27-07-2015 ல் டாக்டர். அப்துல்கலாம் அவர்கள் மாரடைப்பால் காலமானதையொட்டி என் முகநூல் பக்கத்தில் பதிந்த பதிவுகள்
---------------------------------------------------------------------------
28-07-2015
என் மண்ணின் அடையாளத்தை மாற்றியமைத்து தேசத்தின் அடையாளத்தை ”அக்னிச் சிறகு”களால் உலகிற்குப் பறைசாற்றிக் கடமை செய்யக் கற்றுத் தந்து விட்டு கண் உறங்கப் போய் விட்டீரோ?
கருணையற்ற காலனிடமிருந்து மீட்கத் தெரியாத துர்பாக்கியவானாய் உங்கள் காலடியில் எங்கள் கண்ணீரைச் சமர்பிக்கிறோம்.
நெட்டை மரங்களென நின்று புலம்பினார்
பெட்டைப் புலம்பல் பிறர்க்குத் துணையாமோ? – என்று பாரதி சாடியது எங்களுக்கானதாகவே இருக்கட்டும். அதற்காக எதிர்வாதம் செய்து உங்கள் பெயரில் என் மண்ணின் மைந்தனை இந்த தேசத்தின் அடையாளச் சின்னத்தை நாங்கள் சிறுமை செய்ய விரும்பவில்லை.
என்ன தான் உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாக முடியாது,. பிடரி மயிர் சிலிர்த்து கர்ஜிப்பதெல்லாம் கானகத்தின் அரசனாகி விட முடியாது. தெருவே தன் எல்லை என வாழும் சொறி நாய்கள் தன் பாய்ச்சலில் மிரட்டும் வேட்டை நாய்களாக முடியாது. சூடு போட்ட வரிகள் எல்லாம் வரிப்புலியின் அடையாளமாகி விடாது என்பது எங்களை விட உங்களுக்கு நன்றாகவே தெரியும்.
என் மண் தந்த தேசத்தின் அடையாளத்திற்கு எங்கள் கண்ணீர் அஞ்சலிகள்……….
30-07-2015
தாரை, தப்பட்டைகளுக்குப் பெயர் போன சுய நல அரசியல் வா(வியா)திகளால் உங்களின் பெயரில் உதயமாகப் போகும் திட்டங்களில் ஊழல் நடைபெறாது என்ற உத்ரவாதத்தை தர முடியாத இந்தியக் குடிமக்களாகிய நாங்கள் எங்கள் தேசத்தின் எல்லைகள் வரை நீங்கள் விதைத்த விதைகள் எல்லாம் ஒரு நாள் விருட்சமாகி உங்களின் கனவை நனவாக்கும் என்ற நம்பிக்கையை மட்டும் தருகிறோம். உங்கள் காலத்தில் வாழ்ந்தோம் என்ற செருக்கோடு விடை பெறுகிறோம் .
01.08.2015
- நான் இறந்த செய்தி வந்ததும் எழவு வீட்டுல கொடுத்த காப்பியில சர்க்கரை இல்லைன்னு விமர்சனங்கள் எழுதுனானுக.
- திடீர்னு அந்த அதிபர் வாராரு, அந்த நாட்டுல கொடியை இறக்கிட்டானுகன்னு பீதியைக் கிளப்புனானுக..
- ஒரு பள்ளிக் கூடத்துப் பையன் போட்டாவை போட்டு என் சின்ன வயசுப் படம்னு சொன்னானுக.
- என் இறப்புக்கு வராதவங்களை எல்லாம் பழைய கடுப்பை மனசுல வச்சுக்கிட்டு வகுந்து போட்டானுக.
- என் பிறந்த தினம், இறந்த தினம் என எல்லாத்தையும் எடுத்து வச்சுக்கிட்டு இதையும் ஒரு தினமாக்கிடுங்க. அன்னைக்கு லீவு கொடுப்பீங்கலான்னு சேர்த்துச் சொல்லிட்டாலும் தேவலைன்னானுக.
- என் ஆவியைப் பிடிச்சு பேச வைச்சேன். அவர் இஸ்ரோவுக்கு ஆலோசகராக இருப்பதாக உறுதி கொடுத்திருக்காருன்னு அறிவிச்சானுக.
- நான்கு நாளைக்குள்ள இம்பூட்டு அக்கப்போரையும் பண்ணி முடிச்சிட்டானுக. பள்ளிக்கூடம், ஆய்வுக்கூடம், உதவித்திட்டம்னு இப்ப ஆளாளுக்கு என் பெயரை வைக்க ஆரம்பிச்சுட்டானுக. அதை வச்சு வருங்காலத்துல அவனுக கல்லாக் கட்டி என் பெயரை நாறடிக்காம விட்டானுகன்னா அந்த மட்டும் சந்தோசமாவது உறங்கிக் கொண்டிருப்பேன். என்ன செய்ய காத்திருக்கானுகன்னு ஒன்னும் புரியலையேடா சொக்கா......