Monday, 31 August 2015

பெண்கள் சூழ் உலகில் இருந்து வரும் சிக்கல்கள்!

 

மகனைப் பற்றி பேசும் போதெல்லாம் மனைவியும், மகளும் அவனைப் பற்றிய குறையோடு தான் முடிப்பார்கள். எதிலும் அக்கறையில்லை. மெனக்கெடல் இல்லை. ஏனோதானோவென்று எதையும் செய்வதால் நல்ல ரிசல்ட்டை அவனால் தர முடியவில்லை எனச் சொல்லிச் சொல்லி அவர்களுக்கு அழுத்ததோ இல்லையோ எனக்குக் கேட்டு, கேட்டு அழுத்துப் போயிருந்த நிலையில் அவன் செவன்த் ரேங்க் வந்ததைப் பார்த்து எனக்கே அதிர்ச்சியாகி விட்டது என அவனுடைய கிளாஸ் மிஸ் மகளிடம் சொல்ல அது தான் ஹாட் டாப்பிக்காக சில நாட்களாய் ஓடிக் கொண்டிருந்தது. மூன்றாவது படிக்கிற பையன் தானேம்மா. இப்போதைக்கு எழுத்துக்களை அறிந்து சேர்த்து வாசிக்கக் கற்றுக் கொண்டால் போதும். ரேங்க் எடுக்க வைப்பதற்கெல்லாம் அப்புறமா அவனைத் தயார் செய்துக்கலாம் எனச் சொல்லி சமாளித்து வந்தேன்.

நான்கு நாட்களுக்கு முன்  புத்தகத்தை தொலைத்து விட்டான் என்ற கம்ப்ளைண்ட் வந்து அடங்குவதற்குள் பென்சிலைத் தொலைச்சிட்டு வந்துட்டான் என அடுத்த கம்ப்ளைண்ட் காதுகளை நிரப்ப ஆரம்பித்தது. இதெல்லாம் சகஜம் எனச் சொன்னாலும் ஏற்கும் மனநிலையில் மனைவியும், மகளும் இல்லை. மகனைக் கூப்பிட்டுடெய்லி இப்படி தொலைச்சிட்டு வந்தா என்ன ஆகுறது அபி?” என்றேன். அதற்கு அவன், “டாடி…….நான் எங்க தொலைக்கிறேன்? மிஸ் கிளாசுல கேட்கும் போது கொடுத்துறேன். அவங்க கிளாஸ் முடியவும் எடுத்துட்டுப் போயி எங்கேயாவது தொலைச்சிராங்க. கேட்டா தேடி எடுத்துத் தருகிறேன்னு சொல்றாங்க. நான் சொன்னா அம்மாவும், அக்காவும் நம்ப மாட்டேங்கிறாங்க. நீங்க சொல்லுங்கஎன்றான்

வீட்டில் மனைவி, மகள் பள்ளியில் அவனுக்குச் சொல்லித்தரும் மிஸ் என பெண்கள் சூழ் உலகில் இருந்து வரும் சிக்கல்களிலிருந்து மகனைக் காப்பாற்றுவதற்குள்  நாட்டாமை வேசம் நாறி விடுகிறது. போதாக்குறைக்குஅப்பனைப் போல பிள்ளைன்னு சும்மாவா சொன்னாங்கஎன்ற இடித்துரைப்பும் போனஸாய் கிடைத்துவிடுகிறது.