நீங்கள் செய்து கொண்டிருக்கின்ற ஒரு செயலின் முடிவு எதிர்பார்த்தபடி இல்லாமல் போய்விடுமோ, குறித்த நேரத்தில் செய்து முடிக்க முடியாமல் ஆகிவிடுமோ என்ற நினைப்பு உங்களுக்குள் எப்பொழுது தோன்றுகிறதோ அந்த வினாடியே பதற்றமும் உங்களைப் பற்றிக் கொண்டு விடுகிறது. இந்த நினைப்பு தவறானதாகக் கூட இருக்கலாம். ஆயினும், இத்தகைய சந்தேக நினைப்பானது அந்தச் செயல் முடியும் வரை காத்திருப்பதில்லை. மாறாக, உங்களின் மீது ஆதிக்கம் செலுத்தி செயல்களின் ஒருங்கிணைப்பை சிதறடித்து விடுகிறது. அதனால் தான் ”பதறிய காரியம் சிதறும்” என்றார்கள்.
காரியம் சிதறாமல் இருக்க வேண்டுமானால் முதலில் பதற்றத்தை ஏற்றுக் கொள்ளப் பழகுங்கள். அதை உங்களுக்குள்ளேயே வைத்திருந்து செயல்பாட்டுக்கான ஊக்கமாக மாற்றுங்கள். அப்படி மாற்ற முடியாவிட்டாலும் கூட எந்தச் சூழ்நிலையிலும் உங்களின் பலவீனமாக வெளிக் காட்டிக் கொள்ளாதீர்கள். ஏனெனில் அது உங்களின் மீதான மதிப்பீட்டைக் குறைத்து விடும். “ஐயோ….அவரிடமா? வேலையைச் சொன்னாலே பதறிடுவாரு. எப்படி செஞ்சு முடிப்பாரு?” என்ற சந்தேகப்பட்டியலில் உங்களின் பெயரை நீங்களே சேர்த்துக் கொள்ள அனுமதிக்காதீர்கள்.
செயலின் மீதானவைகளின் நடவடிக்கைகள், அப்போதைய நெருக்கடிகள், சூழ்நிலைகள் இவைகள் தான் பதற்றம் உருவாக முக்கியக் காரணங்களாக இருக்கின்றன. பதற்றமே இல்லாமல் இருக்க முடியாது. ஆனால் அதைச் சமாளிக்க முடியும். அதற்கு அப்படியான சூழ்நிலைகளில் எப்படிச் செயல்படலாம் என்ற நெறிமுறைகளை வைத்துக் கொண்டு அவைகளை நம்முடைய ஒவ்வொரு செயலின் போதும் பின்பற்றப் பழகிக் கொண்டோமானால் பதற்றத்தின் மூலம் ஏற்படக்கூடிய எதிர்விளைவுகளை வெகுவாகக் குறைத்து விட முடியும். இத்தகைய நெறிமுறைகளை “மாற்று ஏற்பாடு” என்ற பெயரில் வெற்றியாளர்கள் பின்பற்றுகின்றனர். அவர்களது திட்டமிடல் படிவங்களைப் பார்த்தீர்களேயானால் ஒவ்வொரு திட்டத்தின் அருகிலும் மாற்று ஏற்பாடு என்ற பெயரில் இணைப்புத் திட்டம் ஒன்றை நிரப்புவதற்கான கட்டங்கள் இருக்கும். இன்றைய வேக வாழ்க்கையில் நவின வியாதிகளின் பட்டியலில் பதற்றத்தையும் மருத்துவ உலகம் சேர்த்து விட்டது. எப்படி? யாரால்? எங்கே? எந்த சமயத்தில்? எதற்கா? பதற்றம் ஏற்படும் என்பது தெரியாத நிலையில் அத்தகைய ஒருநிலையைச் சமாளிக்க நாம் எப்பொழுதும் தயாராக இருக்க வேண்டும்.
பதற்றத்தை உங்களுக்குள் ஏற்படுத்தக் கூடிய வகையில் ஒரே நேரத்தில் பல செயல்களைச் செய்வதிலும், பல பிரச்சனைகளைக் கையாள்வதிலும் ஈடுபடாதீர்கள். அதேபோல, நெருக்கடியான சூழல் சார்ந்து முடிவெடுக்க வேண்டிய தருணங்களில் தயங்கி நிற்காதீர்கள். அவரிடம் ஒப்புதல் பெற வேண்டும். இவரிடம் ஆலோசனை கேட்க வேண்டும் என்ற உப்புச் சப்பான காரணங்களால் முடிவெடுக்க வேண்டிய நேரங்களில் முடிவு எடுக்காததால் பல வெற்றிகள் தோல்வி நிலைக்கு நகர்ந்திருக்கின்றன. நீங்கள் எடுக்கின்ற முடிவு அந்தச் செயலின் இறுதித் தீர்வு அல்ல! அந்தச் செயலின் செயல்பாட்டு நிலையில் ஏற்படக்கூடிய நெருக்கடியைச் சமாளிக்க மேற்கொணட ஒரு மாற்று ஏற்பாடு மட்டுமே! எனவே நீங்கள் மேற்கொண்டிருக்கும் செயல்களுக்கான செயல்பாடுகள் சார்ந்து எப்பொழுதும் ஒரு மாற்று ஏற்பாட்டை கைவசம் தயாராய் வைத்திருங்கள். கட்டாயம் என்ற நிலையில் உண்டாகக்கூடிய பதற்றம் ஏற்படுத்தக் கூடிய விளைவுகள் விபரீதமானதாக மட்டுமல்ல விசித்திரமானதாகவும் இருக்கும். அது உங்களையே உங்களுக்குத் தெரியாத ஒரு நிலையை ஏற்படுத்தி விடும் என்பதற்கு ஒரு உண்மைச் சம்பவம் சொல்கிறேன்.
ஆகாசவாணியின் தமிழ்செய்திகள் வாசிக்கும் அறை அது. செய்தி அறிக்கைகள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு தயாராக இருந்தன. செய்தி வாசிப்பாளர் மட்டும் தான் வர வேண்டி இருந்தது. அவர் வரவை எதிர்பார்த்து மற்ற ஊழியர்கள் காத்திருந்தனர். காத்திருந்த நேரத்தில் மாற்று ஏற்பாடு பற்றி எதுவும் யோசிக்கவில்லை. எவருக்காகவும் காத்திருக்காத நேரம் ஓடிக் கொண்டே இருந்தது. செய்தி வாசிப்பாளர் அந்த நேரம் வரை வராததால் மற்றவர்களுக்கு பதற்றம் உண்டாகி விட்டது. குறிப்பிட்ட நேரத்தில் செய்தியை ஒலிபரப்புச் செய்தாக வேண்டுமே என்ற அவசரத்தில் செய்தி வாசிப்பதற்கு ஏற்ற குரல்வளம் அங்கு இருப்பவர்களில் யாருக்கு இருக்கிறது? எனக் கண்டறிய நேரமிருக்கவில்லை,. அதேநேரம் யாரையாவது கூப்பிட்டு செய்தி வாசிக்க வைக்கவும் முடியாது. பதற்றத்தில் ஒவ்வொருவரும் ஒரு முடிவெடுக்க கடைசியாக அங்கிருந்த செய்தி மொழிபெயர்ப்பாளரை வாசிக்க வைப்பது என தீர்மானிக்கப்பட்டது.
செய்தி அறிக்கைகளை அள்ளிக்கொண்டு அவரும் ஸ்டுடியோவிற்குள் சென்று மைக்கின் ஃபேடரைத் திறந்து ஆகாசவாணி……….செய்திகள் வாசிப்பது என பேப்பரைப் பார்த்து வாசிக்க ஆரம்பித்தார். ஆனால் அதற்கு அடுத்து வெறும் இடைவெளி மட்டும் இருந்தது,. யார் செய்தி வாசிப்பது என கடைசிவரை முடிவாகததால் செய்தி அறிக்கையைத் தயார் செய்தவர் வாசிப்பவர் பெயரை எழுதாமல் கொடுத்து விட்டார். செய்தி வாசிப்பவர் மொழிபெயர்ப்பிற்கான லைசென்ஸ் பெற்ற தகுதியுடையவராய் இருந்த போதும் அவரால் அந்த இடத்தில் உடனே அவர் பெயரைச் சொல்ல முடியவில்லை. சொல்ல முடியவில்லை என்பதை விட தன் பெயரை பதற்றத்தில் மறந்தும் போனார். தன் பெயரை நினைத்துப் பார்க்கும் குழப்பத்திலும், பதற்றத்திலும் மைக்கின் ஃபேடரை மூடி விட்டு திரு திருவென விழித்துக் கொண்டிருந்தார்.
மைக்கில் தான் ஏதோ பிரச்சனையாகி விட்டதோ என நினைத்து அறையின் கதவைத் திறந்த எஞ்சினியர் ஒருவர் இவர் பெயரைச் சொல்லி அழைத்து மைக்கைத் தவறுதலாக மூடிவிட்டீர்ள் போலிருக்கிறது. உங்கள் குரல் வெளியில் கேட்கவில்லை. ஆரம்பத்தில் இருந்து படியுங்கள் என ஃபேடரைக் காட்டிச் சொன்ன பின்பே இவருடைய பெயர் இவருக்கே ஞாபகம் வந்திருக்கிறது. அதன்பின் வாசிப்பவர் பெயரோடு ஆகாசவாணி செய்தி ஒலிபரப்பானது. பதற்றத்தில் பெயரை மறந்தவர் மறைந்த பூர்ணம் விஸ்வநாதன்.
பதற்றத்தில் அவர் பெயரை மறந்ததும் அவருடைய மனதில் ஏற்பட்ட நிகழ்வுகளை அவர் சொல்லிய நடையிலேயே கேட்போம். “என் பெயர் எனக்கு ஞாபகம் வரவில்லை என்ற கொடுமையோடு அணி, அணியாக வேறு எத்தனையோ பெயர்கள் போட்டி போட்டுக் கொண்டு என நினவில் வந்து மோதின. தற்போது என்னோடு வேலை செய்பவர்கள் பெயர்களோடு எப்பொழுதோ நான் சந்தித்த, என்னைச் சந்தித்த நண்பர்கள் பெயர்களும் வந்து குழப்பியடித்தன”.
இப்படியான குழப்ப மனநிலையில் அவசரப்பட்டு செய்கின்ற சில செயல்களால் உண்டாகும் எதிர்வினைகளினால் கோபம், விரக்தி எரிச்சல், வெறுப்பு போன்றவைகள் ஏற்பட்டு செயலின் மீதான இயக்கத்தைப் பாதிக்கிறது. பதற்றமில்லா அமைதியில் தான் எதையும் சிந்தித்து செயல் படுத்த முடியும். அவசரத்தில் செய்கின்ற செயல்களில் வேகம் இருக்குமேயொழிய வெற்றிக்கான முடிவு இருக்காது. பல பெரிய கண்டுபிடிப்புகள் அவசரமில்லா அமைதியில் தான் கண்டறியப்பட்டன. நியூட்டன் புவீஈர்ப்பு விசையைக் கண்டறிந்ததும், ஆர்க்கிமிடிஸ் தன்னுடைய தத்துவக் கோட்பாட்டைக் கண்டறிந்து வெளியிட்டதும் அமைதியான நிலையில் தான்!
உடனே……..உடனே……….என நீங்கள் என்னதான் ஓடி, ஓடி உழைத்தாலும் அமைதியில்லா அவசரம் என்பதன் பலன் பூஜ்யமாகவோ அல்லது சாதாரனமானதாகவோ தான் இருக்கும் உலகையே தன்னுடைய படைகளாலும், நடவடிக்கைகளாலும் மிரள வைத்துக் கொண்டிருந்த ஹிட்லரின் சாவு அவருடைய அவசரத்தால் தான் தீர்மானிக்கப்பட்டது. எப்படியும் இரஷ்யாவை வீழ்த்தி விட வேண்டும் என்பதில் அவர் காட்டிய அவசரம் இரஷ்ய பனிமலைகளில் ஜெர்மானிய படைகளை தோல்வியடையச் செய்தது. அமைதியான குளத்தில் மீன்பிடிப்பது எளிது. அதை விடுத்து கலங்கிய குட்டையில் என்ன தான் நீங்கள் கஷ்ட்டப்பட்டு தூண்டில் வீசினாலும் மீன்கள் அகப்படுவது அரிது!
நீங்கள் திறமைசாலியாக, பல்துறை வித்தகராக இருக்கலாம். ஆனால் உங்களின் வெற்றி என்பது செயலின் மீதான நடவடிக்கையில் தொடங்கி அதை முடிக்கும் வரை சீராக, திட்டமிட்டபடி கொண்டு செல்வதில் தான் இருக்கிறது. எனவே, சுற்றுபுறச் சூழ்நிலைகளினால் உங்களின் சொந்த செயல்பாடுகளினால் பதற்றமான சூழல் ஏற்பட்டால் அதிலிருந்து தப்பி ஓட முயலாதீர்கள். அவசரத்தில் எடுத்தேன், கவிழ்த்தேன் என ஏனோ தானே வென அந்தச் செயலைச் செய்வதை விட்டு விட்டு அமைதியுடன் அணுகுங்கள். தேவைப்பட்டால் கூடுதல் நேரம் எடுத்து திட்டமிட்டதை விடச் சிறப்பாகச் செய்யப் பழகுங்கள். மாறாக, அதிலிருந்து தப்பிக்கும் அவசரத்தில் செயல்களின் சாதக, பாதகங்களை ஆராயாமல் முடிவெடுத்தீர்களேயானால் அது இலட்சியத்தையே மாற்றி விடும். எனவே உங்களின் வெற்றிப் பயணத்தின் ஆரம்பத்தில் மட்டுமல்ல தொடர் ஓட்டத்திலும் கூட பதற்றமோ அதன் மூலம் அவசரமோ காட்டாதீர்கள். ”அவசரம் அபாயகரமானது” என்ற வெற்றியாளர்களின் வேத சூத்திரம் உங்களுக்குள் ஒரு மந்திரமாகவே ஒலித்துக் கொண்டிருக்கட்டும்!
நன்றி : முத்துக்கமலம்.காம்