அத்தியாயம்-19
(தாரகையின் சந்தேகம்)
பூங்காவில் உறங்கிக் கிடக்கும் கோவிந்தசாமியை சூனியன் சந்திப்பது, அவன் படுத்திருக்கும் ஜிங்கோ பிலோபா மரம் பற்றிய தகவல், அதன் மருத்துவ குணம், அதுகுறித்து போகருக்கும், அவர் சீடர் புலிப்பாணிக்கும் நிகழ்ந்த விவாதம், ஜிங்கோ பிலோபா வளர்வதற்கான சூழல் என அத்தியாயம் நீண்டு திறக்கிறது.
தன் வீட்டு முற்றத்தில் புதைந்து கிடக்கும் புதையலை அறியாமல் அதை தேடித் திரிந்தவன் கதையாய் தான் படுத்திருந்த மரத்தின் இலைகளுக்கு இருக்கின்ற சக்தியை கோவிந்தசாமி அறியவில்லை. தின்பவனின் மட்டித்தனங்களை நீக்கும் சக்தி வந்த அவ்விலைகள் பற்றி சூனியனும் அவனுக்கு சொல்லவில்லை. சொல்லாததற்கும் காரணம் இருந்தது. தன் கட்டளைக்கு மறுக்காத அம்பைத் தானே எந்த வில்லாளியும் விரும்புவான். பா.ரா. வுடனான யுத்தத்திற்கு தனக்கான அம்பாய் கோவிந்தசாமியைத் தேர்வு செய்யும் சூனியன் தன்னை நம்பி வந்த அவன் நிழலை அம்போவென விட்டு விடுகிறான்.
கோவிந்தசாமியின் தலைக்குள் இறங்கி தன் அலுவலகத்தை திறக்கும் சூனியன் வீதியில் இருக்கும் வெண்பலகையில் அவன் மூலமாக பெண்ணியவாதி செம்மொழி ப்ரியா முகமூடி தரித்து முதல் அஸ்திரத்தை ஏவுகிறான். முதல் பந்தே சிக்சர். நகரவாசிகளிடையே சலசலப்பு உருவாகிறது. அவர்கள் விவாதிக்க ஆரம்பிக்கின்றனர். கோவிந்தசாமிக்கு தான் ஏதும் விளங்கவில்லை! சூனியன் அடுத்த ஆட்டத்திற்குத் தயாராகிறான்.
செம்மொழி ப்ரியாவை யூகிக்க முடியவில்லை. ஆனால், கண்ணதாசன் குறிப்பிடும் பகுத்தறிவு தலைவர் பகலவனின் இரண்டாம் தலைவராக இருப்பாரோ? என்று தோன்றுகிறது.
No comments:
Post a Comment