Wednesday 23 June 2021

விண்ணைத் தொடுவோம் – மனதைப் புரட்டும் சாவி!

தமிழில் தன்னம்பிக்கை நூல்களை தொடர்ந்து வாசிப்பதில் இருக்கும் பெரும் துயரம் என்னவென்றால் ஒரு புத்தகத்தில் வாசித்த கதையோ, நிகழ்வோ, சம்பவங்களோ, உதாரண புருஷர்களின் வாழ்வியலோ வடிவம் மாறாமல் அப்படியே பெரும்பாலான புத்தகத்தில் இடம் பெற்றிருக்கும். அடடா…….முன்பே வாசித்தது தானே என அடுத்த பக்கத்திற்கு மனம் சட்டென நகர ஆரம்பித்துவிடும். இந்த நகர்தலில் சம்பந்தப்பட்ட நூலாசிரியர் சொல்ல வரும் வழிகாட்டலையும், ஆலோசனைகளையும் கவனிக்காமல் கடந்து போய்விடுவோம். இந்த நிலை பெரும்பாலும் ஆங்கிலத்தில் எழுதப்படும் தன்னம்பிக்கை நூல்களில் நிகழ்வதில்லை. காரணம், ஆங்கிலத்தில் தன்னம்பிக்கை நூல்களை கள ஆய்வுகள் செய்து எழுதுகிறார்கள். கள ஆய்வுக்காகவும், ஜெயித்தவர்களை நேரில் சந்தித்து அவர்களுடைய அனுபவங்களை தங்கள் நூல்களில் பதிவு செய்வதற்காகவும் ஆண்டுக்கணக்கில் கத்திருந்து எழுதுகிறார்கள். அதனாலயே ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு மொழிமாற்றமாகி வரும் தன்னம்பிக்கை நூல்கள் சக்கை போடு போடுகின்றன. ஆனால், தமிழில் எழுதப்படும் இப்படியான நூல்கள் நிர்ணயிக்கப்பட்ட வடிவத்தை கொண்டிருக்கும். அந்த வடிவம் வாசித்து, வாசித்து சலித்துப் போனதாகவே இருக்கும். இப்படியான சூழலில்விண்ணைத் தொடுவோம்என்ற இந்நூலில் இடம் பெற்றிருக்கும் ஆசிரியரின் ஆலோசனைகளும், அவர் கொடுக்கும் தன்னம்பிக்கைகளும் பக்கங்களைக் கடந்து போகாத மனநிலையை ஓரளவுக்குத் தருகிறது. கண்ணதாசன் பதிப்பக வெளியீடாக வந்திருக்கும் இந்நூலின் ஆசிரியர் . வசந்தகுமார்.

இத்தொகுப்பில் இருக்கும் பதினெட்டு தலைப்புகளையும் தொகுத்து ஒரு முறை வாசித்தாலே அது உறைந்து கிடக்கும் மனதை கொஞ்சம் புரட்டிப் போட வைத்து விடும். சிறு நிகழ்வோடும், கதையோடும், உண்மைச் சம்பவங்களோடும், ஜெயித்தவர்களின் வாழ்வியலோடும் தொடங்கும் ஒவ்வொரு கட்டுரையிலும் ஆசிரியரின் ஆலோசனைகள், நம் மனதிற்கு அவர் வார்த்தைகளால் கொடுக்கும் உற்சாகமும், நம்பிக்கைகளும் புதியதொரு தொடக்கத்திற்குள் நுழைபவர்களுக்கு உந்துதலை நிச்சயம் தரும்.

புத்தகத்தில் சொல்லப்பட்டிருப்பவைகள் மனதிற்குள் மந்திரசாவியாய் நுழைந்து தூண்டலைத் தருகிறது. அது துலங்க வேண்டுமானால் வெறும் தன்னம்பிக்கை நூல்களின் வாசிப்பு மட்டும் போதாது. விண்ணைத் தொட விடா முயற்சியும், தீரா ஈடுபாடும் வேண்டும் என்பதையும் உணர வேண்டும். உணர்ந்தால் உயர்வு நிச்சயம். வெற்றி சாத்தியம்.

No comments:

Post a Comment