எப்பொழுதும் தன் பிறந்தநாளுக்குச் சாக்லெட், கேக் எனக் கேட்பவன் இம்முறை ஒரு கைக்கடிகாரம் வாங்கிக் கொடுத்தா நல்லா இருக்கும் டாடி என்றான். “பார்க்கலாம்” என்ற ஒற்றை பதிலுக்குப் பின் அது பற்றி எந்த யோசனையும் இல்லாமல் இருந்த நிலையில் அவனின் பிறந்ததினம் நெருக்கத்தில் வந்திருந்தது. பிரத்யேகமாக நானே தயார் செய்த பிறந்தநாள் வாழ்த்து அட்டையை அஞ்சலில் அனுப்பி வைத்து விட்டு அமேசானில் அலைந்த போது குழந்தைகளுக்கான கைக்கடிகாரங்கள் சொற்ப விலையில் கிடைத்தது. அக்கா தம்பிக்கும், தம்பி அக்காவுக்கும் தர ஏதுவாக இரண்டு கைக்கடிகாரங்களை ஆர்டர் செய்தேன். இன்று அவைகளைத் தன் பிறந்தநாள் பரிசாக பெற்றிருந்தவனை வாழ்த்துச் சொல்வதற்காக அழைத்தேன்.
வாழ்த்துக்கு நன்றி சொன்னவன், “டாடி இன்னைக்கு எனக்குப் பிறந்தநாளா? இலக்கியாவுக்குப் பிறந்தநாளா?ன்னு சந்தேகமாக இருக்கு. அதுக்கு வந்த பார்சல் செமையா இருதுச்சு. எனக்கு வந்த பார்சல் நல்லாவே இல்லை. லுக்காவே இல்ல. அதுலாம் நீங்க பார்க்கமாட்டீங்களா?” என்றான். இணையத்தில் வாங்கியதால் பார்க்க முடியவில்லை என்றேன். அவனுக்குப் புரியாததால் மீண்டும் அதே கேள்வியை அவன் கேட்டதும் புனைவைத் துணைக்கு வைத்துக் கொண்டு இணையத்தில் பொருள் வாங்குவது குறித்துச் சொல்ல ஆரம்பித்ததும் ”சரி….சரி…பரவாயில்ல, அடுத்த தடவையாச்சும் கவனமா பாருங்க. எனக்கு ஸ்கூலுக்கு டைம் ஆச்சு” என்றான்.
பெரியவர்களுக்குத் தான் விளக்கம் சொல்ல புனைவு, புடலங்காய் எல்லாம் தேவையாய் இருக்கிறது. குழந்தைகளுக்கு அதெல்லாம் ஒரு பொருட்டல்ல. சரியோ? தவறோ? ஒரு நேரடியான பதில் மட்டுமே அவர்களுக்குத் தேவையாக இருக்கிறது,