ஒன்னு கழுதையா இரு. இல்லை தேஞ்சு கட்டெறும்பாயிடு.
இரண்டுக்கும் இடையில் கிடந்து இழுபடாதே. உனக்கு மட்டுமில்லை உன்னையச் சுத்தி இருக்கிறவனுக்கும் அதனால் பிரயோசனமில்லை.
முதல்ல விதைக்கிறதா? வேண்டாமா?ன்னு முடிவு பண்ணு. அப்புறமா யாரு போய் விதைக்கிறது?ன்னு முடிவு செய்யலாம்.
கூறுவாறு தெரியாம மாட்டுக்கு லாடம் அடிக்க ஆணி எடுக்க கூடாது.
தன் கீழ் பயணிப்பவர்கள் குடை எடுத்து வந்தார்களா? என்ற நினைப்பின்றி சாத்தியங்களின் போதெல்லாம் மழையைப் பொழியத் தயங்காத வானம் போல இரு.
மாங்காவுக்கு கல்லெறிகிறோம்னு சொல்லிக்கிட்டு மரத்தையே சாச்சிடக் கூடாது.
செவனேன்னு தானே இருக்குன்னு உழவு மாட்டைக் கொண்டு போய் செக்குல பூட்டுனா கேடு செக்குக்கு இல்ல மாட்டுக்கு தான்.
நிகழ்த்திக் காட்டுவதை விட நிகழ்வதை பார்த்துக் கொண்டிரு
எனக்கு எல்லாத் துறைகளிலும் நண்பர்கள் இருக்கிறார்கள் என சொல்லிக் கொள்வதில் பெருமை கொள்வதை விட உன் தவறுகளுக்காக அவர்களை யாரும் கேள்வி கேட்டு விடக்கூடாது என்பதில் கவனமாய் இரு!
ஆத்துல (ஆறு) மீன் பிடிக்கப் போறேன்னு சொல்லிட்டு ஆத்தை நாசம் பண்ணிடக் கூடாது.
வானத்தை விற்று விட்டு மழைக்கு மல்லாந்து கிடக்கிற மாதிரி எதையும் செய்யாதே.
எளிமையாய் இரு. இயல்பாய் நகரு. நதியைப்போல.