Friday, 24 September 2021

கனவு மெய்ப்படும் - காலத்தின் தேவை!

தொடர் தோல்விகளால், இலக்கு நோக்கி நகர இயலா செயல்பாடுகளால் ஏற்படும் உள அயர்ச்சியில் இருந்து மீண்டு நம்மை நாமே புதுப்பித்துக் கொண்டு அடுத்த நிலைக்கு நகர வைப்பதில் நம்பிக்கை நூல்களுக்கு மிகப்பெரிய பங்கு உண்டு. அகத்தில் குறையும் நம்பிக்கையை புறத்தில் இருந்து தரும் பூஸ்டர்களாக அவைகள் இருக்கின்றன. அதனாலயே நம்பிக்கை நூல்கள் விற்பனையில் சக்கை போடு போடுகின்றன.  ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒரு கட்டத்தில் தேவையாக இருக்கின்ற நம்பிக்கையை நம் ஆன்மிகம் சார்ந்தும், அறவுரைகள் மூலமும் மனதில் அழுத்தமாய் பதிய தருவதில் சுகி. சிவம் அவர்களின் எழுத்தும், பேச்சும் எப்பொழுதும் முன்னேராய் நகர்பவை எனலாம். அந்த வாசக நம்பிக்கைக்கு இன்னொரு மகுடத்தை சூட்டும் வகையில் கவிதா பதிப்பகம் வெளியிட்டிருக்கும் சொல்வேந்தரின் நூல் கனவு மெய்ப்படும். இந்த தலைப்பே உள் நுழைவதற்கான ஆவலைத் தருகிறது.

கீதையை அடித்தளமாய் இட்டு சரியான நெறியோடும், அறிவோடும் வாழ்க்கைக்கான சூட்சும நுட்பங்களை சொல்லும் அதேநேரம் குட்டிக் கதைகள், பெரியோர்களின் வாழ்வியல் நிகழ்வுகள் வழி சுகி. சிவம் அவர்கள் இன்னும் எளிமையாய் கீதையின் தாத்பரியத்தை புரிய வைக்கிறார். இருப்பதற்கும், வசிப்பதற்குமான நுட்பமான வேறுபாடு, உடம்பையும், உள்ளத்தையும் ஒழுங்குபடுத்த வேண்டிய அவசியம், தர்மம் வழுவா நெறி,  உயிருக்கு உணவு கொடுத்தல், சமநிலையில் வாழ்தல், உணர்ச்சிவசப்படாத பார்வையில் வாழ்வை அணுகுதல், ஞானத்தை தேடுதல், மன உறுதி, செயலில் கவனம், துவளாது போராடுதல், பொய், மெய் வழியே தன்னை அறிதல், கேள்விமட்டுமல்ல தனக்கு வேண்டுவதையும் தயக்கமின்றி கேட்கப் பழகுதல் என அகம், புறம் சார்ந்து நமக்குள் நிகழ்த்த வேண்டிய மாற்றங்களை, அகற்ற வேண்டிய களைகளை, கொள்ள வேண்டிய உறுதியை  பதினெட்டு கட்டுரைகளில் வாசிக்கத் தருகிறார். இவைகளை வாசித்துத் தெளிய வேண்டியது அவரவர் பொறுப்பு.

“இப்படியெல்லாம் மனிதர்கள் வாழ்ந்தால் நன்றாக இருக்குமே என்பது ஒருவகை மனநிலை. இப்படியெல்லாம் நான் வாழ்ந்தால் வாழ்க்கை சிறப்பாய் இருக்குமே என நினைப்பது இன்னொரு வகையான மனநிலை. இவ்விரு மனநிலைக்குமான மந்திரம் என இந்நூலைச் சொல்லலாம்.

ஒவ்வொருத்தருக்கும் தங்கள் கனவு மெய்ப்பட வேண்டும் என்பதே விருப்பமாக இருந்த போதும் எத்தனை பேருக்கு அது சாத்தியமாகிற்து என்பது மலையளவு கேள்வியாகவே நிற்கிறது. அந்த கேள்வி என்னில் இருந்து நழுவ வேண்டும் என நினைப்பவர்களும், நழுவும் என நம்புபவர்களும் நம்பிக்கையோடு இந்நூலை கையில் எடுக்கலாம்.

1 comment:

  1. சுருக்கமான ஆயினும் அருமையான அறிமுகம்..இந்த நூலைப் படித்தவன் என்பதால் விமர்சனத்தின் அருமையை கூடுதலாய் உணரமுடிந்தது.வாழ்த்துகள்..

    ReplyDelete