இருக்கின்ற வேலையைத் தொடரும் சூழல் இருக்கிறதா? புதிய வேலைக்குச் செல்வதாக இருந்தால் அதற்கான தகுதியை கொண்டிருக்கிறாயா? உனது விருப்பம், ஆசை எனப் பல காலமாய் சொல்லித் திரியும் வேலைக்கான தகுதிக்குத் தயாராகி வருகிறாயா? குடுமபச் செலவினங்களுக்கான ஆறுமாதத் தொகையைச் சேமிப்பில் வைத்திருக்கிறாயா? என என் வளர்ச்சியில் அக்கறை கொண்டவரின் எந்தக் கேள்விக்கும் என்னால் ”ஆம்” என பதில் சொல்ல முடியாமல் போனது, ”இல்லை” என்ற என் பதிலைக் கேட்டவர் அது குறித்துத் தொடர்ந்து பேசவில்லை. வேறு விசயங்களுக்குத் தாவியவர் நான் விடைபெற எத்தனித்த சமயத்தில், ”வாழ்க்கையை வாழ்வதற்கான அடிப்படை விசயங்கள் ஒன்றில் கூட நீ தகுதியானவனாய் இல்லை. வாசிக்கிறேன், எழுதுகிறேன் என்பதெல்லாம் கேட்க நல்லா இருக்கும். சோறு போடாது. இன்னைக்கு இல்லைன்னா நாளைக்கு அதைச் செய்யலாம். ஆனா வாழ்க்கையை விட்டா எப்பவுமே நீ அந்தப் பக்கம் போக முடியாது. அதுனால இதையெல்லாம் தூக்கித் தூர வச்சிட்டு உருப்படுவதற்கான வழிகளைப் பாரு” என்றார். வாசிப்பு சார்ந்தும், எழுத்து சார்ந்தும் நல்லா இருக்கு – நல்லா இல்லை – இன்னும் நல்லா செய்ய முயலு – எனக் கேட்டுப் பழகி இருந்த நிலையில் இப்படி முகத்தில் அறைந்தாற்போல வந்து விழுந்த வார்த்தைகளும் அதில் இருந்த உண்மைகளும் சுடவே செய்தது.
இரண்டு நாட்களாக எழுத நினைத்திருந்த விசயங்களையும், முடிக்காது இருந்த பத்திகளையும் அப்படியே போட்டு வைத்தேன், அலுவலகத்திலும், அறையிலும் வாசிக்க வைத்திருந்த புத்தகங்களை எல்லாம் ஓரங்கட்டி அலமாரிக்கு இடம் மாற்றினேன். மனதைச் சூழ்ந்திருந்த அயர்ச்சியையும், அவரின் கேள்விகள் உருவாக்கி இருந்த பதற்றமான பயத்தையும் இரவுகள் வெல்ல முடியாமல் திணறிக் கொண்டிருந்தது.
என் முன்னேற்றத்தில் உண்மையான அக்கறை கொண்டவரின் அந்த அறிவுரையில் மறுக்க முடியாத உண்மைத் தன்மை இருந்த போதும் வாசிப்பையும், எழுத்தையும் விட முடியுமா? எனத் தெரியவில்லை. என்னுடைய ஆகப் பெரிய பொழுது போக்காக இவ்விரண்டையும் அமைத்துக் கொண்டதற்காக வருத்தமே மிஞ்சுகிறது. விட முடியாவிட்டாலும் சுருக்கிக் கொள்ள வேண்டும். முடியுமா? என்ற கேள்வியோடு பார்க்கலாம் என்ற நம்பிக்கையும் வேகமெடுக்கிறது.