பெளதீகத்திற்கான நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி சர்.சி.வி. இராமனிடம் ஒரு இளைஞன் வேலை கேட்டு வந்தான். நேர்முகத் தேர்வில் இராமன் அவனிடம் பெளதீகம் சம்பந்தப்பட்ட சில கேள்விகளைக் கேட்டார். அந்த இளைஞனுக்கோ விடை தெரியவில்லை. பெளதீகம் தெரியாதவருக்குத் தன்னிடம் வேலை இல்லை எனக் கூறி இராமன் அந்த இளைஞனை அனுப்பி விட்டார். ஏமாற்றத்தோடு அந்த அறையை விட்டு வெளியே வந்த இளைஞன் அறை வாசலில் ஒரு குண்டூசி கீழே கிடப்பதைக் கண்டான். உடனே அதை எடுத்து அதற்குரிய இடத்தில் வைத்து விட்டு வெளியே செல்லப் புறப்பட்டான்.
இதைத் தற்செயலாகக் கவனித்த இராமன் அந்த இளைஞனைத் திரும்பக் கூப்பிட்டார். “உன்னை வேலையில் சேர்த்துக் கொண்டு விட்டேன். உனக்குப் பெளதீகம் தெரியா விட்டாலும் என்னால் அதைக் கற்றுத்தர முடியும். ஆனால், பொறுப்பில்லாதவர்களுக்கு என்னால் பொறுப்பைக் கற்றுத் தர முடியாது” என்றார். சர்.சி.வி.இராமன் அந்த இளைஞனிடம் கூறிய காரணம் வாழ்க்கையில் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்! பின்பற்ற வேண்டிய விசயம்!!
பொறுப்புணர்வு கொண்டவர்களால் மட்டும் தான் எதையும் நேர்த்தியாகச் செய்ய முடியும். செய்ய முடிகிறது என்ற உண்மையை உணருங்கள். அப்படியான பொறுப்புணர்வு மட்டுமே உங்களுடைய நோக்கத்தை அடைவதற்கான உற்சாகத்தையும், உந்து சக்தியையும் தொய்வில்லாமல் தரும். எனவே உங்களுடைய அன்றாட நிகழ்வுகளில் கூட அலட்சியம் காட்டாமல் பொறுப்புணர்வோடு செயல்படுங்கள். உங்களுக்கான அடையாளம் தானாகவே உங்களைத் தேடி வரும்
நன்றி : தமிழ்முரசு நாளிதழ்