ஒரு குழந்தையானது தனது பழக்க வழக்கங்களில் மேம்பாடு அடைவதும், தாழ்நிலை அடைவதும் பெற்றோரையும், சுற்றுச்சூழலையும் கொண்டே தீர்மானிக்கப்படுகிறது என்கிறார் மு.வ. இதை இன்னும் எளிமையாகச் சொல்ல வேண்டுமானால் வீடு, சமூகம் சார்ந்தே குழந்தைகளின் எதிர்காலம் மேம்படுகிறது எனலாம். வீட்டில் பெற்றோர்களையே அதிகம் சார்ந்திருக்கும் குழந்தைகள் அவர்களைப் பார்த்தே தங்களை வடிவமைக்க முயல்கின்றன. இந்த ஆரம்ப முயற்சி தான் பின்னாளில் ஒரு குழந்தையை சமூகத்திற்கு அடையாளம் காட்டுகிறது. ஒவ்வொரு குழந்தையின் வளர்ச்சியிலும் பெற்றோர்களின் நடவடிக்கைகள் மிகப் பெரிய தாக்கத்தை தரக்கூடியதாக அமைவதால் தான் குழந்தைகள் உளவியலில் ”பெற்றோர் – குழந்தைகள் உறவு” குறித்து அதிக கவனம் அளிக்கப்படுகிறது. ”மக்கு” என பள்ளியிலிருந்து விரட்டியடித்த போது நான் உனக்கு பாடம் சொல்லித்தருகிறேன் என அரவணைத்துக் கொண்ட தன் தாயின் நடவடிக்கையால் செவித்திறன் குறைந்த ஒரு குழந்தை பின்னாளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கண்டுபிடிப்புகளுக்கு உரிமையாளரானது. அந்தக் குழந்தையின் பெயர் தாமஸ் ஆல்வா எடிசன்!
இப்படியான அரவணைப்பு சார்ந்த நடவடிக்கைகளின் வழி குழந்தைகளை நேசிப்பதன் மூலமாக மட்டுமே அவர்களுடனான உறவை இணக்கமாகப் பேண முடியும். துரதிருஷ்டவசமாக குழந்தைகளிடம் அன்பாய் இருப்பதையும், அவர்களுக்கு தேவையானவைகளை வாங்கி தருவதையும் மட்டுமே நேசிப்பதற்கான அடையாளங்களாக - வரையறைகளாக நாம் வைத்திருக்கிறோம். இந்த அடையாளமும், வரையறையுமே தவறு. இதற்குப் பெயர் கடமை. நேசிப்பு, கடமை இவ்விரண்டிற்குமான வித்தியாசத்தை உணராததால் தான் ”நான் அவனுக்காக என்னவெல்லாம் செய்தேன், அவனை எப்படியெல்லாம் உருவாக்க நினைத்தேன். ஆனால் பள்ளிக்கூடம் போக மாட்டேங்கிறான். படிக்க மாட்டேங்கிறான்” என பல பெற்றோர்கள் புலம்புகின்றனர். பெற்றோர்கள் தன் கடமையை செய்வதன் மூலம் மட்டும் தங்களைப் பற்றி குழந்தைகளிடம் புரிதலை உருவாக்கி விட முடியாது. புரிதல் இல்லாத போது அங்கு நேசிப்பு குறைந்து குழந்தைகளின் செயல்கள் பெற்றோரிடமிருந்து குற்றச்சாட்டுகளாக வெளியேறுகிறது. அதன் தாக்கம் அதிகமாகும் போது பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளிடம் வார்த்தைகளால் கடுமையாக நடந்து கொள்கிறார்கள். சில பெற்றோர்கள் ”அடிக்காத பிள்ளை திருந்தாது” என்ற அபத்தமான உதாரணங்களுக்கு முன்னுதாரணமாகிப் போகிறார்கள்.
பள்ளியிலேயே குழந்தைகளுக்கான எல்லாமும் கிடைத்து விடுகிறது என்ற பெற்றோர்களின் மனநிலைதான் இது போன்ற ஆதங்கங்களுக்கு காரணமாகின்றன. உண்மையில் பள்ளியில் தான் குழந்தைகளுக்கு பிரச்சனைகள் ஆரம்பமாகிறது. பெற்றோரின் கையிலிருந்து விலகிச் செல்லும் குழந்தைகள் சந்திக்கும் முதல் பிரச்சனை பள்ளியில் தான் தொடங்குகிறது. சக மாணவனோடு முரண்படுதல், ஆசிரியர், வகுப்பறை மீதான பயம், புதிய சூழலில் நிகழும் நிகழ்வுகள், தனியே செய்ய வேண்டிய செயல்கள் என தான் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை ஆசிரியர்களிடம் சொல்லத் தயங்கி நிற்கும் ஒரு குழந்தை அதற்கான தீர்வைத் தருபவர்களாக பெற்றோர்களை நோக்கி வரும் போது அவர்கள் பேச தயாராக இல்லாத பட்சத்தில் அந்த குழந்தைக்கு மனவியல் பிரச்சனை ஆரம்பமாகி விடுகிறது. அதேபோல, பள்ளியில் தான் புதிதாக கேட்ட, படித்த விசயங்களைப் பகிர்ந்து கொள்ள குழந்தை பெற்றோரை நாடி வரும் போது ”கதையெல்லாம் போய் அப்பா கிட்ட சொல்லு” என அம்மாவும், ”அப்பாவுக்கு வேலை இருக்கு” என அப்பாவும் மறுக்கும் போது அது அந்தக் குழந்தையின் மனதில் ஒரு முடிச்சாக விழுந்து விடுகிறது. இந்த முடிச்சுகள் தான் குழந்தைகள் வீட்டில் அதிக சேட்டைகள் செய்வதற்கான தூண்டலைச் செய்கின்றன என்கிறார் ஓஷோ.
குழந்தைகளை இது போன்ற பிரச்சனைகளிலிருந்து விடுவிக்க அவர்களை எப்பொழுதும் பெற்றோர்கள் நெருக்கத்தில் வைத்திருக்க வேண்டும். அதற்கு அவர்களுடன் தினமும் சிறிது நேரம் உரையாடுவதன் மூலம் இதை சாத்தியமாக்க முடியும். அவர்கள் பேசும் போது அவர்களுடன் அமர்ந்து கேட்பது, பிரச்சனைகள் அல்லது பயத்தால் அவர்கள் பேச தயங்கும் போது பொதுவான சில உரையாடல்கள் வழி அவர்களைப் பேச வைப்பது என்ற இரண்டு வழிகளை மேற்கொண்டாலே போதும். என்ன நிகழ்ந்தாலும் அப்பா, அம்மாவிடம் போய் சொன்னால் அவர்கள் சரி செய்து விடுவார்கள் என்ற நம்பிக்கையை அவர்களுக்கு வர வைக்க வேண்டும். கூட்டுக்குடும்ப வாழ்க்கை சிதைந்து போய் தனித்த வாழ்க்கை வாழும் சூழலில் குழந்தை பெற்றோரை நேசிக்கவும், அவர்களுடனான உறவை விரும்பவும் குழந்தைகளிடம் இந்த நம்பிக்கையை உருவாக்குவது அவசியம். அதனால் தான் பொருளாதார நெருக்கடிகளுக்கான வேக வாழ்க்கையில் குழந்தைகளுக்கு நேரம் ஒதுக்குவது சிரமமாக இருக்கிறது என்று கூறுவதை முதலில் நிறுத்துங்கள் என்று குழந்தை உளவியாளர்கள் அடிக்கடி அறிவுறுத்துகின்றனர். இந்த அறிவுறுத்தலை அச்சரம் பிசகாமல் பின்பற்றும் பெற்றோர்கள் குழந்தைகளின் கை கோர்த்து அவர்களின் வாழ்நாள் முழுக்க பயணிக்கிறார்கள். குழந்தைகளுக்காக நேரம் செலவழிப்பது, சொன்ன விசயத்தையே குழந்தைகள் திரும்ப, திரும்ப சொன்னாலும் அதை புதிய விசயம் போலக் கேட்பது, அடக்குமுறை இல்லாத அன்பை தருவது இந்த மூன்றும் தான் தாத்தா, பாட்டி ஆகியோரிடம் குழந்தைகள் நெருக்கமாக இருப்பதற்கும், அவர்களை விரும்புவதற்கும் முக்கிய காரணம். இதை பெற்றோரிடம் பெறும் குழந்தைகள் இன்று அரிதாகி விட்டார்கள்!
குழந்தைகள் செய்யும் சின்ன விசயங்களைக் கூட கவனித்து அதற்காக அவர்களை உற்சாகப்படுத்தி பாராட்டுவதன் மூலமும், போனில் எப்படி பேசுவது? வீட்டிற்கு வந்த உறவினர்களை எப்படி வரவேற்பது? என சில அடிப்படையான விசயங்களைச் சொல்லித் தருவதன் மூலமும், சில செயல்களில் அவர்களையும் உங்களோடு பங்கெடுக்க வைப்பது, சிறு, சிறு கதைகளை சொல்லி அவர்களை அது சார்ந்து பேச வைத்து அவர்களின் சிந்தனைப் பரப்பை விரிய வைப்பது ஆகியவைகளின் மூலமும் குழந்தைகளின் முதல் நண்பராக உங்களை நிலை நிறுத்திக் கொள்ள வேண்டுமேயொழிய வெறும் எச்சரிக்கை வார்த்தைகளால், கோபத்தின் வெளிப்பாட்டால் குழந்தைகளை நீங்கள் விரும்பிய வகையில் செயல்பட வைக்க முயலக் கூடாது. அது அந்தக் குழந்தைக்கு உங்கள் மீதான அந்நியோனியத்தை உருவாக்குவதற்கு பதிலாக ஒருவித அச்சத்தையே தரும். புரிதலை உருவாக்காது. நெருங்கி வரச்செய்வதற்கு பதில் விலகிச் செல்லவே வழி வகுக்கும். எந்த ஒரு செயலையும் உங்களின் கட்டாயத்திற்காக என்றில்லாமல் உங்களுக்காகவும் – தனக்காகவும் என குழந்தையை செய்ய வைப்பதில் தான் பெற்றோரின் வெற்றி அடங்கி இருக்கிறது. அப்பா, அம்மாவுக்கு பயந்துக்கிட்டு இதைச் செய்தேன் என்றில்லாமல் அப்பா அம்மாவுக்காக இதைச் செய்தேன் என்று உங்கள் குழந்தை சொல்லுமேயானால் அதுதான் உங்களின் வெற்றி. அப்படிச் சொல்ல வேண்டுமானால் அதற்கு விட்டுக்கொடுத்தலுடன் கூடிய நேசிப்பு அவசியம். எனக்கு ஏற்பட்ட அனுபவம் ஒன்றைச் சொல்கிறேன்.
அன்று சுதந்திரதினம் என்பதால் அரைநாள் தான் வகுப்பு. அதுலயும் ஒரு மணிநேரம் விழாவுக்குப் போயிடும். இரண்டு நோட்டும், ஸ்நாக்சும் தான் கொண்டு போகனும். அதுனால என் ஸ்கூல் பேக்குக்கு பதிலா அம்மா கிட்ட இருக்கிற பேக்கை கொண்டு போகவா? என மகள் கேட்டாள். குடும்ப நண்பர் மூலம் பரிசாக வந்த வேலைப்பாடுள்ள அந்த பேக்கை வீணாக்கி விடுவாளோ என்ற எண்ணத்தில் நான் வேண்டாம் என்றேன். அவளும் பலவாறு பேசிப்பார்த்தாள். நானும் பிடிகொடுக்காமல் மறுத்து விட்டேன். இரவில் உறங்குவதற்கு முன் தன் அம்மாவிடம் பேசிப்பார்த்தவள் எந்த பேக்கை நாளைக்கு நான் எடுத்துட்டு போறதுன்னு முடிவு பண்ணிவையுங்க என சொல்லி விட்டு உறங்கப் போய்விட்டாள். விரும்பி கேட்டாளே என்ற உறுத்தல் எனக்குள் வரவே ”காலையில் அந்த பேக்கை கொடுத்தனுப்பு” என மனைவியிடம் சொல்லிவிட்டு மகளிடமும் சொன்னேன். அவளோ, ”வேண்டாம்...… என் ஸ்கூல் பேக்கையே கொண்டு போறேன். நைட்டே எல்லாம் எடுத்து வைத்துவிட்டேன்” என்றாள். பரவாயில்லம்மா இன்னைக்கு ஒருநாள் தானே....... எடுத்துட்டு போ. அம்மாவிடம் சொல்லி விட்டேன் என்றேன். அவளோ ப்ளீஸ் அப்பா…..வேண்டாம் என்றாள். எப்பொழுதும் வேணும் என்பதற்கு ப்ளீஸ் என்பவள் இம்முறை வேண்டாம் எனபதற்கு சொன்னதால் ஏன்? என்று காரணம் கேட்டேன். நான் சொல்ற எல்லாத்தையும் நீங்க கேட்கிறீங்க. அதுமாதிரி நீங்க சொல்றதையும் நான் கேட்கனுமில ……அதுனால நீங்க சொன்ன மாதிரியே என் ஸ்கூல் பேக்கையே எடுத்துட்டு போறேன் என்றாள்.
குழந்தைகளுக்காக நீங்கள் உங்களின் பிடிவாதங்களை, மனநிலையை விட்டுக்கொடுத்து செயல்படும் போது அவர்களும் தங்களை உங்களுக்காக மாற்றிக் கொள்வார்கள். எனவே வளரும் குழந்தைகளை விட்டுக்கொடுக்கும் மனநிலையோடு நேசித்தாலே போதும் அவர்களை உங்கள் வசப்படுத்த முடியும். உங்களின் முன் குழந்தை என்ற கல் இருக்கிறது. அதை சிலையாய் வடித்து ஆலயத்திற்குள் வைப்பதும், அம்மியாய் கொத்தி அடுப்படியில் முடக்குவதும் உங்கள் கைகளில் தான் இருக்கிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
நன்றி : தாய்த்தமிழ் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி கல்விச் சிறப்பு மலர். திருப்பூர்.