பெரும்பாலான வார இறுதி நாட்கள் உள்ளங்கையில் வாரிய நீராய் நிரம்பி விரல் இடுக்குகளில் கசிந்து முற்றாய் தீர்ந்து போய்விடும். சில சமயங்களில் மட்டுமே குவளையில் அள்ளிய நீராய் என்னிடமே இருந்து என் விருப்பத்திற்கேற்பக் கரையும். அப்படிக் கரைந்த வார இறுதிநாளாய் நேற்றைய (23-08-2015) ஞாயிறுப்பொழுதும் அமைந்தது. வாசகர் வட்டத்தின் மாதாந்திர நிகழ்வு கடந்த மாத நிகழ்வின் தொடர்ச்சியாய் சங்க இலக்கியம் முதல் நவீனக் கவிதைகள் வரை என்ற தலைப்பில் நிகழ்ந்தது. நிகழ்வு நடைபெறும் அங்மோகியோ நூலகத்திற்கு வழக்கமாகச் செல்லும் பயணத்தடத்தில் இல்லாமல் ஒரு மாறுதலுக்காக வட்டப்பாதையில் நான் சென்றதைப் போல இம்மாத நிகழ்வும் வழக்கமாக நடைபெறும் தக்காளி அறையில் இல்லாமல் வேறு அறையில் நடந்தது. தவிர, வாசகர் வட்டம் ஒருங்கிணைத்திருந்த கவிஞர் இசாக் அவர்களின் இசைத் தொகுப்பின் முன்னோட்ட நிகழ்வும் இணை நிகழ்வாய் இருந்ததால் நிறைய புது முகங்களை நேர் சந்திப்பில் பார்க்க முடிந்தது.
சங்ககாலக் கவிதைகள் (பாடல்கள்) பற்றி சித்ரா, எம்.கே.குமார், பாரதி மூர்த்தியப்பன் ஆகியோர் அந்தப் பாடல்களின் பொருளோடு பேசியது சங்கப்பாடல்களைப் பற்றி இன்னும் அறிந்து கொள்ளும் ஆர்வத்தைத் தூண்டியது. பாடநூல்களில் படித்திருந்த சில சங்கப்பாடல்களை நினைவில் கொண்டு வர முயன்று பார்த்தேன். ஒன்று கூட அகப்படவில்லை. மொட்டை மனனத்தின் கையறுநிலையை உணர்ந்த தருணமது!
நவீனக் கவிதைப் பகிர்வுகள் நிகழ ஆரம்பித்ததுமே அவைகளின் மீதான கருத்துகள் அங்கிருந்த வாசகர்களை இரு கூறாக்கியது. புரிய வேண்டும், மரபில் இருக்க வேண்டும். மரபில்லாத பட்சத்தில் சுருக்கமாய், இனிமையாய், இரசிக்கும் படியாய் இருக்க வேண்டும். இந்த வரையறைக்குள் வராத எதையும் எங்களால் கவிதையாக ஏற்றுக் கொள்ள முடியாது என்ற வாதங்களுக்கிடையே நவீனக் கவிதைகளின் அவசியம் குறித்த வாதங்களும் பேரலையின் சப்தங்களோடு எழுந்து அடங்கின. நாங்கள் நினைக்கும் வரையறைக்குள் வராத கவிதைகளைக் கவிதையாகவே ஏற்க முடியாது என்ற புறக்கணிப்பைக் கேட்ட போது அதிர்ச்சியாகத் தான் இருந்தது. பரிணாமம் என்றால் சும்மா இல்ல என்ற டயலாக் தான் நினைவில் வந்து போனது.
கடந்த முறை பல கவிஞர்களையும், அவர்களின் கவிதைகளையும் வாசகர்களுக்கு அறிமுகம் செய்த அகிலா, அழகுநிலா ஆகியோர் இம்முறை அதிக ஆர்வம் காட்டவில்லை. ஷாநவாஸ் தேவதச்சன் கவிதைகள் பற்றிய கோடி காட்டலோடு கவிதை என்பது அந்தரங்கமானது. அது படைப்பவரின் களம் சார்ந்ததாக இருக்கும் போது இன்னும் சிறப்பாய் இருக்கும். தன்னை நிலை நிறுத்திக் கொள்ளும் என்று கவிதை சார்ந்த தன் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்.
சிறப்பாளராக வந்திருந்த கவிஞர் இசாக் அவர்களின் துணையிழந்தவளின் துயரம் என்ற கவிதைத் தொகுப்பில் இருந்து இரண்டு கவிதைகளை கோபால் கண்ணன் அடையாளப்படுத்தினார். வழக்கமாக சிறப்பு விருந்தினர்கள் வரும் போது அவர்களின் படைப்புகள் அரங்கில் விற்பனைக்கு வைக்கப்படும். நேற்று அப்படி ஏதுமில்லை. ஒருவேளை நான் தான் சரியாகக் கவனிக்கவில்லையா என்று தெரியவில்லை, இசாக்கின் சில தொகுப்புகளை வாங்க நினைத்து முடியவில்லை, இணைய அங்காடிக்கு தான் தாவ வேண்டும்.
என் பங்களிப்பாக கவிஞர். இசாக் அவர்களின் ஒரு கவிதை அறிமுகத்தோடு இரா.பூபாலனின் பறக்க எத்தனிக்கும் ஒற்றை இறகு தொகுப்பில் இருந்து இரு கவிதைகளையும், கரிகாலன் கார்கி அவர்களின் ஒரு கவிதையையும் அதன் மீதான என் விமர்சனத்தையும் பகிர்ந்து கொண்டேன். மைக்கைப் பிடித்து பேசுவதெல்லாம் இதுவரை நிகழ்ந்திராத விசயம் என்பதால் நடுக்கம் தான் முன்னே நின்றது. அதிக நேரத்தை நான் எடுத்துக் கொண்ட பதற்றத்தை எதிரில் அமர்ந்திருந்த வாசகர்களின் முகத்தில் பார்க்க முடிந்தது. அதன் பொருட்டு கசிந்த வார்த்தைகளும் காதில் விழ இப்படியான பதற்றம் பகடி செய்ய வாசல் வைத்து விடும் என்பதால் அடுத்தடுத்த சந்தர்ப்பங்களில் தவிர்த்து விட வேண்டும் என முடிவு செய்து கொண்டேன்.
தொடர்ந்து கவிஞர். இசாக் அவர்களின் இயக்கத்தில் பொருளீட்டப் புலம் பெயர்ந்த நம் உழைப்பாளர்களின் துயரலைகளைப் பற்றிப் பேசும் தமிழ்ப்பிள்ளை இசைத்தொகுப்பின் முன்னோட்ட அறிமுக விழா துவங்கியது. முன்னோட்டக் காட்சிகள் அடங்கிய இசைத்தட்டை அனைவருக்கும் இலவசமாக வழங்கி. தமிழ்ப்பிள்ளை தயாரிப்பிற்கான அவசியம், அதன் நோக்கம் குறித்துப் பேசினார். இசைக்கு இதுவரை பாடல் எழுதாத கவிக்கோ அப்துல் ரகுமான் இதில் ஒரு பாடல் எழுதி இருப்பதும், இசைப்புயலுடன் இணைந்து பல ஆண்டுகள் பணியாற்றிய தாஜ்நூர் இசையமைத்திருப்பதும் சிறப்பு.
வளைகுடா நாடுகளுக்குக் கடல் கடந்து சென்று பணி செய்யும் அந்நியத் தொழிலாளர்களை அடிப்படையாகக் கொண்டு உருவாகி வரும் தமிழ்ப்பிள்ளை சிங்கப்பூர் சூழலுக்கு முற்றிலும் பொருந்தாதது. இங்குள்ள தொழிலாளர்களின் நிலை அந்த அளவுக்கு இல்லை எனலாம். இதை வலைப்பதிவர் குழலி அங்கேயே குறிப்பிட்டார். தமிழ்ப்பிள்ளை அடையாளப்படுத்தும் துயரங்களின் வலியை பாலை மணலில் ரோட்டோர பேரீச்சம் பழங்களை அள்ளித்தின்ற படி தாகம் தரும் வெயிலை சில ஆண்டுகளாகக் குடித்துத் திரிந்து அனுபவித்து அறிந்தவன் என்ற முறையில் முன்னோட்டக் காட்சியில் இடம் பெற்ற பாடல்களின் சில வரிகள் மீண்டும் என்னை அந்த கந்தக மண்ணில் கால் பதித்து வரச் செய்தது. இதை இசாக் அவர்களிடம் சொன்ன போது பிடித்திருந்த என் கையை இன்னும் இறுக்கமாக்கிக் கொண்டார்.
வாரம் முழுக்க ஓடும் இயந்திரத்தனமான வேகத்தைச் சற்றே குறைக்க உதவும் இப்படியான வார இறுதிச் சந்திப்புகள் நாம் விரும்பும், இளைப்பாறிக் கொள்ளும் விசயங்கள் பற்றிய புதிய தகவல்களையும் அதன் வழி கூடுதல் திறப்புகளையும் தரும் போது அந்த சந்திப்புகளும், அதற்கான மெனக்கெடல்களும் உள்ளங்கை ஈரமாய், பேருந்தின் ஜன்னலோர இருக்கையில் அமர்ந்திருக்கும் குழந்தை எச்சில் ஒழுகக் கொடுத்த முத்தத்தின் தீராத நேசமாய் நமக்குள் பதிந்து விடுகிறது. நேற்று ஏனோ புதிய தகவல்களும், அதன் வழியான திறப்புகளும் எதிர்பார்த்த அளவிற்கு கிடைக்கவில்லை என்ற வருத்தத்தோடு தான் வீடு திரும்ப வேண்டி இருந்தது.
விவாதத்தின் ஹைலைட்டாய் மனுஷ்யபுத்திரனின் கவிதைகளைப் பள்ளியில் பாடமாக வைத்து மனனம் செய்யச் சொன்னால் என்ன செய்வீர்கள்? என்றொரு கேள்வி எழுந்தது. கடல் கடந்து நடக்கும் விவாத அரங்கில் கூட மனுஷ்யபுத்திரன் ஏதோ ஒருவகையில் சீட் போட்டு விடுகிறார்! இன்றைக்கு சிவபெருமான் தருமிக்குச் சொல்லி இருந்தால் பிரிக்க முடியாதது வரிசையில் "விவாதமும் - மனுஷ்யபுத்திரனும்" என்று சேர்த்திருப்பார்! அந்தக் கேள்விக்கு பதில் சொன்ன சிலர் சாய்சில் (CHOICE) விட்டு விடுவேன் என்றார்கள். எனக்கென்னவோ அப்படியான ஒரு நிலை வந்தால் மனுஷ்யபுத்திரன் கவிதை எழுதுவதை நிறுத்தி விடுவார் என்றே தோன்றியது.