்பெட்டி வழியாக அனுப்பிய பின்னூட்டத் தகவல் அவரை சற்றே கோபத்தின் உச்சிக்குக் கொண்டு சென்றது. அதை ஒட்டி நிகழ்ந்த அடுத்தடுத்த உரையாடல்களின் மூலம் தப்பு செய்து விட்டேனோ? என நினைக்கத் தோன்றியது. இனி இதுபோன்ற விசயத்தில் தங்களிடம் கருத்துச் சொல்ல மாட்டேன் என்ற உறுதியோடு அந்த விவகாரத்தை முடிவுக்குக் கொண்டு வந்தேன். அந்த நிகழ்வு சார்ந்து அவருக்கு இருந்த அறிவும், அனுபவமும் பற்றித் தெரியாமல் கொஞ்சம் அதிகப் பிரசங்கித்தனமாக நடந்து கொண்டுவிட்டேனோ? என்ற வருத்தம் எனக்கு இருந்து கொண்டே இருந்தது. அப்படியான சூழலில் ஒரு நாள், ”நடந்தவைகளை மறந்து விடுங்கள். என் வேகமான கருத்துகளுக்காக வருந்துகிறேன். வழக்கம் போல தொடர்பில் இருங்கள். பேசுவோம்” என்று எந்த வித கெளரவமும் பார்க்காமல் எனக்கு தகவல் அனுப்பியவர். அந்த கணத்தில் தொடர ஆரம்பித்தது அவருடனான நட்பு.
சில புத்தகங்கள் வெளிவந்திருப்பதை கேட்டறிந்ததும் “மலைகள்” இதழுக்கு படைப்பு அனுப்புங்கள் என்றார். சில கவிதைகளை அனுப்பி வைத்தேன். ஆனால், அது பற்றி அவர் பேசிய பின்பு தான் அவையெல்லாம் எந்த தரத்தில் இருக்கின்றன என்பதை என்னால் தெரிந்து கொள்ள முடிந்தது. ஆனாலும், என்னைத் தொடர்ந்து உற்சாகப்படுத்தி வந்தார். முகநூலில் பேசும் பொழுதெல்லாம் கவிதைகளை அனுப்புங்கள் என்பார். மலைகளில் வெளிவந்திருக்கும் கவிதைகளை வாசியுங்கள். அதன் வசம் தானாக புலப்பட்டு விடும் என சொல்லிக் கொண்டே இருப்பார். பல மாதங்களுக்கு பின் எனக்கே சரி என தோன்றிய பின் நான் அனுப்பிய கவிதைகளில் சிலவற்றைத் தேர்ந்தெடுத்து அறிமுக படைப்பாளியாக மலைகள் இதழ் மூலம் பயணிக்க வைத்தவர்.
முதல் முறையாக மலைகள் பதிப்பகத்தை ஆரம்பித்த போது துரும்பினும் துரும்பாய் நான் செய்த சில முன்னெடுப்புகளை நினைவில் கொண்டு மலைகள் பதிப்பகத்தின் முதல் வெளியீட்டு நூலில் அவருக்கு மிகப்பெரிய அளவில் அந்த முயற்சிக்காக கை கொடுத்த ஜாம்பாவான்களோடு சேர்த்து என்னையும் நினைவு கூர்ந்து என்னை கெளரவப்படுத்தியவர். இதற்கெல்லாம் உச்சமாய் வா.மு.கோமு, பெருமாள் முருகன் போன்ற ஜாம்பாவான்களின் படைப்புகளை கொண்டு வரும் தன் மலைகள் பதிப்பகத்தில் வெளியிட உங்கள் தொகுப்பு ஒன்றை தாருங்கள் எனக் கேட்டவர்.