Tuesday, 14 September 2021

கபடவேடதாரி - விமர்சனப்போட்டி - 15

அத்தியாயம்-15

 (ஒளடதம்)

கோவிந்தசாமிக்குக் கொடுத்த வாக்கை நிறைவேற்றிக் கொடுத்து விட்டு தன் இகட்சியம் நோக்கி நகர சூனியன் நினைக்கிறான். அதற்கு சாகரிகாவின் தலைக்குள் இறங்கி கோவிந்தசாமி பற்றி பதிவாகி இருக்கும் முழு தகவல்களையும் சேகரிக்க முடிவு செய்கிறான். சாகரிகாவை நெருங்க சூனியன் நம்பும் மூன்று பலவீனங்களும், அது பற்றிய விளக்கங்களும் அற்புதம்.

நீலநகரத்தை தன் சமஸ்தானமாக்கிக் கொள்ள தனக்கு இருக்கும் சாதகமான அம்சங்களைப் பற்றி நினைத்து பரவசப்பட்டுக் கொள்ளும் சூனியன் கோவிந்தசாமியிடம் சாகரிகாவை ஒப்படைப்பது அல்லது நிழலிடம் சேர்த்து வைப்பது இரண்டும் ஒத்துவராத போது தன் பட்டத்துராணியாக்கிக் கொள்வது என நினைக்கிறான். யாருக்குத் தான் சாகரிகா? பெண்ணால் சாம்ராஜ்யங்கள் சரிந்தது போல அவளால் சூனியனின் சமஸ்தான இலக்கு தடம் மாறுமா? என்பதை அறியும் எதிர்பார்ப்பு கூடுகிறது.

சாகரிகா வெண்பலகையில் எழுதியிருக்கும் ஒரு தகவல் வழியாக கோமயம் குடியுங்கள். சகல வியாதிகளில் இருந்தும் விமோசனம் பெறுங்கள் என்ற நவீன சங்கிகளின் வைத்திய முறையை மொராய்ஜி தேசாயைத் துணைக்கு வைத்துக் கொண்டு பா.ரா. ஒரு வாங்கு வாங்குகிறார். கோமய வைத்தியத்திற்கு சிபாரிசு செய்பவர்களின் மனைவிமார்கள் சாகரிகா போல மாற வேண்டும் என சொல்லவருகிறாரோ என்று நினைக்கத் தோன்றுகிறது.

சாகரிகா காமம் சார்ந்தும், அதை ஒட்டி கோவிந்தசாமி பற்றி எழுதியிருந்த தகவலாலும் குழப்பமடைந்த சூனியன் ஒரு தூசியாய் மாறி நாசி வழியாக அவளுக்குள் நுழைகிறான். என்ன மாதிரியான தகவல்களை சாகரிகா தலைக்குள் இருந்து சேகரித்து சூனியன் நமக்குத் தரப் போகிறான் என்பதை அறிய காத்திருப்பதைத் தவிர வேறு மார்க்கமில்லை.

தன் பிறப்பு, தன் சமஸ்தானத்தை நிர்மாணிக்க வைத்திருக்கும் திட்டம் ஆகியவைகளைப் பற்றி சூனியன் தரும் தகவல்கள் பிரமிப்பு.  சூனியனின் உலகத்தை மட்டும் தொகுத்து ஒரு சிறு நூலாக போடலாம். அத்தனை சுவராசியம்.

No comments:

Post a Comment