Monday, 20 September 2021

திப்பு சுல்தான் - நிகரற்றவன்!

வேலூர் புரட்சிக்கான வித்தில் தொடங்கி அதற்குப் பிந்தைய நிகழ்வோடு கூடிய ஒரு தொகுப்பை எழுத வேண்டும் என்ற திட்டம் கடந்த வருட திட்டமிடலில் இருந்தது. அதன் பொருட்டு தரவுகளைச் சேகரிப்பதற்காக வாங்கிய நூல்களில் ஒன்று திப்பு சுல்தான். கிழக்குப் பதிப்பக வெளியீடாக வந்திருக்கும் இந்நூலின் ஆசிரியர் மருதன்.

ஹைதர் அலியின் அந்திம காலப் பகுதியிலிருந்தும், திப்பு சுல்தானின் பால்யத்தில் இருந்தும் நூல் ஆரம்பிக்கிறது. 17 வயது வரை தன் தந்தையோடும், அவரின் மறைவிற்குப் பின் தானே ஆட்சியை நிர்மாணிப்பவனாகவும் இருந்த திப்பு சுல்தானின் வீர வரலாறை மட்டுமே பெரும்பாலான நூல்கள் விரித்து வைக்கின்றன. அந்த பொதுத் தன்மையில் இருந்து விலகி இந்நூலில் ஆசிரியர் வாசிக்கத் தரும் திப்புவின் மதம் சார்ந்த பிரகடனம், மக்கள் வளர்ச்சியில் காட்டிய அக்கறை, மக்களோடு அரசாங்கம் ஒரு புள்ளியில் இணைவதற்கு இயற்றப் பட்ட சட்ட திட்டங்கள், ஆளும் தரப்பில் அதன் பொருட்டு எழுந்த எதிர்ப்புகள், மைசூரின் வளர்ச்சிக்காக மூன்று தொழில்களை நிர்மாணிப்பதில் காட்டிய அக்கறை, போர்க்களத்தில் கடைபிடிக்க வேண்டிய தர்மங்கள் குறித்து தன் தளபதிகளுக்கு கொடுத்த வழிகாட்டுதல்கள் ஆகியவைகளின் மூலம் திப்பு சுல்தான் என்கின்ற வீரனின் முழு பரிணாமத்தையும் நம்மால் அறிந்து கொள்ள முடிகிறது.

தன் மதத்திற்கு மட்டும் முக்கியத்துவம் தருபவனாக, கொடூர மனநிலை கொண்டவனாக, தேச எல்லைகளை விரிவுபடுத்துபவதில் அக்கறை கொண்டவனாக, தான் நினைப்பதை மட்டும் செயல்படுத்த வேண்டும் என்ற எண்ணம் கொண்டவனாக அங்கொன்றும், இங்கொன்றுமாக எழுதப்பட்டிருக்கும் கட்டுரைகளை வாசித்து விட்டு திப்பு சுல்தான் குறித்து நாம் கட்டி வைத்திருக்கும் பிம்பம் நூலை வாசித்து முடிக்கையில் பொலபொலவென உதிர்ந்து விடுகிறது.

திப்பு சுல்தானின் வரலாற்று ஓட்டம் வழியாக ஓர் இளநிலை அதிகாரியாக இருந்த ஹைதர் அலி எப்படி ஒரு சாம்ராஜ்யத்தின் அதிபதியானார்? என்பதையும், கிழக்கிந்திய கம்பெனி எப்படி இந்தியாவில் காலூன்ற ஆரம்பித்தது?, அதற்கு முகலாய சாம்ராஜ்யம் ஏன் கம்பளம் விரித்தது?, அதன் பின் கிழக்கிந்திய கம்பெனி தன்னை நிலை நிறுவிக் கொள்ள என்னவெல்லாம் செய்தது? என்பது பற்றியெல்லாம் சில பக்கங்களில் ஆசிரியர் சொல்லிச் செல்வதை வாசித்துக் கடக்கையில் இவ்விரு நிகழ்வுகள் குறித்தும் விரிவாக எழுதப்பட்ட நூல்களை வாசிக்கும் ஆவல் மேலிடுகிறது. ஒரு நூலை வாசித்து முடிக்கையில் அது இன்னொன்றை கண்டடைவதற்கான திறப்பைத் தர வேண்டும். மற்ற படைப்புகளுக்கு எப்படியோ வரலாற்று நூல்களுக்கு இது பொருந்தும். பொருந்த வேண்டும். அந்த வகையில் இந்நூல் அந்தத் திறப்பை தருகிறது.

ஆங்கிலேய சாம்ராஜ்யத்தின் வேக வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போட்டு நிறுத்தி அவர்களை நிலை குழைய வைத்த திப்பு சுல்தான் ஏனோ அடையாளம் காணப்பட்டு தன் முன் நிறுத்தப்பட்ட அத்தனை துரோகிகளையும் மன்னித்தது மைசூர் சாம்ராஜ்ய வீழ்ச்சிக்கும், திப்புவின் மரணத்திற்கும் வழிவகுத்தது. எத்தனை பெரிய வீரனாக இருந்தாலும் அவனைச் சுற்றியிருப்பவர்கள் துரோகிகளாக மாறும் போது அந்த வீரன் நம்பிக்கையை மட்டுமல்ல தன்னையும் இழந்து விடுவான் என்பதற்கு திப்பு சுல்தானின் சரித்திரம் நல் உதாரணம்.

திப்பு சுல்தான் குறித்து தமிழில் ஏராளமான நூல்கள் வந்திருக்கின்றன.  நூற்றுக்கணக்கான பக்கங்கள் அந்த வீரனின் வரலாற்றைப் பேசுகின்றன. அப்படிப்பட்ட மகத்தான ஒரு சுதேசி வீரனை தனக்கே உரிய எழுத்து நடையில், வாசிப்பின் சுவராசியம் குன்றாத வகையில் மருதன் தந்திருக்கிறார். ஒரு வாழ்க்கை வரலாற்று நூலை வழமையான நடையில் இல்லாமல் புனைவின் சாயலில் வாசிக்க விரும்புகிறவர்கள் இந்நூலை தயங்காமல் தேர்வு செய்யலாம். இந்நூலின் சிறப்பும் அது தான்!


 

No comments:

Post a Comment