Monday, 17 January 2022

நான் கேட்பது பிச்சையல்ல. உதவி!

காய்ச்சல் காரணமாக மருத்துவமனைக்குச் சென்று விட்டு தேநீர் அருந்துவதற்காக கடைக்குச் சென்றிருந்தேன். என் அருகில் அமர்ந்திருந்த ஒருவர் பப்ஸ் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அவருக்கான டீ அருகில் இருந்தது. சப்ளையர் அவர் அருகில் ஒரு பார்சல் கவரை வைத்துவிட்டு பில்லைக் கொடுத்தார். இருவரும் ஒரே நேரத்தில் கடையில் இருந்து வெளியானோம். என் இரு சக்கரவாகனத்திற்கு அருகில் அவரும் தன்னுடைய இரு சக்கர வாகனத்தை நிறுத்தி இருந்தார். அவருக்கு பின்னால் ஒரு சிறு சாக்கு பையைக் கையில் கோர்த்தபடி ஒரு பெரியவர் கைகூப்பியபடி நின்றார். வாய் திறந்து அவர் ஏதும் கேட்கவில்லை.

தன் இருசக்கரவாகனத்தில் இருந்த தலைக்கவசத்தை எடுத்து மாட்டிக் கொண்ட அந்த நபர் தள்ளிப்போய்யா என்று சற்று உரத்த குரலில் சொன்னார். அதைக்கேட்டதும் அமிலக்கரைசல் தன் மீது பட்டால் எப்படி பதறுவோமோ அப்படியான பதறலோடு அந்தப் பெரியவர் சரிய்யா…சரிய்யா…நீங்க போங்க என சொல்லி விலகினார். அவருக்குப் பக்கத்தில் இருசக்கர வாகனத்தை எடுக்கக் காத்திருந்த எனக்கு தர்மசங்கடமாகி விட்டது. ஒரு ப்த்து ரூபாய் தாளை எடுத்து அவரிடம் கொடுத்தேன். அதைப் பார்த்து முன்பு போலவே என்னிடமும் பதறியவர், ஐயா……வாணாம். உங்கள்ட்ட இரண்டு நாளைக்கு முன்னாடியே வாங்கிட்டேன் என்றார்.

அதனாலென்ன? வச்சுக்கங்க என்றேன்.

இல்லை ஐயா, நான் கேட்கிறது உதவி. பிச்சை இல்லை. உங்கள்ட்டயே திரும்பியும் அது பிச்சையாகிடாதா? என்றார். என் தந்தை வயதில் இருந்த அவரிடமிருந்து அந்த வார்த்தைகளைக் கேட்ட மாத்திரத்தில் என்னையுமறியாமல் கண்கள் கலங்க ஆரம்பித்தது. எதுவும் பேசாமல் அந்த இடத்தை விட்டு நகர்ந்து விட்டேன். அந்தக் கடைக்கு வந்து போகும் எத்தனையோ பேரில் எவரேனும் அவருக்கு உதவ வேண்டும் என மனதுக்குள் நினைத்துக் கொண்டேன். மேன்மக்களாக இருக்க நினைப்பவர்களுக்கு மத்தியில் உதவிக்கும், பிச்சைக்குமான வித்தியாசம் தெரியாத என்னைப் போன்றவர்களால் நினைக்க மட்டும் தானே முடியும்!

படம் - இணையம்

No comments:

Post a Comment