Wednesday, 12 January 2022

கட்டப்பொம்மனும் கலெக்டர் ஜாக்சனும் - திருப்பம் தந்த சந்திப்பு!

ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு எதிராக முதல் எதிர்ப்புக்குரல் எழுப்பியவனாகவும், ஆங்கிலேயர்களுக்கு கப்பம் கட்டி நின்ற கொள்ளைக்காரனாகவும் இருவேறு அடையாளங்களாக நமக்கு கட்டப்பொம்மனின் வரலாறு வாசிக்கக் கிடைக்கிறது. இவ்விரு அடையாளங்களும் சமகால வரலாற்றாசிரியர்களால் முன் வைக்கப்பட்டிருக்கிறது என்பது சுவராசியம்! கட்டப்பொம்மனுக்கு ஆதரவாகவும், எதிராகவும் வராலாற்றாய்வாளர்கள் இரு கிளைகளாக பிரிந்து நின்றனர். நிற்கின்றனர். அந்த வகையில் கட்டப்பொம்மனை முதல் எதிர்ப்புக்குரலுக்குச் சொந்தக்காரனாக ஏற்று வந்திருக்கும் இந்நூலின் ஆசிரியர் செ. திவான்.

பிறப்பின் அறிமுகத்தில் தொடங்கி கயத்தாறு கட்டை புளிய மரத்தில் முடியும் வரையிலான இத்தொகுப்பின் தன் ஏற்புரைக்கு இன்னும் வலிமை சேர்க்க ஏதுவாக கட்டப்பொம்மனின் புகழ் பரப்பிய முன்னோடிகளை நூலின் முன் பக்கங்களிலேயே ஆசிரியர் வரிசைப்படுத்தி விடுகிறார்.

கட்டப்பொம்மனின் வரலாற்றை கலெக்டர் ஜாக்சனின் வருகைக்கு முன், வருகைக்கு பின் என இரண்டாகப் பிரிக்கலாம். வரிவசூலில் ஜாக்சன் காட்டிய கடுமையும், அதன் பொருட்டான தொடர் நிகழ்வுகளும், குறிப்பாக இராமநாதபுரம் இராமலிங்க விலாசத்தில் கட்டப்பொம்மன் - ஜாக்சன் சந்திப்பின் போது நிகழ்ந்த சம்பவங்களுமே கட்டப்பொம்மனை ஆங்கிலேயர்களுக்கு எதிரான கூட்டணிக்கு வரவைத்தது.

கட்டப்பொம்மனின் வாழ்வில் மிகப்பெரிய திருப்பத்தை உருவாக்கி சுதந்திர வீரனாக அடையாளம் காட்ட வைத்த அந்த நிகழ்வு சார்ந்த வரலாற்றுப் பதிவின் வழி அவனுக்கு எதிராக முன் வைக்கப்பட்ட தரவுகளுக்கும், வாதங்களுக்கும் இந்நூலில் ஆசிரியர் பதில் சொல்லி இருக்கிறார். ஜாக்சனுக்கும், கட்டப்பொம்மனுக்குமான கடித பரிமாறல்கள் வழியே நகரும் இத்தொகுப்பு கட்டப்பொம்மனை தூக்கி நிறுத்தும் எண்ணற்ற நூல்களின் வரிசைகளில் இன்னொரு எண்ணிக்கை கொள்கிறது.

கட்டப்பொம்மன் என்றாலேவானம் பொழிகிறதுவசனமும் (அந்த வசனத்தை கட்டப்பொம்மன் பேசியதற்கான சான்றுகள் வரலாற்றில் இல்லை) நடிகர் சிவாஜிகணேசனும் நம்மில் பலருக்கும் நினைவுக்கு வருவது எதார்த்தம் என்பதை மறுப்பதற்கில்லை. அதற்காக அட்டைப்படத்தில் கட்டப்பொம்மனை அடையாளப்படுத்த சிவாஜிகணேசனை பயன்படுத்தி இருப்பதை ஏனோ மனம் ஒப்பவில்லை.

கட்டப்பொம்மன் என்ற பாளைய வீரனின் சித்திரத்தை நிழல் பிம்பத்தில் இருந்து தான் பெற வேண்டியிருக்கிறது என்னும் அவலத்தை என்னவென்பது?


 

No comments:

Post a Comment