Wednesday 30 June 2021

தயக்கத்தின் மீதான வெறுப்பு!

மிக முதிர்ந்த ஒரு பெரியவர் அறுவைசிகிச்சைக்குப் பின்னர் அணிவதற்கான கண்ணாடியை வாங்க மருத்துவரின் சீட்டோடு எனக்கு முன் அமர்ந்திருந்தார். அவருக்குத் துணையாய் எவரும் வந்திருக்கவில்லை! சீட்டைப் பார்த்து விட்டுக் கடையில் இருந்த பெண்மணி, "650 ரூபாய் ஆகும் தாத்தா" என்றார்.

அவரோ நடுங்கும் விரல்களோடும், குரலோடும் "அவ்வளவு காசு இல்லையேம்மா. குறைய எதுவும் முடியாதா?" என்றார்.

அப்படின்னா தூரப் பார்வை கண்ணாடி போட முடியாது தாத்தா என அந்தப் பெண் சொன்னதும், "எனக்குப் படிக்கிறது முக்கியம். அதுனால தூரப் பார்வைக்கு எல்லாம் வேணாம். வாசிக்கிற மாதிரி செஞ்சு கொடுத்தா போதும்" என்றார். அப்படின்னா 350 ரூபாய் ஆகும் தாத்தா என்று அந்தப் பெண் சொன்னதும். "இருமா என்றபடி தன் உள் சட்டைப் பையில் இருந்த பர்சை எடுத்துப் பார்த்தார். அதில் 400 ரூபாய் இருந்தது. சரிம்மா. அதையே கொடு. ஆனால், வாசிக்கிற மாதிரி கண்ணாடியா போட்டுக் கொடுத்துடு என்பதை மீண்டும், மீண்டும் அழுத்திச் சொல்லிய படியே பணத்தை எடுத்து நடுங்கும் விரல்கள் வழியே நீட்டினார்".

கூடுதல் 300 ரூபாயைக் கொடுத்து டாக்டர் எழுதிக் கொடுத்ததையே வாங்கி்க் கொள்ளுங்கள் எனச் சொல்லலாம் என நினைத்தாலும் "எதுவும் சொல்லி விடுவாரோ" என்ற தயக்கம் அப்போதைக்கு அவரிடம் என்னைக் கேட்க விடாமல் செய்து விட்டது.

எந்தத் துணையுமில்லாமல் அறுவை சிகிச்சைக்கு வந்திருப்பவருக்கு வாழ்க்கைத் துணையாவோ, வாழ்வின் எஞ்சிய பொழுது போக்காகவோ வாசிப்பு மட்டுமே இருக்கிறதோ? என்று என்னுள் எழும் கேள்வி அப்போதிருந்த என் தயக்கத்தின் மீது வெறுப்பைத் தந்த படியே இருக்கிறது.

No comments:

Post a Comment