Monday 28 June 2021

கபடவேடதாரி - விமர்சனப் போட்டி - 11

அத்தியாயம் – 11  

 (ஒரே ஒரு பூங்கொத்து)

அரசியாரைக் காணத் திரளும் கூட்டத்தினால் ஏற்படும் பதற்றத்தைக் கட்டுப்படுத்த பாதுகாப்புத்துறையினர் எடுக்கும் நடவடிக்கையின் வழி தன் திட்டத்தை நிறைவேற்றிக் கொள்ள சூனியன் தயாராகிறான். அரசியார் வருகை குறித்து இரகசியமாக வைக்கப்பட்டிருக்கும் தகவலை கசிய விடுகிறான். ஆனால், விதியோ சூனியன் விசயத்தில் சதிராட்டத்தை ஆரம்பிக்கிறது. அவனுக்குத் தரப்பட்ட வேலையை முழுமையாக செய்ய இயலாமல் போவதால் குற்றவாளியாக்கப்படுகிறான். மரண கப்பலுக்கு ஏற்றப்படுகிறான். சில அத்தியாயங்களுக்கு முன் நின்ற கேள்விக்கு விடை கிடைத்து விட்டது.

கோவிந்தசாமிக்காக கரையும் நிழல் வெண்பலகையில் சாகரிகா எழுதுவது கட்டுக்கதை என்பதை எப்படியும் இந்நகர மக்களுக்குச் சொல்ல சூனியனிடம் உதவி கேட்கிறது. அது சாத்தியமில்லை எனக் கூறும் சூனியன், சாகரிகா எழுதுவதெல்லாம் பொய். குறிப்பாக தன் குஞ்சு மேட்டர் குறித்து எழுதியதெல்லாம் அபாண்டம் எனக் கடுமையான மறுப்பை கோவிந்தசாமியே எழுதியதைப் போல வெண்பலகையில் வெளியிட வைக்கிறான். நீலநகர மொழி தெரியாமல் எங்கோ ஒரு பூங்காவில் கிடக்கும் கோவிந்தசாமி பெயரில் எப்படி வெளியிட முடியும்? அதற்கு சூனியன் செய்த தந்திரம் என்ன? என்பது புது திருப்பம். கோவிந்தசாமி, அவன் நிழல் நிகழ்த்தப்போகும் நிகழ்வுகள் வரும் அத்தியாயங்களை சுவராசியமாக்கும் என நினைக்கிறேன்.

மகாமகம், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு, மக்கள் சேவையே மகேசன் சேவை(!) என இயங்கிய அரசு இயந்திரம் போன்ற கால நிகழ்வுகளோடு, சமூகவலைத்தளம், அதில் தோழிகள் அள்ளும் “லைக்”, முகநூல் போராளிகளின் உக்கிரம், ஃபேக் ஐ.டி போன்றவைகளையும் கலந்து கட்டி இன்னொரு நகரில் நிகழ்த்திக் காட்டுகிறார்.

தன் பாவங்களைக் கழுவிக்கொள்ள எவ்வளவு பேர் குழுமியிருந்தார்கள் என்பதை  “எங்கெல்லாம் ஆறடி நிலம் இருந்ததோ அங்கெல்லாம் யாராவது ஒருவர் படுத்திருந்தார். எங்கெல்லாம் இரண்டடி இடம் இருந்ததோ அங்கெல்லாம் ஒருவர் அமர்ந்திருந்தார் என்றும், பெண்களிடம் ஒரு விசயம் சொன்னால் அது எப்படி தீயாய் பரவும் (பெண் வாசகிகள் கவனிக்க) என்பதை ஏழு நிமிடத்தில் அந்த செய்தி நகரம் முழுக்க பரவி விடுகிறது என்றும் பத்திகளாய் விரிக்காத வரிகளில் சொல்லி விடுகிறார்.

No comments:

Post a Comment