இங்கிலாந்தின் பிரதமராக இருந்த சர்ச்சில் பேச்சை விட செயலுக்கே முக்கியத்துவம் தருபவர். அதிர்ந்து பேசாதவர். அவருடைய அறைக்குப் பக்கத்து அறையில் இருந்த அமைச்சரோ எப்பொழுதும் சப்தமாக பேசும் வழக்கமுடையவர்.
ஒருநாள் சர்ச்சில் தனது அலுவலக அறையில் முக்கியமான வேலையில் இருந்த போது பக்கத்து அறையில் இருந்து வந்த அமைச்சரின் பேச்சு சப்தத்தினால் பொறுமையிழந்தார். உடனே தன் உதவியாளரை அழைத்து அவரிடம் போய் மெல்லப் பேசச் சொல்லு என்று கூறினார். அங்கு சென்று திரும்பிய உதவியாளர் ”ஸ்காட்லாந்தில் உள்ள முக்கிய அதிகாரியுடன் அவர் பேசிக் கொண்டிருக்கிறார்” என்றார்.
உடனே சர்ச்சில், ”அது எனக்குத் தெரியும். அவரிடம் தொலை பேசியைப் பயன்படுத்தி பேசச் சொல்” என்றார் நக்கலாக!
இன்று பொது இடங்களில் கூட அலைபேசியில் அலையடிக்கும் சப்தத்தோடு பேசுபவர்கள் தான் அதிகம். நமக்கான விசயங்களைப் பேசும் பொழுது அது மற்றவர்களுக்குத் தொல்லை தராதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். அது நாகாரீகம் மட்டுமல்ல. நல்ல பண்பும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
நன்றி : தமிழ்முரசு நாளிதழ்