Friday 17 September 2021

கிழக்கின் மகள் – அண்டை நாட்டின் அடையாளம்!

அண்டை நாடான பாகிஸ்தான் குறித்து வெளிவந்திருக்கும் நூல்கள் அளவுக்கு அந்நாட்டை ஆட்சி செய்தவர்களின் சரித்திரங்கள் தமிழில் வெளியாகவில்லை என்ற நிலையில் பாகிஸ்தானின் பிரதமராக இருந்த பெனாசிர் குறித்து வந்திருக்கும் நூல் கிழக்கின் மகள். ஆதனூர் சோழன் எழுதி நக்கீரன் பதிப்பாக வந்திருக்கும் இந்நூல் பாகிஸ்தானில் ஆட்சி கட்டிலுக்காக, அதிகார கைப்பற்றல்களுக்காக அரசியல்வாதிகள், இராணுவத்திற்கிடையே நிகழும் உள்ளடி வேலைகளை அறிந்து கொள்வதற்கான அறிமுகமாக அமைந்திருக்கிறது எனலாம்.

பழமை மதவாதம் ஊறித்திளைக்கும் முஸ்லிம் நாட்டில் ஒரு பெண் உயர் நிலையை எட்டிப் பிடிப்பது அத்தனை எளிய செயல் அல்ல. ஆனால், அதை சாதித்துக் காட்டியதன் மூலம் உலகின் பார்வையை தன் பக்கம் திருப்பிய பெனாசிர் அதற்காக மேற்கொண்ட ஆரம்ப முயற்சிகள் என்ன? அதன் விளைவுகள் அவரை எங்கு நகர்த்தி வந்தது? தான் வந்த இடத்தை அவரால் நிலையாக தக்க வைக்க முடிந்ததா? நாடு கடந்து ஆண்டுகணக்கில் வாழ காரணம் என்ன? வல்லரசு நாடுகளின் தலைவர்கள் அவரின் வளர்ச்சிக்கு எப்படி உதவினார்கள்? மீண்டும் பாகிஸ்தானுக்குள் வந்தவருக்கு என்ன கதி நேர்ந்தது? போன்ற அவரின் புகழ் பேசும் நிகழ்வுகளை பதிவு செய்திருக்கும் அதே நேரம், தன் சகோதரர்களுக்கும், கணவனுக்குமிடையே ஏற்பட்ட முரண்பாடுகளில் ஒரு தலைபட்சமாக நடந்து கொண்டது, தம்பியின் மரணத்துக்கு காரணமானவள் என குற்றம் சாட்டிய தம்பி மனைவியை சுயநலத்திற்காக பின்னாளில் பயன்படுத்த நினைத்தது, கணவரின் ஊழலைக் கண்டு கொள்ளாமல் இருந்தது, தன் வெளிநாட்டு வங்கிக் கணக்குகளை முடக்காமல் இருக்க ஆட்சியாளர்களுடன் மறைமுக ஒப்பந்தம் செய்து கொண்டது போன்ற அவரின் செயல்பாடுகளின் வழி பெனாசிரின் இன்னொரு முகத்தையும் நூலில் பதிவு செய்திருக்கிறார்.

பூட்டோவின் அரசியல் ஆரம்பம் தொட்டு பெனாசிரின் மரணத்தில் முடியும் கிழக்கின் மகளில்  இடம்பெற்றிருக்கும் சம்பவங்களை வாசிக்கும் போது அதை செய்தவர் யார்? அவர் தோற்றம் எப்படி இருக்கும்? என்பதை அறிந்து கொள்ள வசதியாக புகைப்படங்கள் இடம் பெற்றிருப்பது சிறப்பு!.

அரசியல் வாதிகள் – இராணுவம் – ஆட்சி கவிழ்ப்பு – மதத்தலைவர்கள்  இவர்களோடு ஊடுபாவி நிற்கும் தீவிரவாதம்  என்ற பாகிஸ்தானின் முகவரியை நான் மாற்றிக் காட்டுகிறேன் என குரலெழுப்பி மக்களின் நம்பிக்கையை பெறும் அரசியல்வாதிகள் அதன் பின் தங்களைப் பாதுகாக்கவே பெரும் பாடு பட வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். இன்று வரையிலும் மாறாத இந்த எதார்த்த நிலைக்கு கிழக்கின் மகளும் சிக்கிக் கொண்டார் என்ற நிஜம் நூலை வாசித்து முடிக்கையில் இயல்பாய் மனதில் எழுகிறது.


 

No comments:

Post a Comment