Sunday 12 September 2021

உறுபசி – மானுட அவலத்தின் மிகுபசி!

சம்பத் என்கின்ற நண்பனின் இறப்பிற்குப் பிறகு அவனுடைய நண்பர்கள் தங்களின் நினைவடுக்குகளின் வழியே அவனை கண்டடையும் கதை உறுபசி நாவல். அவனுடைய வாழ்வின் ஊடாக தங்களுடைய இருப்பை ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்கின்றனர். இந்த ஒப்பீடு மெல்ல சம்பத்திடமிருந்து விலகி அவர்களுக்குள் உறைந்து கிடக்கும் அல்லது அவர்கள் மறைத்து வைத்திருக்கும் எண்ணங்களை அதன் கோர முகங்களோடு வெளிக் கொண்டு வருகிறது. அது அவர்களை விலகி, விலகி சேர வைக்கிறது. சம்பத் இறந்த பிறகு தங்களுக்குப் பரிச்சயமில்லாத கானல் காட்டிற்கு மூன்று நண்பர்களும் பயணம் மேற்கொள்வதில் நாவல் ஆரம்பிக்கிறது. சம்பத் தான் நாவலின் மையம். அவனின் இயல்பு, செயல்பாடு, காதல், கடவுள் மறுப்பு, காமம், வீழ்ச்சி, வாழ்வியலோடு பொருந்த இயலா நிலை ஆகியவைகள் அவனில் இருந்தே பல்வேறு பக்கங்களாய் கிளை விரிக்கிறது.

நாவலின் ஆரம்பப் பக்கங்களில் சம்பத் குறித்து நாம் பெறும் சித்திரத்தை அவனின் செயல்பாடுகள் ஆட்டத்திற்கு முன் கழைத்துப்போடும் சீட்டுக்கட்டுகளாய் கழைத்துப் போடுகின்றன. தொடர்பற்ற கண்ணிகளாய் நாவல் முழுக்க வரும் சம்பத்தை நம்மால் ஒரு புள்ளியில் நிறுத்தி பார்க்க முடியாத அளவுக்கு அவனை அழுத்தி பிடித்திருக்கும் துயரத்துக்கான ஆரம்பம் அவனின் தங்கையின் மரணத்தில் ஆரம்பித்து நண்பர்கள் மீட்டுத் தரும் நினைவுகளால் நிறைகிறது. தவிர, அவனின் காதலியாக, மனைவியாக வரும் இரு பெண்கள் எதிரெதிர் குணம் கொண்டவர்கள். இந்த எதிர் துருவ மனநிலையே ஒருத்தி அவனை விலக்கவும், மற்றொருத்தி ஏற்பதற்குமான காரணத்தைக் கொண்டிருக்கிறது.

காமத்தின் வடிகாலை நோக்கி நகர்பவனாக ஆரம்பம் முதலே இருக்கும் சம்பத் அதை எந்த நிலையிலும் வெளிப்படுத்த தயங்காதவனாகவும் இருக்கிறான். அந்த தயக்கமின்மையே அவன் காதலை கலைக்கவும், தெளிவான முடிவெடுக்க இயலாமல் விளிம்பில் நிற்கும் பெண்ணை சட்டென மணமுடிக்கவும் வைக்கிறது. எங்கும், எதிலும் நிலை கொள்ளாத வாழ்வைப் போலவே அவனின் எண்ணங்களும் நிலையின்றி அலைகின்றன. பேரீரைச்சலின் கடல் அலையாய் பொங்கிப், பொங்கி அடங்கும் அதன் உக்கிரத்தை கட்டுப்படுத்த முடியாமல் அலைந்து திரியும் சம்பத் அடங்கிப் போகும் தருணம் கூட அமைதியாய் இல்லை. கல்லூரி காலத்தில் நண்பர்களிடையே வியப்பிற்குரியவனாக வலம் வரும் சம்பத்தின் வாழ்க்கை அவன் இறப்பு வரையிலும் கூட அப்படியானதாகவே இருக்கிறது. களங்களும், காட்சிகளும் மாறி, மாறி வருகின்ற போதும் அவனின் வாழ்வை நாம் வாசித்து நிறைக்கையில் நமக்கும் அப்படியான ஒரு மனநிலையைத் தான் தருகிறது!

உயிர்பற்ற ஒருவனின் வாழ்வியலை தன் உலர்ந்த சொற்களால் கட்டமைக்கும் எஸ்.ரா, சம்பத்தின் உடலை வீட்டிற்குக் கொண்டு வந்ததும் அதுவரை நின்ற துக்க உணர்ச்சி பின் நகர்ந்து பசி, தூக்கம், இயற்கை உபாதை கழித்தல் போன்ற உணர்வுகள் இயல்பாய் நிகழுவதை அவன் மனைவி மூலமும், இன்னொருவனின் மனைவி என்ற அடையாளத்தோடு துக்க வீட்டிற்கு வந்திருப்பவளிடம் கூட தீர்க்க வேண்டிய தன் எச்ச ஆசை அதுவரை தன் மனதில் இருந்த துக்க உணர்ச்சியை பின் தள்ளிவிடுவதை அவன் நண்பன் மூலமும் உறுத்தலற்ற முறையில் காட்டியிருக்கிறார். ஆறுதல் சொல்ல சாவு வீட்டிற்கு வந்திருப்பவர்களுக்கும், ஆறுதலை பெறுதலுக்குரியவர்களாக இருப்பவர்களும் அடையாளங்கள் மட்டுமே மாறி நிற்கின்றன. நாவலின் மைய இழையின் வழியே எஸ்.ரா. தொட்டுக் காட்டியிருக்கும் விசயங்கள் நுட்பமான எதார்த்தம். அதேபோல, கானல் காட்டில் வாழும் மனிதர்கள் மூலம் மனித வாழ்விடத்தின் இன்னொரு புறத்தையும், அங்கு வாழும் மனிதர்களின் வாழ்வியல் போக்கையும் அதன் போக்கிலேயே காட்சிபடுத்துவதன் வழியாக நம் மனதையும் அவர்களுக்கு அருகில் இருக்க செய்யும் ஆவலை தூண்டுகிறார்.

சம்பத் போல வாழ்வில் சமநிலையை அடைய இயலாமல் அதன் மிச்ச காலத்தை கழிப்பதற்கான சாத்தியங்களுக்கு தன்னை ஒப்புக் கொடுக்க முயன்று, முயன்று தோற்கும் சிலரை நாம் பார்த்திருப்போம். அதன் பிரதி பிம்பத்தின் குறைந்த பட்ச எல்லைகளை தொட்டு திருப்பியவர்களாக பல நேரங்களில் நாமே கூட இருந்திருப்போம். அதை நிகழ்வுகளின் சாயலோடு உறுபசியாய் விரித்து வைத்தல் மூலம் அதன் அந்தரங்கப் பக்கங்களில் சிக்கித் தின்றும் மானுட அவலத்தை சம்பத் மூலமாக எஸ்.ரா. சொல்லிச் செல்கிறார்.  உலகில் உள்ள எல்லா தீக்குச்சிகளும் மிகப் பதட்டமாகவே எரிகின்றன என்று கூறும் சம்பத்தின் வார்த்தைகள் எத்தனை நிஜம்! அந்த திக்குச்சிகளாய் இருக்கும் நாம் பதட்டம் என்ற ஒற்றை வார்த்தைக்கு பின் ஒளிந்திருக்கும் வாழ்வின் சதிராடல்களில் இருந்து வெளியேற இயலாது தினறி நிற்கும் போது அது அக்குச்சியின் வழியாக நம்மை – வாழ்வின் மீதான நம்பிக்கையை – சுட்டு பொசுக்கி விடுகிறது.

1 comment:

  1. சிறப்பு. இதையும் வாசித்து பாருங்கள்
    https://ivansatheesh.blogspot.com/2011/04/blog-post_26.html

    ReplyDelete